திருவாங்கூர் பிரகடனம்

திருவிதாங்கூர் அரசாங்கமானது தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட கோவில்களை தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட சகல வகுப்பு இந்துக்கள் என்பவர்களும் சென்று வணங்கலாம் என்று அனுமதி அளித்து அரச பிரகடனம் பிறப்புவித்துவிட்டது.

அந்த ராஜ்யமானது வைதீகப் பித்தும் வருணாச்சிரமக் குரும்பும் கொண்ட ராஜ்யமாகும். விவேகாநந்தர் அந் நாட்டை ஒரு பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரி என்று சொன்னார். தோழர்கள் லஜபதிராய் அவர்களும், காந்தியாரும், பண்டித ஜவஹரும் அந்நாட்டிற்குச் சென்றிருந்த காலையில் அவர்கள் கோவிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை.

அந் நாட்டின் தீட்டின் தன்மையானது மனிதனை மனிதன் கண்ணால் பார்ப்பதினாலும், நிழல் மேலே படுவதினாலும், பேசுவதினாலும் ஒட்டிக் கொள்ளக்கூடிய அவ்வளவு கொடுமையான தன்மையது என்று சொல்லலாம். அதோடு இன்ன இன்ன ஜாதி இவ்வளவு இவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்ற தூர வித்தியாசமும் உண்டு. கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இழிவும் கொடுமையும் உண்டோ அதேபோல் அந்நாட்டில் மேல் ஜாதியார் என்பவர்களுக்கும் உயர்வும் சௌகரியங்களும் போக போக்கியங்களும் உண்டு. அதாவது,

ஒருவன் பார்ப்பான் என்று சொல்லிக்கொள்ளுவானானால் அவனுக்கு ஆயுள் உள்ள அளவும் அரசாங்க சத்திரங்களில் அப்பளம், வடை பாயாசத்துடன் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு மாத்திரமல்லாமல் பெண்கள் விஷயத்திலும் பார்ப்பனன் என்பவர்களுக்குக் குறையே இருக்காது. பார்ப்பானுக்குப் பெண் விஷயத்தில் உள்ள சௌகரியத்திற்கு இரண்டொரு உதாரணம் கூறலாம். அதாவது ஒரு மலையாளியைப் பார்த்து ஒரு நம்பூதிரிப் பார்ப்பான் “அடே சுகுமார உன் பாரியை மிகுந்த சவுந்திரவதி என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?” என்றால், “அவடத்திய கடாக்ஷத்தால் ஆமாம் சுவாமிகளே” என்று பதில் சொல்லுவதும் அதற்கு அந்தப் பார்ப்பனன்,

“அப்படியானால் நாம் அவாளை அனுபவித்துப் பார்க்க வேண்டாமா” என்றால் “பாக்கியம் பாக்கியம்” என்று கூறிக்கொண்டு ஆனந்தக் கடலில் மூழ்கி குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓடோடிப் போய் பாரியாளை அழைத்து வந்து பார்ப்பானிடம் ஒப்புவித்து “அவடத்திய சவுகரியம் போல் அனுப்பிக் கொடுக்கலாம்” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போவதும், மற்றும் பெரிய வீடு பாரம்பரியமாய் பெருமை உள்ள குடும்பம் என்பவைகளில் உள்ள பெண்கள் தங்கள் பார்ப்பனர்களை கணவனாகக் கொள்வதிலும் சொல்லிக்கொள்வதிலும் பெருமை அடைவதும் அப்பார்ப்பனர்கள் தங்களுக்கு புருஷனாய் இருப்பதற்காக சம்பளம் 100, 200 என்பதாக ராயல் குடும்பம் என்பது வரையில் கொடுப்பதும் வழக்கமாகவும் பெருமையாகவும் இருந்து வந்த நாடாகும். இப்போது மற்ற எல்லாத் துறைகள் போலவே இதிலும் சில மாறுதல் இருக்கலாம்.

