125 ஆவது பிறந்த நாள் நினைவாக சரித்திரம் படைத்த சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர். இந்தியா வுக்கான பிரிட்டிஷ் அமைச்சரின் செயலாளராக தேர்வு பெற்று லண்டன் பயணமானபோது தமிழ்நாடு விடுதலைக்கான முயற்சிகளைத் தொடங்கி விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், நடந்ததோ வேறு. சர். ஏ.டி. பன்னீர் செல்வத்தின் 125 ஆவது பிறந்த நாள் நினைவாக அவரது வரலாற்றுச் சுருக்கம் வெளியிடப்படுகிறது.

சர். ஏ.டி. பன்னீர்செல்வம், அய்ம்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தென்னகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றவர். கடைசியாக இவருக்குக் கிடைத்த இந்தியா மந்திரியின் ஆலோசனையாளர் பதவியினை இவர் ஏற்றுத் தாயகம் திரும்பியிருப்பாரேயானால் தென்னகத்தின் – திராவிடத்தின் – தமிழகத்தின் அரசியலே வெகுவாக மாறியிருக்கும். ஆனால், என்ன செய்வது? இயற்கையும் தமிழர்க்குப் பகையாயிற்று. ஆம்! தமிழர்களை வஞ்சித்துவிட்டது!

யார் – இந்த பன்னீர்செல்வம்?

திருவாரூர் – நன்னிலம் பாதையில் செல்வபுரம் என்ற ஊர், பெயருக்கேற்றபடி இன்றும் திகழக் காணலாம். இவ்வூரில் 1888 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாள் சர். செல்வம் பிறந்தார். இவர் பார்க்கவ குலம் – உடையார் வகுப்பைச் சேர்ந்த இந்தியக் கிறித்தவர். இவர் தந்தையார் பெயர் தாமரைச் செல்வம். இவருடைய நெருங்கிய உறவினர்கள் இன்னமும் இந்துக்களாகச் – சைவப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சர். செல்வத் தினுடைய நெருங்கிய உறவினர்கள் தீபங்குடி, பெரும் பண்ணையூர், செல்வபுரம், சென்னை போன்ற ஊர் களில் வாழ் கின்றனர்.

சர். செல்வம், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி யில் கல்வி பயின்ற வர். பின்னர் இலண்டன் சென்று கிரேஸ் கின் நிலையத்தில் பார்-அட்-லா பட்டம் பெற்றார். 1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்தி லிருந்து தாயகம் திரும்பினார். தஞ்சைப் பெரும் பண்ணையூர்ப் பெருநிலக்கிழார் முத்துசாமி உடையாரின் மகளை சர். செல்வம் திருமணம் செய்து கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் வழக்கறிஞர் தொழிலில் சர். செல்வம் ஈடுபடலானார்.

நீதிக்கட்சியால் கவரப்பட்டு அதில் பங்கு கொண்டு உழைக்கலானார்.  அவரின் கட்சி ஈடுபாடு தொடங்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் வரையும் நீதிக்கட்சிக்காரராகவே வாழ்ந்து, பணி யாற்றி மறைந்தார். அந்நாள்களில் தஞ்சை  மாவட் டத்தில் நீதிக்கட்சி மாநாடுகளானாலும், பார்ப்பன ரல்லாதார் மாநாடுகளானாலும், தமிழர் மாநாடு களானாலும் சர். செல்வம் இன்றி நடைபெற்றதில்லை.

1918 ஆம் ஆண்டு தஞ்சையில் ஒரு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்குப் பிட்டி தியாகராயரும், டாக்டர் நாயரும் வந்திருந்தனர். மாநாடு முடிந்து மறுநாள் சர். தியாகராயர் தஞ்சையைச் சுற்றிப் பார்க்க விரும்பினார்.

சர். செல்வம் தியாகராயரை கோச் வண்டியில் ஏற்றிக் கொண்டு நகரைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டே வந்தார். ஓரிடத்தில் சக்கரம் பள்ளத்தில் புதையுண்டு போயிற்று. சர். செல்வம் கீழே இறங்கிப் புதையுண்ட சக்கரத்தைத் தம் தோள்களால் தாங்கிக் ‘கோச்சை’ ஓடச் செய்தார். இதனைக் கண்ட பிட்டி தியாகராயர், சர். செல்வத்தின் பண்பைக் கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துதல் வீண் போகவில்லை. பதவிகள் அவரைத் தேடித் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது நல்ல தொடக்கமாக விளங்கியது. அதனைத் தொடர்ந்து தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்

சர். செல்வம் வாழ்நாள் உறுப்பினராகத் தம்மை இணைத்துக் கொண்டார். உமா மகேசுவரனாரோடு இணைந்து தஞ்சை மாவட்டத்தில்  பல பணிகளை அவர் செய்தார். அவற்றில் முதன்மையானது திருவையாற்று அரசர் கல்லூரியில் தமிழ்மொழிக்கு இடம் கிடைக்கச் செய்தது ஆகும்.

திருவையாற்றில், காவிரியின் வடகரையில் ஒரு பெரிய மூன்று மாடிக் கட்டடத்தை அமைத்து, அங்கே சமஸ்கிருதம் மட்டும் கற்பிக்கும் பாட சாலையை நடத்தி வந்தனர். இப்பாடசாலையால் பார்ப்பனர்கள் மட்டுமே பயன் அடைந்து வந்தனர். இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பார்ப்பன மாணவர்கள் சமஸ்கிருத இலக்கண, தருக்க நூல்களைக் கற்றுக்கொண்டு வந்தனர். அரசர் கல்லூரியில் சமற்கிருதம் மட்டும் போதிக்கப்பட ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று ஆராய்ந்தபோது (சரபோஜி) அரசர் வடமொழியில் எழுதிய சாசனத்தில் வடமொழி மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என எழுதியுள்ளதாகப் பார்ப்பனர் சாதித்து வந்தனர்.

தமிழவேள் உமா மகேசுவரன் அவர்கள், சாசனத்தை ஞானியாரிடம் காட்ட அவர், “கல்வி நலனுக்கென்று” எழுதப்பட்டிருப்பதாகக் கூற, அதன் பிறகே உமாமகேசுவரன் அவர்கள், தி. செல்வகேச வராய முதலியார் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆறாவது விழாவின்போது, ‘வடமொழிக் கல்லூரியில் தமிழையும் முதன்மைப் பாடமாக வைத்து நடத்த ஆட்சியருக்கும், மாவட்டக் குழுவுக்கும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்.

இத் தீர்மானத்தைச் செயல்படுத்த மாவட்டக் குழுத் தலைவராக சர். செல்வம் இருந்தார். திருவை யாற்றுக் கல்லூரியில் சமஸ்கிருதத்தோடு தமிழும் கற்பிக்கப்படலாயிற்று. இதனால் பலத்த எதிர்ப்புகள் ஏற்பட்டன.

(மீதி அடுத்த இதழில்)

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...