சட்டசபை வேட்டை
சென்னை சட்டசபையாகிய லெஜிஸ்லேட்டிவ் அசம்பிளி தேர்தலுக்கு காங்கிரஸ் மடிகட்டி நிற்கிறது. ஜஸ்டிஸ்கட்சியும் மடிகட்டி நிற்கிறது. மற்றும் பல கட்சிகளும் சில தனிப்பட்ட நபர்களும் மடிகட்டி நிற்கின்றார்கள். எல்லோருக்கும் ஆசைப்பட உரிமையுண்டு. எல்லோரும் அதன் பயனை அனுபவிக்கவும் உரிமையுடையவர்களே ஆவார்கள். ஏனென்றால் சட்ட சபையில் செய்யும் வேலை எதுவானாலும் இந்நாட்டு மக்கள் எல்லோரையும் பற்றியதாகும். அதற்கு ஏற்படும் செலவு அவ்வளவும் இந்நாட்டு மக்களின் உழைப்பால் சம்பாதிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட வரிப்பணத்தைப் பொருத்ததேயாகும். ஆதலால் செல்வவான், ஏழை, படித்தவன், படிக்காதவன், மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்றதான எவ்வித பிரிவு தடையும் இல்லாமல் எல்லோருக்கும் சம்மந்தப்பட்டதும் உரிமையுடையதுமேயாகும். ஆனால் ஒரு கூட்டத்தாரோ, ஒரு ஜாதியாரோ, ஒரு கட்சியாரோ, தங்களுக்குத்தான் உரிமையுண்டென்றும், தாங்கள் தான் தகுதி உடையவர்கள் என்றும் சொல்லி தனி பாத்தியம் கொண்டாடுவதும் மற்ற ஒரு கூட்டத்தாரை உரிமையற்றவர்கள் என்றும், தகுதியற்றவர்கள் என்றும் சொல்லி வைவதும், தடுப்பதுமான காரியத்தை யார் செய்தாலும் அதை ஆக்ஷேபிக்காமலோ அம்முயற்சியை ஒழிக்காமலோ இருக்க முடியவில்லை.
இதையேன் சொல்லுகின்றோமென்றால் காங்கிரஸ்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தார் இப்போது இந்த சட்டசபை தேர்தலில் தாங்கள் தான் நிற்க உரிமையுடையவர்கள் என்றும், தாங்கள் தான் மெம்பர்களாகத் தகுதி உடையவர்கள் என்றும் மற்றவர்கள் தகுதி அற்றவர்கள் என்றும் சொல்லி பிரசாரம் செய்து வருவதால் அதை ஆக்ஷேபித்து மறுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆகவே இதைப்பற்றி எழுதுகிறோம்.
சட்டசபைக்குப் போகிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் அங்கு சென்று தாங்கள் செய்யப்போகும் வேலை என்ன என்பதையும், சட்ட சபையைப் பற்றினவரை தங்களுடைய கொள்கை என்ன என்பதையும் நாணயமாகவும், யோக்கியமாகவும் ஓட்டர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டவர்களாவார்கள். சட்ட சபைக்குச் செல்லுபவர்களின் வேலையையும், கொள்கையையும் நன்றாகத் தெரிந்து கொண்டே ஓட்டர்களும் ஓட்டு செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். இந்த இரண்டு குணமும் இல்லாத அபேட்சகர்களும், ஓட்டர்களும் இருப்பார்களானால் அவர்கள் அரசியலைப் பொருத்தவரையில் பூமிக்குப் பாரமான மாம்சபிண்டங்கள் என்று சொல்ல வேண்டியவர்களே யாவார்கள். இன்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் தாங்களே சட்டசபைக்குப் போக உரிமையுடையவர்கள் என்றும், தங்களைத்தவிர வேறு யாருக்கும் ஓட்டர்கள் ஓட்டு செய்யக்கூடாதென்றும் சொல்லுவதோடு தாங்கள் சட்டசபைக்குச் செல்வதானது தங்களைத் தவிர உள்ள மற்ற கட்சியை அதாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகவும், ஜஸ்டிஸ் கட்சியார் சட்டசபைக்குப்போகாமல் தடுப்பதற்காகவும் சட்டசபைக்குப் போகிறோம் என்கின்றார்கள். மற்றபடி தங்களுக்கு வேறு எவ்வித கொள்கையோ, தகுதியோ இருப்பதாக அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. சிற் சில