பர்க்கன்ஹெத் பிரபுவின் பரீட்சை
இந்தியா மந்திரி பர்க்கன் ஹெத் பிரபு “உங்களுக்குக் கொடுத்த சீர்திருத்தத்தை ஒழுங்காக நடத்தவில்லை. இனியாவது இரட்டை ஆட்சியை ஒழுங்குடன் நடத்துவீர்களாயின் 1929 ம் வருஷத்திற்கு முன்னர் சீர்திருத்தம் கொடுக்கலாமா என யோசிப்பேன்” என்று கூறிய உரைகளைக் கண்டு இந்திய அரசியல்வாதிகள் என்போரும் இந்திய அரசியல் பத்திரிகைகள் என்பவை களும் கண்ணீர்விட்டுக் கரைகின்றதை நோக்குழி பாஞ்சால வீரர்களான டயர், ஓட்வியர் போன்றார் மனதும் இளகிவிடும். ஆயினும், யாம் அதைப்பற்றிச் சிறிதும் கவலை உறக் காரணத்தைக் கண்டிலம். பர்க்கன் ஹெத் பிரபு கழறுவது போன்று மாண்ட் – போர்டு சீர்திருத்தம் என்னும் சர்வகலா சாலையில் யாம் மாணாக்கராய் ஒருபொழுதும் இருந்ததில்லை. மழைக்கும் சற்று நேரம் அக்கலாசாலைக்குச் சென்று ஒண்டியிருந்தோமில்லை. சீர்திருத்தப் பரீட்சை கொடுத்து நற்சாட்சிப்பத்திரம் பெறவும் எமது மனம் ஒருப்படவில்லை. அச்சர்வ கலாச்சாலையில் கற்ற மாணாக்கர்களும் அதன் பரீட்சைக்குச் சென்ற வித்தியார்த்திகளுமே தங்கள் பரீட்சையில் பர்க்கன் ஹெத் பிரபு கழித்து விட்டாரே என அழவேண்டுமே அல்லாது யாம் கவலை உறுவதில் சிறிதும் பொருள் இல்லை. பர்க்கன்ஹெத் பிரபுவினாலோ பிரிட்டி ஷாரின் மற்றைய எவரினாலோ இந்தியாவிற்குச் செய்யக்கூடியதோ அன்றி ஆகக்கூடியதோ ஒன்று உண்டோ என ஐயுறுகிறோம். உண்மையான ஒரு பிரிட்டிஷ் மகனிடம் இந்தியா இதுகாலை இவ்வித ஆ™வ வீரப்பிரதாபமான உரைகளை அன்றி வேறு என்ன கருத்தை எதிர்பார்க்கமுடியும்? பர்க்கன் ஹெத் பிரபு உண்மையாளராயிருப்பதைக் கொண்டு பிரிட்டிஷாரின் கருத்தை தெளிவான மொழியில் விளக்கினார். சற்று கபடமும் தந்திரமும் உள்ள வேறு ஒரு பிரிட்டிஷ் மகனாய் இருந்தால் இதே கருத்துக்களை நமது அரசியல் வாதிகள் ஆனந்தக்கூத்தாடு வண்ணம் வேறு மொழியில் பொழிந்திருப்பார். மாண்ட் – போர்டு சீர்திருத்தம் என்னும் கலாசாலையை மாண்டேகு துரை மகனார் திறக்கும்பொழுது முகவுரையாகக் குறிப்பிட்ட உரைகளும் இக்கருத்தை உடையவை தான். அதாவது :- “புதிதாய் அரசாங்க பாரத்தைச் சுமக்க விரும்பும் இந்தியர் அவ்வரசாங்கப் பொறுப்பைச் சுமக்க எவ்வளவு தகுதியுடையவர்கள் என்று தங்கள் செய்கைகளால் நிரூபிக்கின்றனரோ அதை அனுசரித்துத்தான் வழங்கப்படும்” என்றும் பிரதம மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜ் துரை மகனும் இதே கருத்தைத்தான் கூறியுள்ளார். அதாவது :- “இந்தியர்களுக்கு பிரிட்டிஷாரைத் தான் தர்மகர்த்தர்களாக கடவுள் நியமித்திருக்கிறார். அவர்களை எப்படி ஆள்வது என்பதின் பொறுப்பை நிர்ணயிக்க பிரிட்டிஷாருக்குத் தான் அதிகாரம் உண்டு ; சீர்திருத்தத்தின் தத்துவத்தைச் சரிவர அறிந்துகொள்ளாமல் இந்தியர்கள் கூக்குரல் இடுகின்றனர். சீர்திருத்தத்தின் முகவுரையிலேயே இவற்றை எல்லாம் விளக்க மாகச் சொல்லியுள்ளோம். இரும்புச்சட்டத்திற்குள் அடக்கித்தான் ஆளு வோம்” என்று பகர்ந்திருக்கின்றார். ஆதலின் பிரிட்டிஷாரின் எண்ணத்தில் ஒன்றும் களங்கம் இல்லை. உள்ளதை உள்ளவாறே கூறி வருகின்றனர்.
