ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்
சென்றவாரம் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் விஷமப் பிரசாரத்தைக் குறித்து எழுதிய தலையங்கம் முடிவுபெறவில்லை.
அதாவது, நன்னிலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் பேசியதாக முன் இதழ் தலையங்கத்தில் எழுதியிருந்த 10 குறிப்புகளில் 6-வது குறிப்புவரையிலும் தான் விளக்கியிருந்தோம். ஆறாவது குறிப்புக்கும் கொஞ்சம் சமாதானம் எழுதினோம்.
- அதாவது சென்னை அரசாங்க பிரதமமந்திரி கனம் பனகால் ராஜா அவர்கள் ஸ்ரீமான் நாயக்கரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஜ°டி° கக்ஷியாருக்கு அனுகூலமாய் பிரசாரம் செய்யக்கூப்பிட்டு விட்டதாகவும், அதற்காக ஸ்ரீமான் நாயக்கர் சென்னைக்குச் சென்று பிரசங்கம் புரிந்ததாகவும், பிறர் நினைக்கும்படி ஸ்ரீமான் அய்யங்கார் பேசியிருக்கிறார். இந்த வாக்கு மூலத்தின்பேரில் ஸ்ரீமான் அய்யங்காரை கோர்ட்டுக்கு இழுத்து அதன்மூலமாய் ஸ்ரீமான் அய்யங்காருக்கு புத்தி கற்பிக்க பலர் ஸ்ரீமான் நாயக்கருக்கு அறிவுறுத் தினார்கள்.
இம்மாதிரியான விஷயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களல்லாது அரசாங்க நீதி°தலத்தை நாடுவது அவசியமில்லாதது என்பது நாயக்கரின் அபிப்பிராயம். அல்லாமலும் வெள்ளைக்காரருக்கும் இந்தியருக்கும் வழக்கேற்பட்டால் இந்தியர்களுக்கு நியாயம் கிடைப்பது எப்படியோ அதே மாதிரிதான் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் வழக்கேற்படுமா னால் பிராமணரல்லாதாருக்கு நியாயம் கிடைப்பது. மற்ற இலாக்காக்களில் பிராமணர்கள் அன்னியர்களுக்கு ஏதாவது கொஞ்சம் இடம் கொடுத் திருந்தாலும் நீதி நியாய இலாக்காக்களை மாத்திரம் வெகு ஜாக்கிரதையாக தாங்களே வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இதற்காக சர்க்கார் கோர்ட் டுக்குப் போவதைவிட பொதுஜனங்கள் கோர்ட்டே மேலானது என்பது நமதபிப்பிராயம்.
- காங்கிரசை பரிசுத்தப்படுத்தவேண்டும் என்பது. தேசத்தை காட்டிக் கொடுத்த ஒருவர் தமிழ்நாட்டில் கொஞ்சமும் செல்லுபடியில்லாமலிருந்த ஒருவர் தேசபக்தியினலாவது ஒழுக்கமான நடவடிக்கைகளினாலாவது தியாகத்தினாலாவது அல்லாமல் அக்கிரமமாய் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்து செல்வாக்கு பெரும் ஒருவர் திருவண்ணாமலை மகாநாட்டில் ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் கடாக்ஷத்தினால் காங்கிரசில் செலாமணியாகக் கூடிய நிலைபெற்ற ஒருவர், வாய்கூசாமல் அஞ்சாமல் ஆரியா, முதலியார், நாயக்கர் காங்கிரசிலிருப்பதால் காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொருள்படப் பேசி “அந்த வேலையைத்தான் நான் முதலில் செய்யப் போகிறேன்” என்று பேசும்படியான தைரியம் வரும்படியேர்ப்பட்டு போய் விட்டது. இது அவசரத்தில் பேசிய பேச்சல்ல. வெகு முன்ஜாக்கிரதையுடனே சதியாலோசனை செய்து பேசிய பேச்சாகும். ஸ்ரீ முதலியார், நாயக்கர், ஆரியா போன்றவர்களை யெல்லாம் காங்கிரசைவிட்டு விலக்கிவிட்டால் காங்கிர° பரிசுத்தமான பிராமண காங்கிரசாகிவிடும், அதுசமயம் வயிற்றுக் கொடுமைக் கும் மாலைக்கும் வண்டியிலிழுப்பதற்கும் ஆசைப்பட்ட சில அம்மிஞ்சி களை வைத்துக்கொண்டு மற்ற பிராமணரல்லாதாரை யெல்லாம் ஜ°டி° கட்சி ஜ°டி° கட்சி என்று இந்த அம்மிஞ்சிகளைவிட்டே திட்டும்படி செய்து தங்கள் இஷ்டம்போல் காங்கிரசை நடத்தி அதுதான் தமிழ்நாட்டு அபிப்பிரயா மென்று சொல்லிக்கொண்டு சகல பதவிகளையும் உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் தாங்களே வைத்துக்கொண்டு மீதி இருக்கும் பிராமண ரல்லாதாரையெல்லாம் பஞ்சமராக்கிவிடலாம் என்கிற எண்ணம் கொண்டு தான் இப்படிப் பேசியிருக்கிறார்.