சமயங்களில் சட்டசபையில் போய் என்னசெய்வது என்பதை இனிமேல் அதாவது தேர்தல் முடிந்த பிறகு தீர்மானிக்கப்போவதாய் சொல்லுகிறார்கள். சிற்சில சமயங்களில் சட்ட சபைக்குப் போய் சுயராஜியம் பெரும் நாளைத் துரிதப்படுத்தப் போவதாய் சொல்லுகிறார்கள். சிற்சில சமயங்களில் சட்ட சபையில் சுயராஜியம் பெற முடியாது என்றும், சட்டசபைக்கு ஆதாரமான புதிய சீர்திருத்தத்தை உடைத்து சர்க்காரை திக்குமுக்கலாடச் செய்யப்போகிறோம் என்றும் சொல்லுகிறார்கள்.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் சட்டசபைத் தேர்தல் முடிந்து அங்கத்தினர்களான பிறகு அரசியலை நடத்தும் பொறுப்புகளை வகிக்கும் படியான மந்திரி பதவிகளை வகிக்கும் விஷயத்திலும் காங்கிரஸ்காரர்கள் எவ்வித அபிப்பிராயமும் சொல்லாமல் மந்திரிபதவியை ஏற்றாலும் ஏற்போம். மறுத்தாலும் மறுப்போம். ஏற்றபிறகு அரசியல் சட்டப்படி நடந்தாலும் நடப்போம். அல்லது எதிர்த்து அரசியல் சட்டத்தை உடைத்தாலும் உடைப்போம் என்று ஒரு பொறுப்பும், ஒரு ஜவாப்தாரித்தனமும் இல்லாதவர்களாகவே பேசுகிறார்கள்.
சட்டசபைக்குப் போவது என்பதும் அங்கு மந்திரி பதவி ஏற்று அதை உடைப்பது என்பதும் விளையாட்டுக் காரியமல்ல என்பதும் லேசில் செய்யக் கூடிய காரியம் அல்ல என்பதும் நாம் விவரித்துச் சொல்லவேண்டியதில்லை. சட்டசபை தேர்தல் என்பதில் ஒவ்வொரு தனி நபர் தேர்தல் ஒன்றுக்கு சராசரி 10 ஆயிரம் ரூபாயுக்கு குறையாமல் செலவு செய்து பெறவேண்டிய ஸ்தானமாகும். இதுபோலவே அரசியல் மந்திரிபதவி சபை என்பதும் மாகாணம் ஒன்றுக்கு சராசரி 50 ஆயிரம் ரூபாய் ஒரு லக்ஷ ரூபாய் என்பதான செலவைக் கொண்டது என்பதும் யாரும் அறியாததல்ல.
சட்டசபை கூட்டங்கள் நடக்கும் காலத்தின் பணச் செலவும் நாள் ஒன்றுக்கு மாகாணம் ஒன்றுக்கு 4000, 5000 ரூபாய் வீதம் செலவாகக்கூடிய காரியமே தவிர வேறல்ல. இன்னும் மற்ற செலவுகள் எவ்வளவோ உண்டு.
இவ்வளவு பணச் செலவும் நடத்தி இப்படி பொருப்பில்லாமல் பேசுபவர்களை மெம்பர்களாகக் கொண்ட நமதுநாடு எப்படிப்பட்ட நாடு என்று பார்ப்போமானால் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு சராசரி வருமானம் 016 ஒன்றரை அணாவோ, 020 இரண்டு அணாவோ கிடைப்பதுகூட கஷ்டமான காரியம் என்று சொல்லும்படியானதும், விவசாயிகளாய் இருப்பவர்கள் தங்கள் விவசாய விளைபொருள்களின் பயனைக்கொண்டு சர்க்கார் வரி கட்டுவதே கஷ்டமாய் இருக்கிறதே என்று கூக்குரலிடும் படியானதுமான நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே இப்படிப்பட்ட பணச் செலவும், கஷ்டமும் உள்ள சட்டசபை மெம்பர் ஸ்தானங்களையும் அரசியல் பதவிகளையும் இம்மாதிரி அதாவது “அங்குபோய் என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது, அதற்காக இப்போது எங்களிடத்தில் ஒரு திட்டமும் இல்லை, உடைப்போமோ, நடத்துவோமோ இப்போது சொல்லமுடியாது, கூனோ, குருடோ, மொண்டியோ, முடமோ, மிருகமோ, பிண்டமோ யாரை நாங்கள் நிறுத்தினாலும் நீங்கள் ஓட்டுப்போட வேண்டும்” என்று பொருப்பில்லாமல், கவலையில்லாமல் பேசுகிறவர்கள் அந்த ஸ்தானங்களை அடைய மக்கள் ஓட்டு செய்வது என்றால் இதை யார்தான் புத்திசாலித்தனமான காரியம் என்றோ, யோக்கியபொருப்பை உணர்ந்த காரியம் என்றோ சொல்லக்கூடும் என்று கேட்க ஆசைப்படுகிறோம்.
