மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை
இடஒதுக்கீடு, இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்குத்தான் நீடிப்பது என்று பார்ப்பனர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், மண்டல் பரிந்துரை அமுலாகி 20 ஆண்டுகள் ஓடிய பிறகும், மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக் கூட எட்ட முடியவில்லை. 27 சதவீத இட ஒதுக்கீட்டை எட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டுமோ என்ற கேள்விதான் எழுந்து நிற்கிறது. சென்னை அய்.அய்.டி.யில் படித்து வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பல பட்டங்கள் வாங்கிக் குவித்து வைத்திருப்பவர் முரளிதரன் என்ற விஞ்ஞானி, அய்.அய்.டி. பார்ப்பன மேலாதிக்கத்தை கேள்வி கேட்டவர். அதன் காரணமாக சென்னை அய்.அய்.டி.யில் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை நிர்வாகம் மறுத்துவிட்டது. அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே இந்த விஞ்ஞானி நுழையக் கூடாது என்று அய்.அய்.டி. இயக்குனராக இருந்த பார்ப்பன வெறியர் நடராஜன், நீதிமன்றத்தின் வழியாக தடையாணை வாங்கியிருந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த விஞ்ஞானி, அவ்வப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்களைக் கேட்டு வருகிறார்.
ஜனவரி 1, 2015 நிலவரப்படி மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சகங்களில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஒவ்வொரு துறை அமைச்சகத்துக்கும் அவர் தகவல்களைக் கேட்டார். 40 அமைச்சகம் 48 அரசுத் துறைகளிடம் இது குறித்து தகவல்கள் கேட்கப்பட்டன. இதில் முக்கிய துறையான மனித வளத்துறை தகவல்களை தெரிவிக்கவில்லை. மனித வளத் துறையின் கீழ்தான், மத்திய பல்கலைக்கழகங்களும் அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கிடைத்துள்ள தகவல்களின்படி
ஏ, பி, சி, டி பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் பதவிகள் 79,483. இதில் பிற்படுத்தப்பட் டோர் 9,040 மட்டுமே. (12 சதவீதத்துக்கும் குறைவு)
அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் தகவல் தெரிவிக்கும் கடமைகளைக் கவனிக்கும் துறை, மத்திய வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையாகும் (Department of Personnel and Training). இந்தத் துறையிலேயே பிற்படுத்தப்பட்டோர் 12.91 சதவீதம் மட்டுமே. பட்டியல் இனப் பிரிவினர் 4 சதவீதம்; பழங்குடிப் பிரிவினர் 6.67 சதவீதம்; 6,879 பேர் பணியாற்றும் இந்தத் துறையில் பிற்படுத்தப்பட் டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே கிடக்கின்றன.
குடியரசுத் தலைவருக்கான செயலகத்தில் ‘ஏ’ கிரேடு அதிகாரிகள் நிலையில் ஒரு பிற்படுத்தப் பட்டவர்கூட இல்லை. (1980ஆம் ஆண்டு மத்திய அரசிடம் மண்டல் குழு பரிந்துரை சமர்ப்பித்த அறிக்கையிலேயே குடியரசுத் தலைவருக்கான செயலகத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகூட இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு வரை இதே நிலைதான் நீடிக்கிறது) வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை நடத்தக்கூடிய மத்திய தேர்வாணையத்திலுள்ள 651 பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 9 சதவீதத்துக்கும் குறை வாகவே இருக்கிறார்கள். உயர் கல்வித் துறையில் ‘ஏ’ கிரேடு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 5 சதவீதம் மட்டுமே. ஊழியர்களில் பிற்படுத்தப்பட்டோர் 10 சதவீதத்துக்கும் குறைவு. அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுத் துறையில் 41 ‘ஏ’ கிரேடு பதவிகளில் ஒருவர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர். இடஒதுக்கீட் டுக்கான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் முரளிதரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டு வருகிறார். பல அமைச்சகங்கள், துறைகள் தகவல்களைத் தெரிவிப்பதில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்காத துறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
தகவல்களைக் கேட்டுப் பெற்றுத்தர வேண்டிய வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை செயலாளராக உள்ள ராஜீ சர°வதி என்பவர், இது பற்றிக் கூறுகையில், “இரண்டு முறை நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பி விட்டோம்; துறைகளிடமிருந்து பதில் வரவில்லை” என்று தெரிவிக்கிறார். தகவல் தர மறுக்கும் துறை அமைச்சகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது பற்றி எதுவும் கூற மறுக்கிறார். மத்திய வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான துறை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் மத்திய அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்பது சட்டபூர்வமான கடமையாகும். இதற்கான அரசு ஆணையே இருக்கிறது. (OM No.43011/10/2002-Estt (Res) dated December 19, 2003)
மத்திய உயர் அரசுப் பதவிகளில் ‘நந்தி’களாக அமர்ந்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பதே உண்மை.
பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார வரம்பைப் புகுத்தியதால் ‘கிரிமிலேயர்’ என்ற பிரிவினர் பிற்படுத்தப்பட்டோராக உரிமை கோர முடியாது. 27 சதவீத இடஒதுக்கீட்டில் பாதியளவு கூட நிரப்பப்படாத நிலையில் ‘கிரிமிலேயர்’ என்ற வடிகட்டும் முறையே தேவையற்றதாகிவிடுகிறது. ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பு காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் பூர்த்தியாகாத நிலையில் நிரப்பப்படாத இடங்களை, பார்ப்பன அதிகாரவர்க்கம் திறந்த போட்டிக்கு மாற்றி விடுகிறது. 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்புவதற்கு ‘கிரிமிலேயர்’ வரம்பை தளர்த்திக் கொள்ளலாம் என்று, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது. தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் இதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மூன்று கோரிக்கை களை முன் வைத்துள்ளார். ஒன்று, ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார வரம்பை நீக்குவதற்குத் தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். இரண்டு துறைவாரியாக பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பது குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மூன்று துறைவாரியாக இடஒதுக்கீடுகள் பின்பற்றப் படுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.
இது குறித்து ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமூக ஆய்வாளர்கள், பல முக்கிய கருத்துகளை முன் வைத்தார்கள்.
அய்.ஏ.எ°. போன்ற அகில இந்திய தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் மறைமுகமாக முறியடிக்கப்பட்டு வருகிறது. 27 சதவீதத்துக்கு அதிகமாகவே பிற்படுத்தப்பட்டோர், அகில இந்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும்கூட நேர்முகப் பேட்டி வரும்போது அதில் பிற்படுத்தப் பட்டவர்கள் வடிகட்டப்படுகிறார்கள். அவர் களுக்கான 27 சதவீத ஒதுக்கீடுகளை முழுமையாக நிரப்புவதில்லை; பூர்த்தி செய்யப்படாத இடங்கள் திறந்த போட்டிக்கு மாற்றப்பட்டு விடுகின்றன; காத்திருப்போர் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படு கிறது; இந்தப் பட்டியலின்படி தேர்வு செய்யப்படும் போது இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படுவதே இல்லை. பிற்படுத்தப்பட்டோருக்காரன நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த சுதர்சன நாச்சியப்பன், இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து தயாரித்த விரிவான அறிக்கை 2005ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டை அமுலாக்காத அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல சீரிய பரிந்துரைகளை அது முன் வைத்துள்ளது.
27 சதவீத இடஒதுக்கீடுகூட அரசு ஆணை யாகவே இருக்கிறது. அது சட்டமாக்கப்படவில்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக் காரணமாக உயர் பதவிகளை பிற்படுத்தப்பட்டோர் எட்டிப் பிடிக்க முடியாத நிலை உருவாகி விடுகிறது. 2006ஆம் ஆண்டு மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 5.4 சதவீதமாகவும், 2008இல் 5.8 சதவீதமாகவுமே இருந்தார்கள். 2015இல்தான் 12 சதவீதம் என்ற நிலைக்கே வந்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட் டோரிலேயே ‘கிரிமிலேயர்’ வரம்புக்கு உட்பட்டவர், உட்படாதவர் என்ற இரண்டு பிரிவுகளை உருவாக்கி, 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக்க வேண்டும் என்ற கருத்துகளை விவாதங்களில் முன் வைத்தார்கள். அரசு அமைப்புகளில் உயர் பதவிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள், இடஒதுக்கீட்டை முன்னேறிச் செல்ல விடாமல் முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருப்பது பார்ப்பன ஆதிக்கம் – எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.
குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.பி.பர்டிவாலா என்பவர், அண்மையில் வழங்கிய தீர்ப்பில், நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரண்டு வில்லன்களில் ஒன்று ஊழல்; மற்றொன்று இடஒதுக்கீடு என்று திமிரோடு எழுதியிருந்தார். அந்த நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று 50 நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நாடாளுமன்றத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். (எதிர்ப்புக்குப் பிறகு தனது தீர்ப்பின் இந்தப் பகுதியை நீதிபதி திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்) கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சட்டப்படி நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார். நீதித் துறை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பனத் துறையாகவே இருப்பதை நீதிபதியின் இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.
அரசு உறுப்புகளான நிர்வாகம், நீதி இரண்டுமே பார்ப்பனக் கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் முடிவுகளையே இவர்கள் செயலிழக்கச் செய்து வருகிறார்கள். அர்ச்சகர்கள் வழக்கிலும் இதுதான் நடந்தது. பார்ப்பன ஆதிக்கம் வீழ்த்தப் படுவதன் வழியாகவே சமூக மாற்றத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கு இதைவிட சான்றுகள் தேவையில்லை.
பெரியார் முழக்கம் 31122015 இதழ்