மற்றும் பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளை அரசாங்கம் கண்டிராக்ட் விடுவதும் கண்டிராக்டில் எடுத்தவர் இலை ஒன்றுக்கு காலணாவுக்கு குறையாமல் அரையணா ஒரு அணாவுக்கு விற்பதுமான ராஜ்யமாகவும் இருந்தது. அப்படிப்பட்ட சுயமரியாதையும் மனிதத் தன்மையும் பகுத்தறிவும் குறைந்திருந்த அந்த நாடானது அந்நாட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட சுயமரியாதை உணர்ச்சியின் காரணமாக இப்போது ஒரு பெரும் புரட்சிகரமான சேதியையும் செய்கையையும் கேட்கவும் பார்க்கவுமான தன்மை ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இந்த திருவாங்கூர் அரச பிரகடனத்தைக் கண்ட பலர் இப்பிரகடனம் ஏற்படக் காரணமாய் இருந்தது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதாகக் கருதுகின்றனர் எழுதுகின்றனர் பேசுகின்றனர். அதோடு கூடவே சிலர் தோழர் ஈ.வெ. ராமசாமியையும் பாராட்டி பேசியும் எழுதியும் நேரில் கடிதங்களும் எழுதுகிறார்கள்.

மற்றும் ஒரு சிலர் இதற்கு காங்கிரசு தான் காரணம் என்றும் காந்தியார் அனுமதி அளித்ததென்றும் பலவிதமாக எழுதி மக்களை மயக்குகின்றார்கள். திருவாங்கூர் பிரகடனத்துக்கு காங்கிரசோ, காந்தியாரோ, வைக்கம் சத்தியாக்கிரகமோ சிறிதும் சம்மந்தமில்லை என்பதை முதலில் மக்கள் உணர வேண்டுகிறோம். இப்பிரகடனம் மனித சமூகத்துக்கோ நாட்டுக்கோ நன்மையா தீமையா என்பது ஒரு பெரிய கேள்வி என்பதாய் இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை இப்பிரகடனம் மனித சமூகத்துக்கு இந்திய நாட்டுக்கு சிறப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஒரு விதத்தில் கேட்டை விளைவிக்கக்கூடியது என்பதே நமது அபிப்பிராயம். இது ஒரு புறமிருக்கட்டும். இப்போது மக்கள் இப்பிரகடனத்தை ஒரு நன்மையாகவும் பெருமையாகவும் கருதுவதாலேயே அரசியல் வாழ்வுக்காரர்களும் அரசியல் பத்திரிகைகளும் இதை காங்கிரசினாலும் காந்தியாலும் ஏற்பட்ட பயன் என்று சொல்லி பொய்ப் பெருமையை காங்கிரசுக்கு சம்பாதித்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள்.

முதலாவது வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கும் காந்தியாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மக்கள் உணர ஆசைப்படுகிறோம். வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டதானது தோழர்கள் டி.கே. மாதவன், கே. அய்யப்பன் முதலிய ஈழவ சமூக சீர்திருத்தத் தலைவர்களால் திடீரென்று துவக்கப்பட்டதாகும். அதில் தோழர்கள் கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப்பு முதலிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள். திருவாங்கூர் சர்க்கார் ஒரே அடியாக எல்லா பிரமுகர்களையும் ஆரம்பித்த உடனே கைதிசெய்து விட்டார்கள். சத்தியாக்கிரகத்தை நடத்த ஆளில்லாமல் போய்விட்டது. தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், கே.பி. கேசவமேனன் அவர்களும் “நிலைமை மோசமாகி விட்டதால் நீங்கள் உடனே வந்து சத்தியாக்கிரக தலைமையை ஏற்று நடத்தாவிட்டால் பெருத்த அவமானத்துக்கு இடம் ஏற்படும்” என்று தந்தியும் கடிதமும் ஆளும் தோழர் ஈ.வெ. ராமசாமிக்கு அனுப்பினார்கள். தோழர் ஈ.வெ.ரா. தன் சொந்த முறையிலேயே உடனே சென்றார். அதன்பிறகு காந்தியார் ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் அதற்கு பூரண அனுமதி அளிக்காமல் சில ஆக்ஷேபணைகள் கிளப்பினார்கள். கடசியாக ஈ.வெ.ரா. பிடிவாதத்தின் மீதும் சத்தியாக்கிரகம் எல்லா இந்திய விஷயமாகிவிட்ட பிறகும் சத்தியாக்கிரகத்தில் தாங்களும் கலந்திருப்பதாக காட்டிக் கொண்டார்கள். வைக்கம் சத்தியாக்கிரகம் கூடாது என்று ஆச்சாரியாரும் காந்தியாரும் எழுதிய கடிதங்கள் தமிழ்நாடு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும்,

தோழர் காந்தியார், தோழர் ஜார்ஜ் ஜோசப்பை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியேறும்படி சொன்னதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சத்தியாக்கிரகத்துக்கு பண உதவி செய்து நடத்த வந்த சீக்கியர்களை வெளியேறும்படி சொன்னதற்கும் ஆதாரங்கள் உண்டு. இம்மாதிரி இன்னும் பலவித தொல்லை கொடுத்து வந்தார்கள். இது விஷயங்களை எல்லாம் அப்போதைய “தமிழ்நாடு” வாரப் பத்திரிகையில் நன்றாய்க் காணலாம்.

