வினாக்கள்… விடைகள்…!

காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி.   – காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன்

நிச்சயமாக! தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதக்கிறார்கள்!

ஏப்.24 அன்று காலையில் குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு, நாடு நல்லா இருக்கணும் என்று நினைத்து, வாக்குச் சாவடிக்குப் போய் தாமரைச் சின்னத்துல ஒரு விரலால் ஒரு குத்து குத்துங்க.  – இல. கணேசன் பேச்சு

அப்படியே செய்துடறோம்! ஓட்டுப் போட வரும்போது இதுக்கெல்லாம் தனித்தனியாக சான்றிதழ்களையும் கையோடு கொண்டுவரவேண்டுமா கணேசன் ‘ஜி’?

பலரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இல.கணேசனை இந்த முறை நாம் எல்லோரும் சேர்ந்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பியே ஆக வேண்டும்.  – தமிழிசை சவுந்தர்ராஜன்

அது முடியாதுங்க மேடம்! மக்கள்தான் ஓட்டுப் போட்டு அனுப்பணும்!

நரேந்திர மோடி இரயில் என்ஜின் மாதிரி. நம்முடைய கூட்டணி கட்சிகள் ரயில் பெட்டி; மோடி எனும் என்ஜின் இல்லாவிடில் பெட்டிகள் தானாக நகர முடியாது. – பா.ஜ.க. செயலாளர் வானதி

இதை, மோடிகிட்ட புரியும்படி எடுத்துச் சொல்லுங்க. அவர் பொறுப்பில்லாமல் ஹெலிகாப்டரிலேயே பறக்குறாரு!

தேர்தலுக்குப் பிறகு மோடியின் ஆட்சி யில் ஜெயலலிதா பங்கேற்றாலும், மோடியின் அரசை தொடர்ந்து ஆதரிப் போம்.  – தமிழருவி மணியன்

அப்பாடா! எங்கே கவிழ்த்துவிடப் போறீங்களோன்னு ‘திக்கு திக்கு’ன்னு பயமாக இருந்துச்சு!

இப்போதும், காங்கிரசுக்கு ஓட்டுப்போட முடியவில்லையே என்ற வருத்தத்தில் தான், மக்கள் மாற்று கட்சிக்கு ஓட்டு அளிக்கின்றனர்.    – பீட்டர் அல்போன்ஸ் போட்டி

பீட்டர் சார்… அரசியல் அகராதியில் தோல்விக்கு புது அர்த்தத்தையே வழங்கிட்டீங்களே! எங்கேயோ போயிட்டீங்க…. !

மனித இனத்துக்குள் இருக்கும் ஜாதியை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்?  – ‘தினமலரில்’ அன்புமணி பேட்டி

அதேபோல ஏழ்மை, வறுமை, நோய், வன்முறை போன்றவைகளும் மனித இனத்துக்குள்தான் இருக்குது. அவற்றையும் புறக்கணித்துவிடக் கூடாதுன்னு அடித்துச் சொல்லுங்க! ஓட்டுகளை குவிச்சுடலாம்!

பா.ஜ.க.வினரின் ‘ஹரஹரமோடி’ கோஷம், ‘சிவபெருமானை’ அவமதிப்ப தாகும். இதை ஆர்.எஸ்.எஸ். தடுக்க வேண்டும்.  – துவாரகை சங்கராச்சாரி கண்டனம்

அதெல்லாம் தடுக்க முடியாதுங்க… ‘சிவபெருமான்’ தேர்தல் ஆணையத்துல நேரில் புகார் தந்தால் மட்டும் பரிசீலிப்போம்!

பெரியார் முழக்கம் 27032014 இதழ்

You may also like...