46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

கோவையில் காதலர் திருவிழா

கோவையில் பிப்.14 அன்று காதலர் திருவிழா, காலை தொடங்கி மாலை வரை கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.  காந்திபுரம் ‘பாத்திமா சர்ச்’ கலை அரங்கில் நடந்த இந்த கொண்டாட்ட விழாவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான ஜாதி மத எதிர்ப்பு காதல் மணம் புரிந்தோர் நலச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுடன், தமிழ்நாடு திரைக் கலைஞர் அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர் களும் தோழியர்களும் பெருமளவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்த பல இணையர்கள் விழாவில் பங் கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். பகல் 11.45 மணியளவில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்புடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.

‘சன்’ தொலைக்காட்சி வி.ஜெகன் குழுவினர் பல குரல் நிகழ்ச்சி, கோவை பிரியாவின் கரகாட்டம், நாட்டுப் புற கலைஞர் செந்தில் கிராமிய நிகழ்ச்சி, ரெஜிதாவின் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடந்த வாழ்த்தரங்கத்துக்கு கழக மாநகர மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் தமிழ்ச் செல்வி, கா.சு. நாகராசு (த.பெ.தி.க.), வழக்கறிஞர் வெண்மணி (தமிழர் விடுதலை இயக்கம்), சாந்தகுமார் (தோழமை அறக்கட்டளை) ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமங்களை வலியுறுத்தி யும், ஜாதியத்தின் கேடு, தீண்டாமை ஒடுக்குமுறை, பார்ப்பன மனு சாஸ்திரம் திணிக்கும் இழிவுகள் குறித்து உரையாற்றினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிற்பகல் 2 மணியளவில் அனைவரும் பிரியாணி உணவு விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் விழாக் கொண் டாட்டங்கள் தொடங்கின. ஜாதி மறுப்பு மணம் புரிந்த 46 இணையர் களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியின் நிறைவாக கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் வரவேற்புரை யாற்றினார். தோழர்கள் சித்ரா, ‘மது பானக் கூடம்’ திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணன், திரைப்படப் பாடலாசிரியர் சினேகன், வழக்கறிஞர் கார்க்கி (சமத்துவ முன்னணி), பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராஜ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், கழகத் தோழரின் ஜாதி மத மறுப்புத் திருமணம் மேடையில் பலத்த ஆரவாரம் கைதட்டலுடன் நிகழ்ந்தது. கழகச் செயல்வீரர் விக்னேஷ் (கோவை காளியாபுரம் கிட்டுச்சாமி-பாப்பாத்தி மகன்), ருக்சனா (கோவை சிங்கா நல்லூர் நிஜாம்-சைனா ஆகியோரின் மகள்) ஆகியோர் ஜாதி மத மறுப்பு மண விழாவை பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார்.  மணமக்கள் சார்பில் கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப் பட்டது. மாலை 5 மணியளவில் விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பெரியார் முழக்கம் 20022014 இதழ்

You may also like...