இந்த நிலை ஒருபுறமிருக்க வைக்கம் சத்தியாக்கிரகம் நடக்கும் ரோட்டைப் பொறுத்ததே தவிர கோவிலைப் பொருத்ததல்ல என்று காந்தியார் அப்போது 100 தடவை வெளிப்படுத்தி அப்பொழுது “அரசாங்கத்தாருக்கு வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கும் கோவில் பிரவேசத்திற்கும் சம்மந்தமில்லை” என்று வியக்தமாகச் சொல்லப்பட்டு வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. இந்தியா பூராவிலுமே வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றுதான் அதுவும் சுதேச மன்னர் ராஜ்யத்தில் ஜெயித்தது என்றாலும் அது எந்த விதத்திலும் இந்த கோயில் பிரவேச பிரகடனத்திற்கு சம்பந்தம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் கூறுவோம். அதிலும் காந்தியாருக்கும் கோவில் பிரவேச கூட்டத்திற்கும் சிறிது கூட சம்மந்தமில்லை என்பதற்கும் ஆதாரங்கள் பல கூறலாம்.

தோழர் காந்தியார் எந்த சீர்திருத்தமும் அதுவும் கோவில் நுழைவு “சீர்திருத்தம்” சட்டத்தின் மூலம் செய்யக் கூடவே கூடாது என்று சொன்னவர்.

சமீபத்தில் இந்திய சட்டசபையில் இந்த ரங்கய்யர் கோவில் நுழைவு மசோதாவை கொலை செய்தவர். மற்ற இந்திய சட்டசபை மெம்பர்களுக்கும் அப்படிப்பட்ட மசோதாவோ வேறு எந்த சமூக சீர்திருத்த சம்பந்தமான மசோதாவோ சட்டசபைக்குக் கொண்டுவரக்கூடாது என்றும் சொன்னவர். காங்கிரஸ்காரர்களும் தோழர் ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார், டாக்டர் ராஜன் ஆகியவர்களும் சீர்திருத்தத்திற்கு எவ்வித சட்டமும் கூடாது என்றவர்கள்.

சீர்திருத்த காரியங்களுக்கு சத்தியாக்கிரகம் செய்யக்கூடாது என்றும் சொன்னவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள காந்தியாரும் காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் வைக்கம் சத்தியாக்கிரகமும் திருவாங்கூர் கோவில் நுழைவு பிரகடனத்துக்கு காரணம் என்றோ, சம்மந்தம் உண்டு என்றோ சொல்ல யாராவது வருவார்களானால் அவர்கள் இழி தன்மைக்கும் அல்லது அறிவீனத்துக்கும் வருந்தவேண்டியதே அல்லாமல் வேறில்லை. இதுவிஷயமாய் “தலைவர்கள்” நடத்தை பற்றி இன்னும் அனேக ரகசியங்கள் உண்டு. அதை இப்போதும் வெளியிட நாம் விரும்பில்லை.

ஆனால் “இந்தப்பிரகடனத்துக்கு ஒன்றுமே காரணம் இல்லையா? திடீரென்று அரசருக்கோ திவானுக்கோ தோன்றிய ஞானோதயமா?” என்று சிலர் கேட்கலாம். காரணம் உண்டு என்பதாகவே பதில் கூறுவோம். அந்த பதில் என்னவென்றால் இப்பிரகடனத்துக்கு ஆக மகாராஜாவை வாழ்த்தி பாராட்டி வரும் விஷயங்களைப் பார்த்தால் அக்காரணம் என்ன என்பது விளங்கிவிடும் என்பது ஒன்று.