ஒருவேளை பர்க்கன்ஹெத் பிரபு நமது வித்தியார்த்திகளை தமது பரீட்சையில் தேறியவர்களாக மதித்துச் சர்வகலாசாலைப் பட்டம் வழங்கி யிருப்பாராயின் அது எதற்கு உதவும் எனின் மற்றோர் சர்வ கலாசாலை ‘பர்க்கன் – ரீடிங்’ அல்லது ‘ரீடிங் – ஹெத்’ என்ற பெயருடன் திறக்கப்பட்டு அதில் சென்று கல்வி கற்க அனுமதிக்க உதவுமே அல்லாது வேறு என் செய்ய உதவும்? நாட்டில் தரித்திரத்தாலும், பிணியாலும், தொழிலின்மையாலும் இடர்ப்படும் எளிய மக்களுக்கு ஒரு வேளைக் கஞ்சியின் உப்பிற்கு உதவுமா? ஒரு வேளை கஞ்சிக்கு தங்களது கற்பையும் இழக்க அவதிப்படும் நமது ஏழைச் சகோதரிகளின் கற்பைக் காக்கமுடியுமா? மனிதனுக்கு மனிதன் தொட்டால், பார்த்தால், அருகில் வந்தால், பேசினால் பாவம், தனது மதத் தத்துவத்தைப் படித்தால் பாவம் என்று சொல்லும்படியான கொடுமைகளுக் கும் இழிவுகளுக்கும் ஏதாவது விடுதலை உண்டாகுமா? நமது எளிய மக்கள் மெய்வருந்திச் சம்பாதிக்கும் தங்களது சிறு கூலியைக்கூட, கள்ளுக்கும், சாராயத்திற்கும் கொடுத்து வீட்டிலுள்ள குழந்தைகளின் கஞ்சிக்கும் வகையன்றி மானம்கெட்டு, ஒழுக்கம் கெட்டு, அல்லற்பட்டுத் திரியும் அவதியை ஒழிக்கமுடியுமா என்பதைப் பொதுமக்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்ப்பார்களாயின் இவ்வரசியல்வாதிகள் எனப்படுவோர் படும் துக்கத்தில் சிறிதளவு கலந்துகொள்ள முற்படார். சுயராஜ்யத்திற்கு மாண்ட் – போர்டு சீர்திருத்தந்தான் வழி என்று தாலாட்டி, முத்தமிட்டு வளர்த்திய மிதவாதி களாலும், சீர்திருத்தத்தினாலேயே கடை ஏறி விடலாம் என நினைத்து பிரிட்டிஷாருக்கு நல்ல பிள்ளைகளாய் நடந்துவந்து, நற்சாட்சிப்பத்திரம் பெற்ற ஜஸ்டிஸ் கட்சியினராலும் நாட்டிற்கு என்ன விளைந்தது? இவர்களால் என்ன செய்யமுடிந்தது? கேவலம் மதுபான விஷயத்தில் என்ன செய்தனர்? சென்னை மாகாணத்தில் தான் மந்திரிகள் என்கின்ற பரீட்சைக்கொடுத்த மாணாக்கர்கள் எல்லோரும் “பிராமணரல்லாதார் ஜஸ்டிஸ்காரர் தேசத்தைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள்; இவர்கள் தேசத்தைப்பற்றிக் கவனிக்க