ஸ்ரீ சிவம் மறைந்தார்

சென்ற இரண்டு மூன்று வாரங்களாக மறைந்திருந்த துக்கம் நம்மை மீண்டும் சூழ்ந்து விட்டது.  இது, தேசத்தின் பிற்கால வாழ்வில் மேலும், மேலும் சலிப்பிற்கே இடம் கொடுத்து வருகின்றது.  சின்னாட்களுக்கு முன்பாக ஸ்ரீ ஜத் சுப்பிரமணிய சிவனார் மதுரையில் நோய்வாய்ப்பட்டு மிக வருந்துகிறார் எனப் பத்திரிகைகளில் பார்த்தோம்.  கொடிய கூற்றுவன் இவ்வளவு விரைவில் நமது அரிய தேச பக்தரைக் கொள்ளை கொள்வான் எனக் கனவினும் கருதவில்லை.  நமது சிவனார் பழைய தேச பக்த வீரர்களில் ஒருவர்.  1907ம் ஆண்டில் நமது நாட்டிடை ஏற்பட்ட சுதேசியக் கிளர்ச்சியின் பொழுதே முக்கியமானவராக நின்று தொண்டாற்றியதன் பலனாய் ஸ்ரீமான்கள் வ.உ.சிதம்பரம்பிள்ளை, குருதாதய்யர் முதலிய நண்பர்களுடன் ஆறு வருட தண்டனை அடைந்து சிறையில் பட்ட கடினங்கட்கு ஓர் அளவில்லை.  அப்பொழுது அவரைக் கொண்ட நோய்தான் இதுகாலை அவரை வீழ்த்தியது.  அக்காலத்தில் சிறை என்றால் எவ்வளவு இழிவும் பயமும் என்பது யாம் எல்லோரும் நன்கு அறிந்ததே.  அப்படி யிருந்தும்  சிறையினின்றும் வெளிவந்து மீண்டும் அஞ்சாது தேசப் பணியிலேயே தனது காலத்தைக் கழிக்கலானார்.  சிவம் அவர்கள் ஒத்துழையாத் தர்மத்தில் ஏனையவற்றை ஏற்றுக்கொள்ளினும் சாத்வீகம் என்பதைச் சிறிதும் ஏற்றுக் கொள்ளவே யில்லை.  ஒத்துழையாமை ஓங்கி வளர்ந்து நின்ற காலத்தினும் சிவம் அவர்கள் பொழிந்த சொற்பெருக்குகளெல்லாம் வீரத்தை அடிப்படையாகவே கொண்டிருந்தன என்றும் எவரையும் அஞ்சாது எதிர்த்து நிற்பது அவரது வாழ்நாளின் ஓர் பெரிய லட்சியமாகும்.  இரண்டாம் முறையாக சிவம் அவர்கள் 1921 – ம் ஆண்டு சின்னாள் சிறையிலிருந்து உடல் வலி குன்றி உயிர் போகும் நிலையிலிருந்த காரணத்தால் வெளியில் வந்து விட்டார்.  மீண்டும் அரசாங்கத்தார் சிவம் அவர்களைச் சிறையிலிட வேண்டிய முயற்சிகளெல்லாம் செய்தனர்.  சிவம் அவர்கள் அரிய நூல்கள் பல எழுதியுள்ளார். அவர் எப்பொழுதும் இளைஞர்களை வீரர்களாக்க வேண்டும் என்ற கருத்துடையார், அக்கருத்துப்படி இன்றுவரை பல இளைஞர்களைப் பயிற்றுவித்து வந்தார்.  அவரது இளம் சீடர்கள் மனத் தளர்ச்சி உறாமல் தேசப் பணியிலேயே தங்கள் காலத்தைச் செலுத்த வேண்டுகிறோம்.  எமது அநுதாபத்தை அவர்கட்குத் தெரிவிக்கிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 26.07.1925

You may also like...