- தமிழ்நாட்டுக் காங்கிர° தலைவரைப்பற்றித் தகரார் இல்லை என்று சொல்லுகிறார். தமிழ்நாட்டு காங்கிர° தலைவரான ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஸ்ரீமான் அய்யங்காரிடம் இந்த நற்சாட்சிப் பத்திரம் வாங்கக் கொடுத்த விலை எவ்வளவு என்பது வாசகர்களுக்கே தெரியும். அதாவது சுயராஜ்யக் கட்சியின் பேரால் சில போலிகள் தேர்தலில் வெற்றிபெற அனுகூலமாயும் ஸ்ரீமான் நாயக்கர் பிரயத்தனங்களுக்கு விரோதமாயும் அவ்வப்போது எழுதிக்கொடுத்த அபிப்பிராயங்களுக்கு கைமாறாக கொடுக்கப்பட்டது. மற்றவர்களும் தங்க ளுக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமைப்பட்டு என் செய்வது? வேலைக்குத் தகுந்த கூலிதானே கிடைக்கும்.
- குருகுலத்தரார் கொள்கையில் ஸ்ரீமான் அய்யங்காருக்கு அனுதாபம் இருந்தாலும் அனுபவத்தில் இப்போது சாத்தியப்படாது என்பது.
சர்க்காரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். இந்தியர் சுயராஜ்யம் பெறவேண்டும் என்பதில் தங்களுக்கு அனுதாபம் இருந்தாலும் காரியத்தில் அது இப்போது சாத்தியப்படாது என்றுதான் சொல்லுகிறார்கள். சர்க்காரைவிட இவர்கள் எந்தவிதத்தில் யோக்கியர்களோ நமக்குத் தெரியவில்லை. 33 கோடி ஜனங்களை பீரங்கி வெடிகுண்டு ஜயில் இதுகளை வைத்துக்கொண்டு சர்க்காரார் அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த அய்யர் அய்யங்கார் கூட்டங்கள் கிழிந்த புராணத்தையும், தர்ப்பைப் புல்லையும் கையில் வைத்துக் கொண்டு சர்க்காரார் நம்மை நடத்துவதைவிடக் கேவல மாய் நடத்துகிறார்கள். இதன் தத்துவத்தை வாசகர்களே கவனித்துக் கொள்ளவேண்டும்.
- தங்கள் கட்சியில் (சுயராஜ்யக்கட்சியில்) குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. தங்கள் கட்சியில் அபிமானமுள்ளவர்கள் உள்ளே புகுந்து திருத்துவது தானே என்கிறார். தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியில் அளவுக்கு மிஞ்சின அபிமானமுள்ளவர்களான ஸ்ரீமான்கள் நாயுடு முதலியவர்களா லேயே ஆகாத திருத்துப்பாடு நம்போன்றவர்களால் ஆகும் என்று நினைப்பதும் சுலபமான காரியமா என்பது நாம் சொல்லாமலே விளங்கும். இதுபோலவே ஜ°டி° கட்சியிலும் உள்ள குறைகளை பிராமணர் அல்லாதார் உள்ளே புகுந்து திருத்துவதுதானே என்று யாராவது சொன்னால் உடனே அவர்களை ஜாதியை விட்டுத்தள்ளிவிடுகிறார்கள். பொதுவாய் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களின் நன்னில உபன்யாசமானது திடீரென்று செய்யப் பட்டது அல்ல. அது பெரிய சதியாலோசனையின்பேரில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பிராமண ரல்லாதாரை சட்டசபையைவிட்டு வெளியாக்க இப்பொழுதிருந்தே அ°தி வாரம் போடுவதற்காக செய்த பிரசங்கம் என்பதை பிராமணரல்லாதார்கள் உணரவேண்டும். சட்ட சபைத் தேர்தல் வருவதற் குள்ளாக பிராமணரல்லாதாரில் வெகுபேரை விலைக்கு வாங்கி நம்மையே வைவதற்கும் வைது பத்திரிகைகளில் எழுதுவதற்கும் ஏவிவிடப் போகிறார் கள். பொதுவாய் காங்கிரசுக்கு இப்பொழுது எவ்வித ராஜிய திட்டமும் கிடையாது. நமது சுயராஜ்யக்கட்சிக்கோ கதரும் இல்லை, ராட்டினமுமில்லை. தீண்டாமை விலக்கும் இல்லை. ஆனால் ஒரு திட்டம் மாத்திரம் உண்டு. அது என்னவென்றால் பிராமணரல்லாதார்களை °தல °தாபனங்களில் இருந்தும் சட்டசபைகளிலிருந்தும் வெளிப்படுத்தி விட்டு தாங்கள் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டியது என்பதுதான். இதுவே முதலாவதும் கடைசியானதும் முக்கியமானதுமான திட்டம். ஆதலால் பிராமணரல்லாதார்களே! இனி என்ன செய்யப்போகிறீர்கள்?
குடி அரசு – தலையங்கம் – 27.09.1925