தவிரவும் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சியாரை அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதற்காவது ஏதாவது சரியான காரணம் சொல்லுகிறார்களா என்று பார்த்தால் அதுவும் பொறாமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது “ஜஸ்டிஸ்கட்சி சர்க்காரை ஆதரிக்கிறது, சீர்திருத்தத்தை ஏற்று நடத்துகிறது, வகுப்புவாதம் பேசுகிறது” என்கின்ற மூன்று “குறை”களை கூறுகிறார்கள். இவற்றை குறையென்று யாராவது சொல்ல முடியுமா என்பதை முதலில் யோசிக்கவேண்டும்.
இந்த நாட்டில் இன்று சர்க்காரை ஆதரிக்காமலோ, சர்க்காருடன் ஒத்துப் போகாமலோ ஒரு காரியமும் நம்மால் செய்யமுடியவில்லை. சர்க்கார் என்றால் நமது வரிப்பணம், பட்டாளம், பீரங்கி, துப்பாக்கி, போலீசு, ஜெயில் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இவற்றை அலட்சியமாய் இதுவரை யாரும் கருதியதில்லை. கருதினவர்களும் யாதொரு காரியத்தையும் சாதித்துவிடவும் இல்லை.
காங்கிரசே இவற்றை ஒருகாலத்தில் அலட்சியமாய் கருதிற்று என்று சொல்லப்பட்டாலும் இன்று அப்படி கருதியதால் ஒரு காரியமும் சாதிக்கக் கூடவில்லை என்ற முடிவுக்கு வந்து இனி பட்டாளத்தையோ, ஜெயிலையோ, போலீசையோ அலட்சியமாய்க் கருதுவதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்து சட்டசபைக்குள்ளும், ஸ்தல ஸ்தாபனங்களுக்குள்ளும், ராஜவிஸ்வாசப் பிரமாணமும், சட்டத்திற்கு கீழ்படியும் பிரமாணமும் செய்து அரசாங்க ஸ்தாபனத்துக்குள்ளும் அரசாங்க சீர்திருத்தத்திற்குள்ளும் நுழைய மடிகட்டி நிற்கிறது. இந்நிலையில் ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என்றால் இதற்கு ஏதாவது அருத்தம் உண்டா என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். மற்றபடி ஜஸ்டிஸ் சீர்திருத்தத்தை ஏற்று நடத்துகிறது என்பதிலும் குற்றம் என்ன சொல்லக் கூடும்?
காங்கிரசானது 1920ம் வருஷத்தில் இப்போது அமுலில் இருக்கும் சீர்திருத்தத்தை போராதது என்றும், தகுதி அற்றது என்றும், அதிருப்திகரமானது என்றும் சொல்லி அரசியலின் சகல சம்மந்தத்தையும் பஹிஷ்கரித்துப் பார்த்தாய் விட்டது. பிறகு சீர்திருத்தத்தை உடைக்கச் சட்ட சபைக்குப் போவதாய்ச் சொல்லி தாஸ், நேரு, லஜபதி, மாளவியா போன்ற பெரியார்கள் சட்டசபைக்கு மெஜாரிட்டியாய் போய் தங்களால் ஆனதை யெல்லாம் செய்து பார்த்தாய் விட்டது. சென்னை மாகாணத்தில்தான் ஜஸ்டிஸ் கட்சியார் இருந்து கொண்டு காங்கிரஸ் வேலையை தடுத்துவிட்டார்கள் என்று காங்கிரஸ்காரரால் சொல்லப்படுவதானாலும் பஞ்சாப், வங்காளம், மத்திய மாகாணம் முதலிய “பாரதத்தாயின்” நேத்திரமும், இருதயமும் போன்றதான தேசீய வீரர்களும், அருந்தவப் புத்திரர்களும் மகா தியாக உருவங்களும் இருந்த நாடுகளில் ஜஸ்டிஸ் கட்சி வாசனையே இல்லாத நாடுகளில் காங்கிரஸ்காரர்களால் எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டு சீர்திருத்தத்தை உடைத்து அரசாங்கம் நடைபெற முடியாமலோ, அரசாங்கத்தார் கீழே இரங்கி வரும்படியாகவோ செய்ய முடிந்தது என்று கேட்கின்றோம்.
