காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம்

பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது:

சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும்.

பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்றது. இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதன் மூலம் தமிழக மக்களின் ஒட்டு மொத்தக் குரலை எதிரொலித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவை திராவிடர் விடுதலைக் கழகம் பாராட்டுகிறது.

மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக இணைய தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சக்கு வந்தபின் மதவாதம் தலைதூக்க தொடங்கியிருக்கிறது. மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த நஜ்மா ஹப்துல்லா சிறுபான்மை யினருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை எனக் கூறியுள்ளார். இதுபோன்ற போக்கு பா.ஜ.க.வுக்கே எதிராக மாறிவிடும்.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், “அகமண முறையை அகற்றுவோம்; ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் நடைபெற உள்ளது என்றார் அவர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அண்மையில் சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பிரிந்து சென்ற அமைப்புகளை ஒன்றிணைக்கவும், பொது எதிரியை வீழ்த்தவும் கூட்டமைப்பாக செயல்படுவோம் எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டபோது, இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் அதிகாரப் பூர்வமான நாளிதழில் செய்தி வரவில்லை. அதிகாரப் பூர்வமாக அறிவித்தால் திராவிடர் விடுதலைக் கழகம் இதனை வரவேற்கும் என்றார்.

பெரியார் முழக்கம் 19062014 இதழ்

You may also like...