அதாவது அனேகமாக பெரும்பாலும் ஒவ்வொரு வாழ்த்துதலிலும் பாராட்டுதலிலும் “இந்துமதத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சமயத்தில் மகாராஜா இந்த பிரகடனத்தின் மூலம் உதவி செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினார்” என்பது மிளிர்கின்றதைப் பார்க்கலாம்.

ஆகவே, இந்து மதத்திற்கு இன்று ஏற்பட்ட நெருக்கடி என்ன? இத்தனைநாள் இல்லாத நெருக்கடி இப்போது என்ன வந்துவிட்டது? என்பவைகளை யோசித்துப்பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். “புத்தர், சமணர், முஸ்லீம்கள் ஆகியவர்கள் காலத்தில் நால்வர், ராமானுஜர் செய்தது போல்” என்று பலர் பாராட்டுதல்களில் குறிப்பிட்டிருக்கிறார்களே இதன் இரகசியமென்ன? இவற்றிற்கு காரணங்கள் கண்டு பிடித்தால் அந்தக் காரணங்கள்தான் இந்த பிரகடனத்துக்கு காரணம் என்று சொல்லுவோம். களிமண்ணு மாளவியா பண்டிதர் இப்போது ஏன் பேசவில்லை? சனாதனப் புலிகளின் வாய் ஏன் புளிஇட்டு அடைக்கப்பட்டு விட்டது? மகாகனம் சாஸ்திரியின் சர்வாதிகாரக் கனவுகள் எங்கே போயின? “சோஷியல் ரிபார்மர்” பத்திராதிபர் தோழர் கே. நடராஜன் போன்றவர்களின் சூழ்ச்சி உபாயம் இப்போது எங்கே தூங்குகிறது? ஆகவே இந்தப் பதில்களில் தான் திருவாங்கூர் பிரகடனத்தின் பிறப்பு அஸ்திவாரம் கர்ப்பதானம் இருக்கிறது என்போம்.

அதென்ன வென்றால் அதுதான் “இந்து மதம் ஒழிய வேண்டும், கோவில்கள் இடிபட வேண்டும், எல்லோரும் முஸ்லீம்களாக வேண்டும், நாஸ்திகமே பரவவேண்டும்” என்ற பிரசாரமும் அனேக மகாநாட்டுத் தீர்மானங்களும் ஈழவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களது மகாநாட்டு தீர்மானமும் இவர்களில் பலர் முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர் களாகவும், சீக்கியர்களாகவும், மதம் மாறினதும் அம்பேத்கார் வெடிகுண்டும் சுயமரியாதைக்காரர்களின் டம் டம் குண்டும் இதற்கு முன்னின்றவர்கள் பிரசாரங்களும் முதலாகியவைகளே யாகும்.

அன்றியும் உண்மையிலேயே கோயில், இந்துமதம் முதலியவை ஒழியவேண்டும் என்பவர்களுக்கு இந்த பிரகடனம் விரோதமானது தான். அதனால்தான் மகாராஜாவை பாராட்டினவர்கள் பெரும்பாலோர் “நல்ல சமயத்தில் இந்து மதத்தைக் காப்பாற்றினீர்கள்” என்று பாராட்டினார்கள். என்ன நல்ல சமயம் என்றால் இந்துமதம் ஒழியப்போகிற சமயத்தில் என்பது தவிர வேறு என்னமாய் இருக்கும்? சிலர் பொறுப்பில்லாமலோ வீண் ஜம்பமாகவே பெருமை பேசிக்கொள்ளலாம். “இந்து மதத்தை அழிக்க யாராலும் ஆகாது” என்று பேசலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையில் வெகு சங்கதி ஆடிப்போய்விட்டது.

கோவில் பிரவேசம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டுமென்று 1928ல் தோழர் ஈ.வெ. ராமசாமி தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்டாய் இருந்த காலத்திலேயே அவர் போர்டில் தீர்மானிக்கப்பட்டது. அதனால் பிறகு கோயில் பிரவேசம் செய்தவர்கள் சர்க்காரால் தண்டிக்கப்பட்டதும் ஹைகோர்ட்டில் விடுதலையானதும் பிறகுசட்டம் ஏற்பட்ட பிறகுதான் அது செய்யப்பட வேண்டுமென்று கருதி சட்டம் செய்ய முயற்சித்ததும் காந்தியார் சத்தியமூர்த்தியார் போன்றவர்கள் சட்டம் கூடாது என்று தடுத்ததும் சாரதா சட்டம் போன்றதற்கே காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி “என் மகளுக்கு சாரதா சட்டத்தை மீறி சிறுவயதில் கல்யாணம் செய்து நான் ஜெயிலுக்கு போகப்போகிறேன்” என்று சொல்லி பொது ஜனங்களை கிளப்பி விட்டதுமான காரியங்களுக்கு பிறகுதான் கோவில்கள் இடிக்கப்படவேண்டும் இந்துமதம் அழிக்கப்படவேண்டும் முஸ்லீம் மார்க்கத்தில் சேரவேண்டும் என்பவையான பிரசாரம் பலமாய் தொடங்கப் பட்டது என்பதும் யாவரும் உணர்ந்ததேயாகும்.