ஆகவே இந்த 16 வருஷ காலமாய் காங்கிரஸ்காரர்கள் அரசியலில் ஞானமும், பொருப்பும் கடுகளவும் இல்லாமல் பொது ஜனங்களின் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் தங்கள் ஆயுதங்களாகக் கொண்டு தங்களால் கூடுமானவரை ஆடிப்பாடி குதித்துக் கும்மாளம் போட்டுவிட்டு சிறிதும் பொருப்பும் மானமும் இல்லாமல் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பதாய்ச் சொல்லி ஒரு கோடி இரண்டு கோடி, ரூபாய்கள் வசூல்செய்து ஒரு லட்சம், இரண்டு லட்சம் பேரை ஜெயிலுக்கு அனுப்பியும் கட்டுக்கடங்காமல் காலித்தனமாய் திரியச் செய்தும் சகல முயற்சியிலும் படுதோல்வி அடைந்த காந்தியாரே காங்கிரசில் ஒழுக்கமில்லை, நாணையமில்லை, நான் காங்கிரசை விட்டு வெளியேபோய் காங்கிரசுக்கு மேன்மை உண்டாக்கப்போகிறேன் என்று சொல்லி ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிப்போய் காங்கிரசுக்கு காக்ஷியாளராய் வருகிறேன் என்பதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஒழித்துவிடப் போகிறோம் நீங்கள் மாத்திரம் இந்த ஒரு தேர்தலுக்கு ஓட்டுக் கொடுத்தால் போதும் என்ற ராஜகோபாலாச்சாரியார் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி கடைசியாக காங்கிரசுக்குக் கட்டுப்பாடும், நாணையமும் உண்டாவதற்காக ஆக நான் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகி நிற்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டுப் போய் உட்கார்ந்து கொண்டு மறுபடியும் இந்த ஒரு தடவை மாத்திரம் ஓட்டு செய்யுங்கள் இல்லாவிட்டால் வங்காளக்குடாக் கடலில் விழுந்து சாகவேண்டி வரும் என்று சொல்வதுமாய் இருக்கும்போது ஜஸ்டிஸ்காரர்கள் சீர்திருத்தத்தை நடத்திவிட்டு இனியும் அதிக சீர்திருத்தங்கள் கொடுங்கள் என்று கேட்பதில் என்ன தப்பு என்று யோசித்துப்பார்க்கும்படி வேண்டுகிறோம்.
