நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன.

தீட்சதர்கள் – இந்து மதத்துக்குள்ளேயே தனிப் பிரிவினர். இவர்களின் உரிமைகளை அரசி யலமைப்புச் சட்டத்தின் 26 பிரிவு உறுதி செய்கிறது. எனவே, தீட்சதர்கள், தில்லை நடராசன் கோயிலை நிர்வகிக்கும் உரிமையில் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு, பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பு ஆயுதமாக இருந்து வருகிறது. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் எரிக்கப்பட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்று. சமணர்கள் தனிப் பிரிவாக இருந்தாலும்கூட, சமணக் கோயில்கள், இந்து சட்டத்தின் கீழ்தான் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் ‘முன் குடுமி’ ஒன்றைத் தவிர, ஏனைய ஸ்மார்த்தப் பார்ப்பனர்களைப் போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தீட்சதப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்து, தங்களை “பிராமணர்கள்” என்றுதான் அறிவித்துக் கொள்கிறார்கள். கோயிலுக்குள் ‘ஓதுவார்’ சூத்திரர்கள் தேவாரம் பாடினால் தீட்டாகிவிடும் என்று பார்ப்பன புரோகிதர்கள் கூறுவதைத்தான் பின்பற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் ‘தனிப் பிரிவினர்’ என்று வாதாடுவதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதுதான் வியப்புக் குரியது. ஒரு அடிப்படையான கேள்வி எழுந் துள்ளது. பொது மக்கள், பக்தர்கள் வழிபடக்கூடிய கோயில் எப்படி ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கு பிறப்பின் அடிப்படையில் சொந்தமாக்கப்படுகிறது என்பதுதான் அந்தக் கேள்வி! ‘உறவுக் கலப்பு’ எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போதும் தீட்சதர்கள் தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே “பால்ய விவாகங்களை” – அதாவது குழந்தைத் திருமணங்களை நடத்தி வருகிறார்கள். சட்டம் இந்த குற்றங்களைத் தடுப்பதில்லை.

கோயில்கள் கலாச்சாரத்துக்கான பொதுவிடம் என்றும், பாரம்பர்ய சின்னம் என்றும் பெருமை பேசும் பார்ப்பனர்கள், இந்தக் கோயில்களை தனிமைப்படுத்துவதும், சீர்திருத்த நடவடிக்கை களிலிருந்து ஒதுக்கி வைப்பதும் எப்படி நியாய மாகும்?

கோயில்கள் அரசு கட்டுப்பாட்டின் கீழ் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதுமே உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் நாத்திக ஆட்சி கோயில் நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக இராமகோபாலன், சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனர்கள் அலறுகிறார்கள். தில்லை நடராசன் கோயிலைக் கட்டியது தீட்சதர்கள் அல்ல; ஆனால், கோயில் வழிபாட்டு உரிமை, நிர்வாக உரிமை இரண்டும் தீட்சதப் பார்ப்பனர்களிடமே இருக்க வேண்டும் என்று பதறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியும் இதற்குத் துணைப் போகிறது.

தமிழ்நாட்டில் டி.எஸ்.எஸ். ராஜன் என்ற பார்ப் பனர், ஆச்சாரியார் அமைச்சரவையில் இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது, கோயில்கள் அனைத்தும் அரசு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை டி.எஸ்.எஸ். ராஜன் பார்ப்பனரும் வலியுறுத்தினார்.

1817 ஆம் ஆண்டு முதன்முதலாக கோயில்களில் நடக்கும் முறைகேடுகள், கொள்ளைகளைத் தடுக்கும் நோக்கத்தோடு சட்டம் இயற்றப்பட்டது. கோயில்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளில் அரசு தலையிட்டு நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு என்ற நோக்கில் அறநிலையத் துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதே, பார்ப்பனர் தரப்பில் கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. 1888 இல் அதாவது சட்டம் வந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர, 6 ‘இந்து’க்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. டி. முத்துசாமி அய்யர், வி.பாஷ்யம் அய்யங்கார் உள்ளிட்ட வைதீகப் பார்ப்பனர்களைக் கொண்டிருந்த அந்தக் குழு, கோயில்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அவசியம் என்று கருத்து தெரிவித்தது. அப்போது பார்ப்பனர் களின் குரலாக வெளிப்படையாக ஒலித்து வந்த ‘இந்து’ நாளேடும் கோயில் முறைகேடுகளைத் தடுக்க, அரசின் தலையீடு தேவை என்றே வலியுறுத்தியதோடு, அரசின் தலையீட்டை எதிர்ப்பவர்களை திருடர் களுடன் ஒப்பிட்டு எழுதியது.

“குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதை திருடர்கள் எதிர்ப்பதுபோல்தான். கோயில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டங்களை எதிர்ப்பவர்களும் ஆவார்கள்” என்று எழுதியது ‘இந்து’ ஏடு. அப்போதே தில்லை தீட்சதப் பார்ப் பனர்கள் தில்லை நடராசர் கோயில் தனியாருக்கு உரிமையானது என்று அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் மதச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று வாதிட்டனர். (பிரிவு 25, 26 – இதுவும் பெரியார் எரிக்கச் சொன்ன அரசியல் சட்டப் பிரிவுகளாகும்).

உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கஜேந்திர கட்கர், பல முற்போக்கான தீர்ப்புகளை கோயில் வழக்குகளில் வழங்கியவர். “ஒரு குடிமகனின் மதச் சார்பற்ற உரிமைகளிலும், சமூக பொருளாதார அமைப்புகளை மாற்றியமைக்கக் கூடிய அரசுக்கான அதிகாரங்களிலும் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் மதத்தின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. அரசு தலையிட உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்தார்.