வில்லை” என்று சொல்லுவதாயிருப்பின் பிராமணர்களை மந்திரிகளாகக் கொண்ட மத்திய மாகாணம், பம்பாய், வங்காளம் முதலிய மாகாணங்கள் என்ன சாதிக்க முடிந்தது? இதை நடுநிலை நின்று ஒருவர் நோக்குவாராயின் இச்சீர்திருத்தக் கலாசாலைகள் அரசியல்வாதிகள் என்கின்ற ஆங்கிலம் படித்த சிலருக்கு உதவுமே அல்லாது நாட்டின் உண்மையான தேவைகளை அளிக்க எவ்வகையிலும் உதவாது என்பது விளங்கும். பர்க்கன் ஹெத் பிரபு சென்னை மாகாணம்தான் சீர்திருத்தப் பரீட்சையில் முதலாவதாகத் தேற இருப்பதாகக் கூறி, சென்னையைப்பற்றிப் புகழுகின்றார். இதற்காக இவர் அளிக்கப்போகும் பட்டம் யாது? க்ஷ.சு., ஆ.சு., னு.சு., என்பது போன்ற பட்டங்கள்தான் அளிப்பார். அதன் பொருள் ‘பாட்ச்லர் ஆப் ரிபார்ம்’ ‘மாஸ்டர் ஆப் ரிபார்ம்’ ‘டாக்டர் ஆப் ரிபார்ம்’ ஆகிய இப்பட்டங்கள்தான் அளிக்கக்கூடும். இதற்கு கவர்னர் உத்தியோகம் வரையிலும் கிடைப்பினும் கிடைக்கலாம். தேசத்திற்கு ஏழை கட்கு இதனால் யாது பலன்கிடைக்கும்? இவற்றையெல்லாம் காந்தியடிகள் நன்கு அறிந்தே அச்சீர்திருத்தம் என்னும் கலாசாலைகளை விடுத்து தமது நிர்மாணத் திட்டம் ஒத்துழையாத்திட்டம் என்னும் கலாசாலைக்கு எல்லோரையும் அழைக்கிறார். காந்தி அடிகளின் இந்நிர்மாண ஒத்துழையாக் கலாசாலையில் சேர நமது ஆங்கிலம் கற்ற அரசியல் வாதிகளுக்கு மனமில்லை. இதில் நாம் உண்மையாய் ஒரு மனதுடன் சேர்ந்தோமாயின் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் யோக்கியதை பர்க்கன் ஹெத் பிரபுவிற்கு ஏது, பர்க்கன் ஹெத் பிரபுவிடம் வாங்கும் இழிமை இந்தியாவிற்கு ஏது என்பதை உணருவோம். இத்தருணத்தில் எமது நினைவிற்கு வரும் கம்பர் அங்கதன் தூதுப்படலத்தில் சொன்ன ஒரு சிறு கவியைச் சொல்லி முடிக்கிறோம்.
வாய்த்தரத்தக்க சொல்லி என்னையுன்
வசஞ் செய்வாயேல்,
ஆய்தரத் தக்க தன்றோ தூது வந்த
ரசதாள்கை
நீ தரக்கொள்வேன்யானோ இதற்குகினி
நிகர்வே றென்னில்,
நாய்தரக் கொள்ளுஞ் சீய நல்லர
சென்று நக்கான்.
குடி அரசு – தலையங்கம் – 12.07.1925