பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

சுயராஜ்யக் கட்சியாரின் நிலை நாளுக்கு நாள் கேவலமாகி வரு வதைப் பொது மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர்.  சுயராஜ்யக் கட்சியினர் அரசாங்கத்தோடு உறவாடும் எண்ணத்தோடுதான் தங் கட்சியைத் தோற்று வித்தார் என்பதின் உண்மை இப்பொழுது வெளியாகிவிட்டது.  முதலில் சட்டசபையில் புகுந்து மானத்தை வில்லாய் வளைத்துவிடப் போவதாகக் கூறிய இப்புலிகள் அரசாங்கத்தோடுக் கட்டிக் குலாவ முற்பட்டு விட்டனர்.  இவர்களால் தேசத்தில் கட்சிபேதங்களும், உலக சிரேஷ்டர் எம்பெருமான் காந்தி அடிகளின் தூய இயக்கத்திற்கு அழிவுந்தான் ஏற்பட்டதே அன்றி வேறல்ல.  இரண்டாண்டிற்கு முன் தேசமிருந்த நிலையை நன்கறிந்த உண்மையாளரின் மனம் இச் சுயராஜ்யக் கட்சியினரின் செயல்களைக் கண்டு நோகாமலிராது.  சிறிது சிறிதாக தம் மனத்தில் கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படையாகவே செய்ய முற்பட்டு விட்டனர்.  பண்டித நேரு ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றார்.  ஸ்ரீமான் படேல் இந்திய சட்டசபைக்குத் தலைவரானார்.  மீண்டும் நேரு, ஸ்ரீமான்கள் கெல்கார், அரங்கசாமி அய்யங்கார் மூவரும் “கோர்ட்டு அவமதிப்பு மசோதாவை”ப் பரிசீலனை செய்ய ஏற்பட்டிருக்கும் கமிட்டியில் அங்கம் பெற்றுள்ளார்கள்.  இது ஒத்துழைப்பா அல்லது முட்டுக்கட்டையா என்பது எமக்கு விளங்கவில்லை.  முட்டுக்கட்டை போடப்போகிறோம் என்று தேச மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்ற இவர்கள் குட்டிக்கரணம் போட ஆரம்பித்து விட்டனர்.  இன்னும் எத்தனைக் கமிட்டிகள் ஏற்படினும் அதிலும் அங்கம் பெறுவதற்குச் சிறிதும் மறுக்க மாட்டார்கள்.  மிதவாதிகளும் இதர ஒத்துழைப்புக் கட்சிக்காரர்களும் தங்கள் கட்சிகளின் யோக்கியதைகளைப் பொது மக்களுக்கு வெளிப்படை யாகக் கூறிவிடுகின்றனர்.  பொது மக்களும் அவர்களின் யோக்கியதையை நன்கறிந்து கொண்டிருக்கின்றனர்.  சுயராஜ்யக் கட்சியினரோ தங்களுக் கிருக்கும் மோகத்தை மறைத்து பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.  உண்மையை அறியாத பலர் இவர்களது வார்த்தைகளைக் கண்டு மயங்கியும் விடுகின்றனர்.  இவ்விதமாகப் பொது மக்களை ஏமாற்றி வரும் எக்கட்சி  யினரும் ஒருநாள் வீழ்ந்து விடுவார்கள் என்பது திண்ணம்.  பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பதை சுயராஜ்யக் கட்சியினர் உணர்வார்களா?

குடி அரசு – துணைத் தலையங்கம் – 06.09.1925

 

You may also like...