சுரேந்திர நாதரின் மறைவு
வங்கத்தின் முடி சூடா மன்னன் என அழைக்கப்படும் ஸ்ரீ சுரேந்திர நாத பானர்ஜி வியாழனன்று இம்மண்ணுலகினின்று மறைந்தார் என்ற செய்தியைக் கேட்க மிகுந்த விசனத்திலாழ்கிறோம். அப்பெரியார் ஐம்பது ஆண்டுகள் தேசத்திற்குத் தனக்குத் தோன்றிய வழி நின்று சலியாது தொண்டு புரிந்தார். முதன்முதலாக கலெக்டர் உத்தியோகத்தில் சில மாதங்களிருந்து பின்னர் விலக்கப்பட்டார். உடனே கல்வி வளர்ச்சிக்காக உழைக்க முற்பட்டு ரிப்பன் கல்லூரியைக் கண்டு அதில் போதகாசிரியராகவுமிருந்தார். தேசீய உணர்ச்சி பரவாத அக்காலத்தில் இளம் வங்க வாலிப வீரர்களுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தார். பழைய காங்கிரஸில் ஓர் முக்கியத் தலைவராக நின்று ஊழியம் புரிந்தார். இரண்டுமுறை காங்கிரஸில் தலைமையும் வகித் துள்ளார். ஒத்துழையாமை தோன்றிய காலத்தில், நம் தேசமானது அவ்வியக் கத்திற்குத் தயாராக இல்லை எனப் பலர் கருதியதுபோல் சுரேந்திர நாதரும் கருதி மிதவாதக் கொள்கையையே பின்பற்றி வந்தார். ஸ்ரீ சுரேந்திர நாதர் மீது இந்திய மக்கள் ஏதாவது ஒரு வழியில் அதிருப்தி அடைய வேண்டு மானால், ஒத்துழையாமையின் பலனாய் பின்னர் நடக்கப்போவதை முன்னரே அறிந்து கொண்டார் என்கின்ற ஒரு விஷயத்தில்தான் அவ்வித அதிருப்தி ஏற்படும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பர்களுக்கும் எமது அநுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.08.1925