1962 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வும், மத நடவடிக்கைகளையும் நிர்வாக நடவடிக்கைகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியது. அப்படிப் பிரித்துப் பார்க்கா விட்டால் மதத்தோடு தொடர்பில்லாத மதச்சார்பற்ற செயல்பாடுகளுக்கும் மதச் சாயம் பூசப்பட்டு விடலாம் என்றும் எச்சரித்தது.

2009 இல் சென்னை உயர்நீதிமன்றம் தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதை ஏற்று தீர்ப்பளித்தது கோயிலுக்கு உரிமையான 400 ஏக்கர் நிலத்தையும் பக்தர்கள் காணிக்கையாக தரும் நிதியையும் அரசு தலையிட்டு சரி செய்வது தவறாகாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

கோயிலுக்குள் தீண்டப்படாத மக்கள் நுழையவே அனுமதி மறுத்ததை எதிர்த்து சுயமரியாதை இயக்கம்தான் முதன்முதலில் கோயில் நுழைவுப் போராட்டங்களை 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி நடத்தியது 1939 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டத்துக்குப் பிறகு கோயில் கதவுகள் சட்டரீதியாக தீண்டப்படாத மக்களுக்கு திறந்து விடப்பட்டன. ஆனால் கோயில் நுழைவு உரிமைகளையே பார்ப்பன புரோகிதர்கள் எதிர்த்தார்கள். அப்போது அவர்கள் முன் வைத்த வாதம் கோயில் பிரச்சினையில் அரசு தலையீடு கூடாது என்பதுதான்.

கருநாடகத்தில் மூல்க்கி பெட்டா எனுமிடத் திலுள்ள வெங்கட்ராமன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் பார்ப்பனர்கள், தாங்கள் “தனிப் பிரிவினர்” என்ற அடிப்படையில் கோயிலுக்குள் தீண்டப்படாத மக்களை அனுமதிக்க மறுப்பது தங்களுக்கு அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு வழங்கியுள்ள உரிமை என்று வாதிட்டனர். நீதிமன்றம் இதை ஏற்க மறுத்துவிட்டது.

அனைத்து சாதியினரும் உரிய பயிற்சிப் பெற்று, அர்ச்சகராக முடியும் என்ற தமிழக அரசின் சட்டத்தை பார்ப்பனர்கள் எதிர்த்து நீதிமன்றம் சென்று தடைப்படுத்திவிட்டனர். 1987 இல் ஆந்திர உயர்நீதிமன்றம் அர்ச்சகர் வேலைக்கு பரம்பரை உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்ததோடு, திருமலை திருப்பதி கோயிலில் பரம்பரை அர்ச்சகர் உரிமையை நிறுத்துமாறு உத்தரவிட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார்கள். “நாங்கள் வைகாச ஆகமப் பிரிவைச் சார்ந்தவர்கள். திருப்பதி திருமலை கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்படும் ஆகமமுறை இதுதான். அத்தகைய பூஜை முறை எங்களுக்கு மட்டுமே உரித்தானது. நாங்கள் கோயிலில் அர்ச்சகராக பதவி காரணமாக இருப்பவர்கள் அல்ல. மதப் பழக்கத்திலிருந்து பிரிக்க முடியாமல் மதத்தோடு இணைந்து நிற்பவர்கள்” என்று வாதிட்டனர். உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. கோயில் சடங்குகள்தான் மதத்தோடு தொடர்புடையதே தவிர, சடங்குகளை நடத்துகிற நபர்கள் மதத்தோடு, பிரிக்க முடியாமல், பிணைந்து கிடப்பவர்கள் அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. உரிய தகுதி உள்ள எவரும் திருப்பதியில் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தது.

தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகருக்கான பயிற்சி அளித்து, அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்து 2006 ஆம் ஆண்டு பிறப்பித்த நிர்வாக ஆணையை பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று தடையாணை வாங்கிவிட்டார்கள்.

பார்ப்பனரல்லாத சைவர்கள், தில்லை கோயிலில் கர்ப்பக்கிரகம் அருகே நின்று தேவாரம் பாடுவதை தீட்சதர்கள் அனுமதிப்பதில்லை. இதற்கு தீட்சதப் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தின் வழியாக தடையாணை பெற்றனர். அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. 2008 இல் ஓதுவார்கள், தேவாரம் ஓத அரசு ஆணை யிட்டும் தீட்சதர்கள் அதை ஏற்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

1960 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக் கப்பட்ட இந்து அறநிலையத்துறைக்கான ஆணையம், தென்னாட்டில் கோயில்கள் அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு தான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டியதோடு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

ஏற்கனவே பின்பற்றப்பட்டுவரும் மதப் பழக்க வழக்கங்களில் சட்டங்கள் தலையிடவே கூடாது என்பது அல்ல. சீர்திருத்தங்கள் எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அரசு தலையிட முடியும். இந்தச் சூழலில் அரசியல் சட்டத்தின் 26 பிரிவும் மாற்றத்துக்குரியதே என்று கூறியிருக்கிறது.

கோயில்களின் சிலைகளுக்கே மந்திரத்தால் சக்தியைத் தரும் உரிமை தங்களுக்கே என்று கூறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் கோயில்களின் நிர்வாகத்தில் அரசு குறுக்கிடவே கூடாது. அது தங்களுக்கான தனிச் சொத்து என்று கூறுவதும், அதை உச்சநீதிமன்றங்கள் ஏற்பதும்தான் – இப் போதும் தொடரும் நிலை. எத்தனை சட்டங்கள் வந்தாலும் பார்ப்பனர்கள் ‘செரிமானம்’ செய்து ஏப்பம் விடும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண் டிருக்கிறோம். பார்ப்பனர்கள் ஆதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள் சிந்திக்க வேண்டும்.   – இரா

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...