~subhead
வகுப்புவாதம்
~shend
மற்றபடி ஜஸ்டிஸ்காரர்கள் வகுப்புவாதம் பேசுகிறார்கள் என்பதில் ஏதாவது அருத்தம் இருக்கிறதா என்று கேட்கின்றோம். இந்தியா என்றாலே வகுப்புவாதம் என்பதல்லாமல் வேறு ஏதாவது பொருள் இருக்கிறதா என்று கேட்கின்றோம். இந்தியாவில் பல மதம், பல ஜாதி, பல உள் வகுப்புகள் நிறைந்திருக்கின்றன. இதில் கட்டுப்படாத மனிதன் யாருமே கிடையாது. காந்தியாரும் தன்னை இந்து என்றும், சனாதன வர்ணாச்சிரம இந்து என்றும், இந்து மதத்தின் சனாதன வர்ணாச்சிரமத்தைக் காப்பாற்றவே மூச்சு விடுகிறேன் என்றும் சொல்லி வருவதை யாரும் மறுக்க முடியாது. தோழர்கள் மௌலானாக்கள் முகமதலி, ஷவுக்கத்தலி, அஜ்மால்கான், அன்சாரி, அப்துல்கலாம் ஆசாத், மகமதலி ஜின்னா போன்ற தேசிய வீரர்களும் ஒப்பற்ற தேசபக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி “நான் முதலாவது முஸ்லீம், இரண்டாவது முஸ்லீம், அப்புரம் மூன்றாவதுதான் இந்தியன்” அதாவது எனக்கு முதல் லக்ஷியம் முஸ்லீம் மார்க்கம், இரண்டாவது லக்ஷியம் முஸ்லீம் சமூகம், மூன்றாவது லக்ஷியம் தான் இந்தியா தேசம் என்று சொல்லி இருப்பதும் இனியும் சொல்லி வருவதும் யாராவது மறுக்கக் கூடுமா என்று கேட்கின்றோம்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும், சத்தியமூர்த்தியார் அவர்களும் “எனக்கு உச்சிக் குடிமையும், பூனூலும், பஞ்சகச்சமும், வர்ணாச்சிரம தர்மமும், கீதையும், மனு தர்ம சாஸ்திரமும், உப நிஷத்தும், புராணமும், ஆகமமும்தான் முதல் லட்சியம், பார்ப்பன வகுப்பின் நன்மை இரண்டாவது லட்சியம், அப்புரம் தான் தேசாபிமானம் என்பது மூன்றாவது லட்சியம்” என்று காட்டி வரவில்லையா என்று கேட்கின்றோம்.
~subhead
தேசிய கொடி
~shend
மற்றும் ஒப்பற்றதும், உயிருக்குச் சமானமானதுமான “தேசியக்கொடி” என்பதில் என்ன விளங்குகிறது? சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய வர்ணங்கள் அதாவது வர்ணதர்மம் தான் விளங்குகிறது. என்ன என்றால் சிகப்பு வர்ணம் இந்துக்களைக் குறிப்பது, பச்சை வர்ணம் முஸ்லீம்களைக் குறிப்பது, வெள்ளை வர்ணம் மற்ற வேறு பல மதக்காரர்களையும், வகுப்புக்காரர்களையும் குறிப்பது என்பதாக வியாக்கியானம் சொல்லப்படவில்லையா என்று கேட்கின்றோம். 1910ம் வருஷத்திலேயே இந்திய சட்டசபையில் முஸ்லீம்களுக்கு இவ்வளவு ஸ்தானங்கள் கிறிஸ்தவர்களுக்கு இவ்வளவு ஸ்தானங்கள் என்று அவரவர் ஜனத்தொகைக்குத் தக்கபடி பிரிவு ஏற்பட்டு அதை காங்கிரசும் எவ்வித ஆக்ஷேபணையும் இல்லாமல் ஒப்புக்கொண்டு காங்கிரஸ் கொள்கையிலும், திட்டத்திலும் லக்னோ பேக்ட் என்பதாக இடம் கொடுத்து தீர்மானங்கள் செய்துகொண்டதா இல்லையா என்று பழைய ஆதாரங்களைப் புரட்டிப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
1932 ல் தோழர் காந்தியார் இந்தியத் தீண்டப்படாத மக்கள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய ஜனத்தொகை எண்ணிக்கைக்குத் தக்கப்படி எண்ணிக்கை கொடுத்து அச் சமூகத்தாரிடம் ராஜி பேசி முடித்துக் கொண்டு அந்த முடிவை அரசாங்கமும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்துக்கு காங்கிரசும், இந்திய தேசியத் தலைவர்களும் இரு சமூகப் பிரமுகர்களும் விண்ணப்பம் செய்து கொள்ளவில்லையா என்று கேட்கின்றோம்.
இவற்றால் எல்லாம் உடைந்துவிடாத சீர்திருத்தமும், கெடாத தேசீயமும், ஜஸ்டிஸ் கட்சி சீர்திருத்தத்தை நடத்திக்கொடுப்பதாலும் மற்ற சமூகங்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று கேட்பதாலும் தானா இந்திய தேசீய விடுதலை தடை பட்டுப்போகும்? என்று கேட்கின்றோம்.
