2000 பார்ப்பனர்கள் வேதம் ஓத 20 கோடி செலவில் யாகமாம்! யாக சாலை தீ பிடிக்க தலைதெறிக்க ஓட்டம்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பார்ப்பன கொத்தடிமையாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். முதல்வரானவுடன் வாஸ்து பண்டிதர் ஒருவரை முதல்வரின் ஆலோசகராகவே நியமித்துக் கொண்டார். முதல்வர் அலுவலகத்தை பல கோடி அரசுப் பணத்தைப் பாழடித்து வாஸ்து அடிப்படையில் மாற்றினார்.
இப்போது தனது சொந்த கிராமமான ஏரவெல்லி கிராமத்தில் 5 நாள் யாகம் நடத்தியிருக்கிறார். பல்வேறு மாநிலங்களிலிருந்து 2000 பார்ப்பனர்கள் ஒன்றுகூடி, இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். உலக நன்மைக்காகவும் எதிரிகளை வீழ்த்தவும் நடத்தப்படும் இந்த யாகத்தின் பெயர் ‘ஆயுத சண்டி மகாயாகம்’. இதற்கு தனது சொந்தப் பணத்தையே செலவிடுவதாக முதல்வர் கூறுகிறார். யாகத்துக்கான செலவு ரூ.20 கோடி என்று ‘தினமலர்’ பார்ப்பன நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ‘அக்னி குண்டத்தில்’ ஒவ்வொரு நாளும் பட்டுப் புடவைகள், அய்ம்பொன் ஆபரணங்கள், உணவு தானியங்கள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆந்திர ஆளுநர் மற்றும் சரத்பவார், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் எல்லாம் ‘யாக சாலை’க்கு வந்து பார்ப்பனர்களிடம் ‘ஆசி’ பெற்றார்களாம்.
கடைசி நாளன்று குடியரசுத் தலைவரான பார்ப்பனர் பிரணாப் முகர்ஜியும் வருகை தரவிருந்தார். ஆனால், யாகத்தில் பார்ப்பனர்கள் மூட்டிய ‘அக்னி’, யாக சாலையில் பரவி, எரியத் தொடங்கிவிட்டது. ‘அக்னி’ வழியாக வேத மந்திரங்களை ஓதி ‘ஆண்டவனுக்கு’ காணிக்கைகளை செலுத்தி வருவதாகக் கூறி வந்த பார்ப்பனர்கள்,
தீ பிடித்தவுடன் வேத மந்திரங்களை நிறுத்திவிட்டு பீதியில் அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்களாம். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர். பாதுகாப்பு கருதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் தனது ‘யாக குண்ட’ தரிசனத்தை இரத்து செய்து விட்டார். அவரும் யாக சக்தியை நம்பத் தயாராக இல்லை.
உலக அமைதிக்கு யாகம் வளர்த்தவர்கள், உள்ளூரில்கூட அமைதியை கொண்டுவர முடியவில்லை.
எந்த முறைகேடு, ஊழல்கள் செய்திருந்தாலும் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து, வேதம் ஓதி காப்பாற்றி விடுவார்கள் என்று நம்புகிற மடையர்கள் கூட்டம் நாட்டில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ‘பீப்’ ஆபாசப் பாடல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நடிகர் சிம்புவின் தந்தையான டி. ராஜேந்தர், மகனைக் காப்பாற்ற பார்ப்பனர்களிடம் சரணடைந்துள்ளார். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காகவே காஞ்சிபுரத்தில் வழக்கறுத்தீசுவரர் என்ற கோயில் இருக்கிறதாம். ஜெயலலிதா உள்பட ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பார்ப்பனர்களை வைத்து ‘யாகம்’ நடத்தியிருக்கிறார்கள். இப்போது டி.ராஜேந்தர் இந்த கோயிலுக்கு வந்து மகனைக் காப்பாற்ற பார்ப்பனர்களை வைத்து யாகம் நடத்தியிருக்கிறார்.
ஒழுக்கக்கேடு, ஊழல், கொலை, கொள்ளைகளிலிருந்து குற்றவாளிகளைக் காப்பாற்ற ‘யாகத்துக்கு’ சக்தி உண்டு என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். இதற்குப் பெயர் வேதக் கலாச்சாரம் என்று வெட்கமில்லாமல், பெருமை பேசுகிறார்கள். பார்ப்பன அகராதியில் எல்லாமே இப்படித்தான். ஊழலுக்கோ, ஒழுக்கச் சிதைவுக்கோ, ‘யாகம்’ செய்ய மாட்டோம் என்று எந்தப் பார்ப்பானும் மறுக்கத் தயாராக இல்லை; வெட்கக் கேடு!

பெரியார் முழக்கம் 31122015 இதழ்

You may also like...