அவைகளை தொடங்கினவர்கள் பொதுஜனங்களால், தங்கள் கூட்டத்தாரால், தங்களை பின்பற்றுபவர்களால் எவ்வளவுதான் மதத்துரோகி, தேசத்துரோகி, அரசாங்க அடிமை பயங்காளி கீழ் நோக்குக்காரர் என்றெல்லாம் வையப்பட்ட போதிலும் பாமர ஜனங்களிடம் செல்வாக்கு இழந்த போதிலும் அதன் பலன்கள் மாத்திரம் இன்று திருவிதாங்கூர் கோவில் கதவு திறக்கப்படக்கூடிய நிலைக்கும் மற்றும் பல பழக்கவழக்கங்கள் பிடிவாதங்கள் ஒழியக்கூடிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டன.

இப் பிரகடனத்தில் பலவித சூழ்ச்சிகள் இருந்தாலும் இருக்கலாம். எப்படியோ ஆகட்டும், சூழ்ச்சி வெற்றி பெறட்டும். அதையும் அனுகூலமாய் பயன்படுத்திக்கொள்ள நாம் அதைரியப்படவில்லை. என்றாலும் 5, 6 வருஷத்துக்கு முன் இந்து சாஸ்திரங்கள் ஸ்மிருதிகள் என்பவைகளுக்கு விரோதமாய் எப்படி பெண்களுக்கு புஷ்பவதியான பிறகு தான் கல்யாணம் செய்யவேண்டுமென்று சட்டம் செய்யப்பட்டதோ அதேபோல் இப்போது துருப்பிடித்த செல்லரித்த ஆகமங்களுக்கு விரோதமாய் எல்லா (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் கோவில் நுழைவு உண்டு என்று பிரகடனம் போட்டதும் அதை சத்தியமூர்த்தி உள்பட அதாவது தன் மகளை “புஷ்பவதி ஆகு முன் கல்யாணம் செய்து ஜெயிலுக்குப் போய் சாரதா சட்டத்தை ஒழிப்பதற்கு உயிரை விடுவேன்” என்று சௌரியம் கூறிய சத்தியமூர்த்தி உள்பட ராஜாவையும் (மந்திரியை) திவானையும் பாராட்டுவதுமான காரியம் ஏற்பட்டு விட்டது பெரிய காரியம் என்றும் இது ஒரு புரக்ஷி காரணமானது என்றும் மக்களுக்கு இனி எவ்வித புரக்ஷியும் செய்யலாம் செய்தால் முடியும் என்று கருதும்படியானதுமான காரியம் என்றும் கூறுவோம். அன்றியும் இப்போது கோவில் பிரவேசத்தைப் பற்றி நாம் ஆச்சரியமோ மகிழ்ச்சியோ அடையவில்லை. ஆனாலும் இந்துமத ஆதாரங்களில் தீ வைக்கப்பட்டதற்கும் அத்தீய்க்கு பார்ப்பனர்களே இன்று ஆகுதி செய்வதற்கும் நாம் மகிழ்ச்சியும் தைரியமும் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் சீர்திருத்தத்திற்கு சட்டம் செய்ய ஒருப்படாதவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும். இதை அவர்தான் இந்திய சட்டசபை தேர்தலுக்கு நிற்கும்போது கும்பகோணத்து வருணாச்சிரமி களுக்கு சொன்ன பதிலில் விளக்கியிருக்கிறார். அவர்பார்த்து இப் பிரகடனத்தை நிறுத்தி இருந்தால் நிறுத்தி இருக்கக் கூடுமானாலும் அவருடைய போட்டி நண்பர் தோழர் சர். ஷண்முகம் செட்டியார் ஓடுகிற ஓட்டத்தில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போல் கொச்சி ராஜ்யத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ பிரகடனம் செய்யச் செய்துவிட்டார். அதனால் 100க்கு 45, 50, 75 வீதம் உத்தியோகம் பெற்றுவந்த பார்ப்பனர்கள் 100க்கு 2 வீதமே பெறும்படியாகவும் 100க்கு 2 வீதம் கூட பெறக்கூடாமல் இருந்த ஈழவர்கள் 100க்கு 22 பெறும்படியாகவும் செய்து ஒரே அடியாய் நல்ல பேர் வாங்கிவிட்டார்.

