ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்
காஞ்சீபுரம் மகாநாட்டு விஷயத்தைப் பற்றி நமது பத்திரிக்கையில் “காஞ்சீ மகாநாட்டுத் தலைவர்” என்னும் தலைப்பின் கீழ் எழுதி வந்தோம். இனி, திரு.வி.கலியாணசுந்தர முதலியார் என்னும் தலைப்பின் கீழ் எழுத அவசியமேற்பட்டுப் போனதைப் பற்றி நாம் இதுவரையில் அடைந்திராத வருத்தத்தையும், கவலையையும் உண்மையிலேயே அடைகிறோம். ஆனா லும், கடமையைவிட்டு நழுவி அசத்தியத்தைத் தாண்டவமாடச் செய்ய மனம் ஒருப்படேனென்கிறது.
சென்ற வாரம் ஸ்ரீமான். முதலியாரவர்கள் தன்னுடைய தலைமைப் பதவியை மனச்சாட்சிப்படி நடத்தினாரா? என்கிற விஷயத்தைப் பொது ஜனங் கள் அறிவதற்காக, பல விஷயங்களுக்கு, ஸ்ரீமான். முதலியாரைப் பதிலெழு தும்படி எழுதியிருந்தோம். அவற்றிற்கு நேர்முகமாகப் பதில் சொல்லாமல், இரண்டு, மூன்று விஷயங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றிச் சில விஷயங்களை எழுதியிருக்கிறார். அவைகளில் பெரும்பான்மை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலவேயிருக்கிறது. அதற்குப் பதில் ருஜுவோடு எழுத வேண்டியது நமது கடமையாய்ப் போய் விட்டதாதலால் பின்னால் அவற்றைப்பற்றி எழுதுவதோடு, ஸ்ரீமான். முதலியார் விடை அளிக்காமல் விட்டுவிட்ட விஷயங்களை, மறுபடியும் அவர் ஞாபகத்துக்குக் கொண்டுவர எண்ணியிருக்கிறோம்.
இதன் மத்தியில், இதுவிஷயத்தைப்பற்றி பல கடிதங்கள் நமது கருத்தைத் தழுவி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிற்கு நமது பத்திரிக்கை யில் இடமில்லாததற்கு வருந்துகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.12.1925