காங்கிரசானது 1885ம் வருஷத்தில் துவக்கப்பட்டதற்கு காரணமே இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் அதிகமான பதவிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஒழிய இந்தியர்களுக்கு சுயராஜ்யம் கொடுக்கவோ, பூரணசுயேச்சை ஏற்படுத்தவோ அல்ல என்பதை நாம் எங்கிருந்தும் ருஜுப்பிக்கத் தயாராய் இருக்கிறோம். இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் சம்பாதிப்பது என்பது மாத்திரம் அல்லாமல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்றென்றும் நிலைக்கச் செய்து இரண்டு தேசத்தையும் ஒன்றாகக்கட்டி பிணைப்பது என்பதும் காங்கிரசின் முக்கிய கொள்கையாக இருந்து வந்தது என்பதையும் எப்பவும் ருஜுப்பிக்கத்தயாராய் இருக்கிறோம். காங்கிரசின் முக்கிய தீர்மானமே ராஜவிஸ்வாசப் பிரமாணமும், பிரிட்டிஷ் ஆட்சி என்றென்றும் இந்தியாவின் மீது இருக்கவேண்டும் என்றும் கடவுளை வேண்டிக் கொள்ளும் தீர்மானமும், ராஜ வாழ்த்துத் தீர்மானமுமாக இருந்தது என்பதை 1920ம் வருஷம் வரையில் இருந்து வந்தது என்பதையும் மெய்ப்பிக்கவும் ஆதாரம் காட்டவும் தயாராய் இருக்கிறோம்.
இன்றும் கூட தோழர்கள் காந்தியார், ஜவஹர்லால், பட்டேல் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்யும் சமதர்ம வீரர்கள் தேர்தலுக்கு சமதர்மத்தின்மீது நிற்கும் சமதர்ம வாதிகள் தோழர் ரங்கா உள்பட இந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு விஸ்வாசமாய் இருப்பதாகவும், பிரிட்டிஷ் அரசரிடமும், அரச பின் சந்ததி இடமும் பக்தியாய் இருப்பதாகவும், பிரிட்டிஷ் அரசியல் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடப்பதாகவும் பிரமாணம் அதுவும் அவரவர்கள் இஷ்ட தேவதையை வேண்டி பிரமாணம் செய்து விட்டு ஸ்தானத்தில் அமரவே அந்தப்படி பிரமாணத்தின்படி நடந்து கொள்ளவே சட்ட சபைக்கோ, ஸ்தல ஸ்தாபனத்துக்கோ செல்லுகிறார்கள் என்பதையும் யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைவதிலும், சட்ட சபையில் முட்டுக்கட்டை போட்டு அரசியலையோ சீர்திருத்தத்தையோ உடைப்பது என்பதிலும் கடுகளவாவது நாணையமோ அறிவோ இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை காங்கிரசின் பேரால் செய்யப்படும் காரியங்கள் இந்நாட்டுப் பார்ப்பன ஆதிக்கத்துக்காகச் செய்யப்படும் காரியங்கள் என்றும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்காகச் செய்யப்படும் முயற்சிகளை ஒழித்து இந்நாட்டில் “பிராமணர்” “சூத்திரர்” என்கின்ற இரண்டு வகுப்பை நிலை நிறுத்தி மனு ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கும் காரியங்கள் என்றும், குறிப்பாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் உள்பட ஒவ்வொரு முக்கிய வகுப்புக்கும் ஏற்பட்டிருக்கும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தையும், வகுப்பு உரிமையையும் ஒழிக்கவே சூட்சி செய்யப்படுகின்றதென்றும் நாம் இந்த 10, 12 வருஷங்களாகவே சொல்லி வருகின்றபடியே இன்றும் சொல்லுகின்றோம்.
ஆகவே இன்றைய தேர்தல் போரில் பார்ப்பனரல்லாத மக்கள் காங்கிரசின் பேரால் சொல்லப்படும் பொய் பித்தலாட்டமான பேச்சுகளுக்கும், செய்யப்படும் காலித்தனமான காரியங்களுக்கும், கோடாலிக் காம்புகளுடைய கூலி விஷமப் பிரசாரங்களுக்கும் யாரும் ஏமாந்துவிடாமல் இரண்டு கட்சியின் உண்மை யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் முன் பின் நடத்தைகளையும் நன்றாய் உணர்ந்து பிறகு தங்கள் தங்கள் ஓட்டுகளை பயன்படுத்தும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 27.12.1936