17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு.

இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர்.

இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி இந்நூலைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.

சிக்கல் சிங்காரவேலன், நண்பரின் மனைவி, சாய் பாபா லீலைகள் உள்பட பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு காந்தா என்ற அன்புக்குரிய துணைவியாரும், மலர்க்கொடி சுகுமாரன், மண்டோதரி பிரசாத் என்ற மகள்களும், புகழேந்தி-கயல்விழி என்ற மகன் மருமகளும் உள்ளனர்.

விவரம் தெரிந்த நாளிலிருந்து தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டரான இவர் தமது 88 ஆவது வயதில், அமைதியாக தன் இறுதி மூச்சை இல்லத்திலேயே முடித்துக்கொண்டவர். 5.1.2014 மாலை 3.45 வரை தம் கொள்கையிலிருந்து வழுவாத சிங்கமாக வாழ்ந்தார் என்பதுதான் இவர் பெருமை.

(மலர்க்கொடி சுகுமாரன்- திருவாரூர் தங்கராசு அவர்களின் மூத்த மகள்)

“பெரியாருக்கே சேரும்!”

“எனக்கு அளிக்கப்பட்ட பெருமை, சிறப்பு அனைத்தும் பெரியார் ஒருவருக்குத் தான் சேரும். பெரியாரின் கருத்துகளைத் தான் நான் அவரது எளிய தொண்டன் என்ற முறையில், என்னால் இயன்ற அளவில் பரப்பி வந்திருக்கிறேன். எனது பணியைப் பாராட்டி விழா எடுக்கும்போது, அரசு அலுவலர்கள், பணி ஓய்வு பெறும் போது விழா எடுப்பதுபோல், ஒரு வேளை, உனது பணி போதும் என்று கூறி விழா எடுக்கிறார்களோ என்றுகூட தோன்று கிறது” என்று குறிப்பிட்டபோது, அருகில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘அப்படி நாங்கள் கருதவில்லை’ என்று கூறவே, ‘மகிழ்ச்சி எனது பணி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள்’ என்று திருவாரூர் தங்கராசு கூறினார். அதை ஆதரிக்கும் வகையில் கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.

– ஜூன் 14, 2008இல் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் திருவாரூர் தங்கராசு

You may also like...