காங்கிரஸ் தலைமைப் பதவி

இந்திய தேசீய காங்கிரசின் தலைமைப்பதவிக்கு தோழர் ஜவஹர்லாலின் மோகமானதுமான அவமானத்தைக்கூட கவனிக்க முடியாமல் செய்துவிட்டது.

சமதர்மத்தை பிரசாரம் செய்வதில்லை என்றும், பதவி ஏற்பு மறுப்பை பிரசாரம் செய்வதில்லை என்றும் வாக்குகொடுத்து தலைவர் பதவியை கேட்க வேண்டிய அளவுக்கு துணிந்துவிட்டார்.

“என்னை தலைவனாக தேர்ந்தெடுத்தால் எனது கொள்கையை நீங்கள் ஒப்புக்கொண்டதாக அர்த்தமல்ல, சமதர்மத்தை அனுமதித்ததாக அர்த்தமல்ல, பதவி மறுப்பை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல” என்று தானாகவே அறிக்கை விட்டிருக்கிறார்.

சென்னை பார்ப்பனர்கள் தோழர் ஜவஹர்லால் தலைவராகக் கூடாது என்று எவ்வளவோ தந்திரங்கள் செய்தார்கள். ஜவஹர்லாலின் யோக்கியதையற்ற தன்மையை தயவு தாக்ஷண்ணியமில்லாமல் வெளிப்படுத்தினார்கள். அவருக்கு தலைமைப்பதவி தகாது என்றும் இது சமயம் அவர் கூடாது என்றும் எவ்வளவோ எழுதினார்கள். கடசியாக காந்தியார் எங்கு ஜவஹர்லால் விறைத்துக்கொண்டால் தன்னைத் தூக்கி கீழே போட்டுவிடுவாரோ என்று பயந்து மற்ற இரு அபேக்ஷகர்களையும் பின் வாங்கிக்கொள்ளும்படி செய்துவிட்டார். அதனால் பண்டிதருக்குதான் தலைமைப்பதவி கிடைக்கலாம் என்று கருதும்படியான நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது.

2, 3 வருஷங்களுக்கு முன்பாகவே தோழர் சி.ஆர். ஆச்சாரியாருக்குக் கிடைத்திருக்க வேண்டிய இந்தப் பதவி இப்பொழுது கூட கிடைக்காமல் மூன்றாந் தடவையாக ஒரு வெத்தி வேட்டுக்கு போய் சேருகிறது. அதுவும் அரசியல் உலகில் செல்வாக்கில்லாத நபருக்கு போய்ச் சேரப்போகிறது. இவையெல்லாம் காங்கிரசின் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறதே ஒழிய அதன் பொறுப்பையோ புத்திசாலித்தனத்தையோ காட்டவில்லை.

பண்டிதர் தேர்தலில் இருந்து வடநாட்டுப் பார்ப்பனர் தென்னாட்டுப் பார்ப்பனர் என்கின்ற பிரிவு உணர்ச்சி ஒன்று புதிதாக உற்பத்தியாக இடமேற்பட்டும் விட்டது.

பொதுவாக சொல்லவேண்டுமானால் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு பாடுபட்டவர்களில் தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் கூட 2வது மூன்றாவதாக ஆகத்தக்க வண்ணம் தோழர் ஜவஹர்லால் பிரயத்தனப்பட்டு அறிக்கை மேல் அறிக்கை வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விட்டு நயம் காட்டி பயம் காட்டி கொள்கைகள் என்பவற்றை விட்டுக்கொடுக்க இசைந்து பதவி பெற்றுவிட்டார். “பதவி மோகமற்ற” ஸ்தாபனத்தின் தலைவர் யோக்கியதையைப் பாருங்கள்.

குடி அரசு கட்டுரை 06.12.1936

You may also like...