‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்
2ஆவது வகுப்பு படிக்கும் ஒரு தலித் சிறுவனை, மலம் எடுக்கச் சொன்ன விஜயலட்சுமி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நாமக்கல் மாவட்டத்தில் இராமபுரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த சம்பவம். இது வெளியே தெரிய வந்த நிகழ்வு, அவ்வளவுதான். மதுரையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கூறையூர். இங்கே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக ஒரு தலித் மாணவர்கூட சேர்க்கப்பட்ட தில்லை. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த ஜாதிப் பிரிவுகளிலிருந்து சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளது ‘எவிடென்சு அரசு சாரா நிறுவனம்’. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மாணவர்களை தலித் அல்லாத ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கும் துப்புரவுப் பணி களுக்கும் பயன்படுத்துவது நடைமுறையாகிவிட்டது.
நெல்லை மாவட்டம் வேடம்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிப்பதற்கு வந்த ஒரு தலித் குழந்தையை கட்டாயப்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த கொடுமை நடந்தது. சம்பவம் நடந்த ஆண்டு 2012. இந்த வன்கொடுமையை நிகழ்த்திய பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூ.25000/- அபராதத் தொகை வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது. கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்ததா என்பது தெரியவில்லை.
பள்ளிக் குழந்தைகள், தங்களின் ஜாதி அடையாளமாக ஒவ்வொரு வண்ணத்திலும் கையில் கயிறு கட்டிக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். இது தவிர மாணவர்கள் சட்டைப் பையில் வெளியே தெரியுமளவுக்கு ஜாதித் தலைவர்களின் படங்கள். பிரச்சினைகள் உருவானபோது, பள்ளிக் கல்வித் துறைத் தலையிட்டு, கயிறு கட்ட ‘விரும்புகிறவர்கள் வெள்ளை நிறக் கயிறு மட்டுமே கட்ட வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. ஜாதிக் கொடுமையில் வெறுத்துப் போன ஒரு தலித், தனது மகனுக்கு ‘ஜாதி ஒழிப்பு வீரன்’ என்று பெயர் சூட்டினார். ஆத்திரம் கொண்ட ஜாதி வெறியர்கள், அந்த தலித் தோழரை மூர்க்கத்தனமாக தாக்கினர். 2014இல் நடந்த இந்த சம்பவம், வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தலித் மாணவர்களை கழிப்பறைக் கழுவ வைத்த குற்றத்துக்காக அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர் ஒருவரும், 7 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். 2007ஆம் ஆண்டில் கடலூரில் அரசு நடுநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர், குடியரசு தினத்துக்கான நடன நிகழ்ச்சிகளில் தலித் மாணவர்கள் பங்கேற்பதற்கு தடை விதித்தார்.
தென் தமிழகத்தில் ஒரு கணித ஆசிரியர், தலித் மாண வர்களை ‘மைனஸ்’ என்றும், தலித் அல்லாத மாணவர்களை ‘பிளஸ்’ என்றும் பெயர் சூட்டி இழிவுபடுத்தினார். புகார் வந்ததைத் தொடர்ந்து, அவர் வேறு ஊருக்கு மாற்றப் பட்டார். ஒரு அங்கன்வாடியில் தலித் குழந்தைகளுக்கு தனி வண்ணத்தில் சாப்பாட்டுத் தட்டுகள் வழங்கி, தனியே சாப்பாடு போட்டார் அங்கே பணியாற்றிய ஊழியர்.
ஒவ்வொரு கிராமமும் எப்படி ஒரு ஜாதியின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோ, அதேபோல பள்ளிகளையும் ஆதிக்க ஜாதிகள் தங்களின் பிடிக்குள்ளே வைத்திருக்கின்றன என்கிறது ‘எவிடென்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை. பிஞ்சு உள்ளங்களிலே நஞ்சைத் திணிக்கும் இந்த ஜாதிவெறிக்கு எதிராக எந்த ஒரு அரசியல் கட்சியோ, இயக்கமோ வாய்திறப்பதே இல்லை என்பதுதான் மிகப் பெரும் அவலம்.
பெரியார் முழக்கம் 19112015 இதழ்