சட்டசபை உடைப்பது மெய்யா?
காங்கிரஸ்காரர்கள் ராஜாங்க சபைக்கு (ஸ்டேட் கவுன்சிலுக்கு) ஆட்களை நிறுத்தினார்கள். அங்குபோய் சட்டசபையை உடைக்கவோ, சீர்திருத்தத்தை உடைக்கவோ ஏதாவது இடம் இருக்கிறதா என்று கேட்கிறோம். வெறும் பதவிவேட்டை அல்லாமல் அதில் வேறு நாணையம் இருக்கிறதா என்று கேட்கின்றோம். சென்னை மாகாணத்தில் ஸ்டேட் கவுன்சிலுக்கு இரண்டுபேரைத்தான் நிறுத்த காங்கிரசுக்கு முடிந்தது. மற்ற இரண்டு ஸ்தானங்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு வருணாச்சிரம சவுக்கார் சேட்டையும், ஒரு ஆந்திர பார்ப்பனரையும் தான் நிறுத்த முடிந்தது. அவர்கள் இருவரும் காங்கிரஸ் அல்லாதார் பெற்று வெற்றிபெற்ற ஓட்டை விட மிகக்குறைந்த ஓட்டுபெற்று 3வது 4வது நபர்களாய் வெற்றி பெற்றார்கள். ஆகவே நாட்டில் அறிவாளிகளில் அரசியல் நிர்வாக அனுபவம் பெற்ற மக்களிடத்தில் காங்கிரசுக்கு உள்ள மதிப்பு எவ்வளவு என்பதற்கும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைகளில் செய்யப்போகும் முட்டுக்கட்டை யோக்கியதை எப்படிப்பட்டது என்பதற்கும் இந்த ராஜாங்கசபைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகும்.
குடி அரசு கட்டுரை 27.12.1936