இதை எந்தப் பார்ப்பானும் தேசியவாதியும் பாராட்டவில்லை. ஆனாலும் உள்ளூர 10 லக்ஷக்கணக்கான மக்களின் உள்ளத்தில் அன்பு உருவமாய் ஊசலாடிக்கொண்டு இருக்கும் பேற்றை அடைந்துவிட்டார். இதை உண்மையில் கண்ட தோழர் ராமசாமி அய்யர்தான் ஏதாவது செய்து ஒரு நல்ல பெயரை வாங்கவேண்டாமா என்பது முள்ளு முனையில் இருந்து தவம் செய்யவேண்டிய தேவை போல் இருந்துவந்தது மற்றொரு காரணமாகும்.

இவற்றையெல்லாம்விட மற்றொரு காரணம் அதுவும் சரியான காரணம் என்னவென்றால் திருவாங்கூர் ராஜ்யம் சுமார் 45 லக்ஷம் ஜனத் தொகை கொண்டது. இதில் கிட்டத்தட்ட 20 லக்ஷம் கிறிஸ்தவரும், 4, 5 லக்ஷம், முஸ்லீம்களுமாக இப்போதே தோட்ட விஸ்தீரணத்தில் பகுதிக்குமேல் கிணறு என்பது போல் திருவாங்கூர் (இந்து மகாராஜா) பிரஜைகளில் பகுதிக்கு மேல் வேறு மதக்காரர்களாக இருக்கிறார்கள். மீதி உள்ள இந்துக்கள் என்பவர்களும் சுற்று (பாம்பேரி) கட்டிடம் இல்லாத கிணறு நாளுக்கு நாள் ஓரம் இடிந்து சரிந்து கிணறே தோட்டமெல்லாம் விழுந்துவிடுவதுபோல் மக்கள் நாளுக்கு நாள் வேறு மதத்தில் சேர ஆரம்பித்து விட்டார்கள். வேறு மதத்தில் சேர இஷ்டமில்லாதவர்கள் இந்து மதத்தையே அடியோடு விட்டுவிட தீர்மானித்து விட்டார்கள். சகல மதக்காரர்களும் லக்ஷம் இரண்டு லக்ஷம் ரூபாயுடன் மதமாற்ற வியாபாரம் அங்கு ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலை இப்படியே இருந்தால் நாளைக்கு மகாராஜாவின் பாடே அவர் எந்த மதம் என்பது திண்டாட்டமாய்விடும் நிலைமை ஏற்படலாம். ராஜ்யம் கிறிஸ்து அல்லது முஸ்லீம் ராஜ்யமாகக்கூட ஆகிவிடலாம். ஆகவே தனது பிரஜைகள் பகுதியாவது இந்துக்களாய் இருக்கட்டுமே என்கின்ற ஆசையே இந்தப் பிரகடனத்துக்கு கல்லுப் போன்ற உறுதியான காரணமாகும்.

ஆகையால் இப்படிப்பட்ட பிரகடனத்தை அதற்கு எதிரிகளாய் இருந்த காந்தியாராலும் காங்கிரசாலும் பார்ப்பன தலைவர்களாலும் ஏற்பட்டது என்று சொல்லுவது அறிவீனம் என்றே சொல்லுவோம். தங்களுக்கு இது விஷயத்தில் போதிய அறிவு இருக்கிறது, நன்றாய் ஆராய்ந்து பார்த்துத்தான் சொன்னோம் என்று யாராவது சொல்வாரானால் மற்றபடி அதை மாற்றி வடிகட்டின அயோக்கியத்தனம் என்று சொல்ல மடிகட்டி நிற்கிறோம்.

குடி அரசு தலையங்கம் 22.11.1936

You may also like...