பட்டம் துறந்த பதி விரதைகள்
காங்கிரசின் பேரால் சட்டசபை தேர்தலுக்கு நிற்பவர்கள் தங்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட பட்டங்களை துறந்துவிடவேண்டும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு நாணயமானது என்பது நமக்கு இன்னமும் விளங்கவில்லை. இந்த நிபந்தனை சென்னை மாகாணத்துக்கு மாத்திரமா அல்லது இந்தியா பூராவுக்குமா அல்லது தோழர் ராமலிங்க செட்டியார், ரத்தினசபாபதி முதலியார் ஆகிய இருவர்களுக்கு மாத்திரமா என்பது விளங்கவில்லை.
தோழர் சுப்பராயன் அவர்கள் இன்னமும் அரசாங்க நியமனம் சில வகித்து வருகிறார். ஏதேதோ கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். காங்கிரசைச் சேர்ந்த வேறு சில அங்கத்தினர்களுக்கும் சில நியமனங்கள் இன்னும் இருக்கின்றன.
அதிக தூரம் போவானேன் திவான் பகதூர் பட்டம் துறந்த தோழர் மாஜி திவான்பகதூர் ராமலிங்க செட்டியார் அவர்களுக்கு சென்னை அரசாங்கத்தாரில் அதுவும் மந்திரிமார்களால் நியமனம் செய்த சில பதவிகள் இருக்கின்றன.
தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கும் மந்திரிகளால் நியமனம் பெற்ற சில பதவிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ராஜினாமா செய்யாமல் அந்த உத்திரவுகளை திருப்பி அனுப்பாமல் பட்டங்களை மாத்திரம் விட்டுவிட்டோம் என்றால் இதற்கு அர்த்தம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
நாளைக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்றும் மந்திரி பதவி கேட்பதற்கு இதனால் ஒரு “சட்ட பூர்வமான” உரிமை ஏற்பட்டு விடும் என்றும் மனப்பால் குடித்துக்கொண்டு ஒரு இரவு கூத்துக்கு மீசையை சிறைத்துக் கொண்டது போல் பட்டங்களை துறந்துவிட்டேன் என்று சொல்லுவது சுத்த பைத்தியக்காரத்தனம் என்றே சொல்லலாம்.
இவ்விருவர்களும் சட்டசபை ஸ்தானங்களை எதிர்பார்த்து பட்டங்களை விடவில்லை என்பதை நாம் உண்மையாகவே ஒப்புக் கொள்ளுகிறோம். எப்படி எனில் இவ்விரு தோழர்களுக்கும் எப்படியானாலும் சட்டசபை ஸ்தானம் ஆளுக்கு ஒன்று கோவை ஜில்லாவில் தாராளமாய் கிடைக்கலாம். ஒரு சமயம் செட்டியார் பாடு சிறிது தகராறாய் இருக்கும் என்று சொன்னாலும் முதலியாருக்கு மூன்று இடங்களில் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம். ஆதலால் இவர்கள் பட்டம் துறந்ததின் லக்ஷியம் மந்திரி வேலைக்கு ஆசைப்பட்டேதான் இருக்கவேண்டும் என்று கருதவேண்டி இருக்கிறது. இது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டு அரசனும் புருஷனும் அதோடு போய் விட்டார்கள் என்கின்ற பழங்காலப் பெண்மக்கள் பழமொழிக்கே ஒப்பாகும்.
இது எப்படியோ ஆனாலும் இவர்கள் செய்கை புத்திசாலித்தனமான தென்றோ நாணையமானதென்றோ சொல்லமுடியாமைக்கு வருந்துகிறோம்.
ஏன் எனில் இப்பொழுது எதற்காக சர்க்கார் அளித்த பட்டத்தை வாபீஸ் செய்யவேண்டும்? நாளைக்கு இந்த சர்க்கார் முகத்தில் விழிக்க வேண்டாமா? அல்லது விழிப்பதில்லை என்கிற தீர்மானமா? அப்படியானால் சீர்திருத்தத்தை உடைக்க இவர்கள் சட்டசபைக்கு போகிறார்களா? மந்திரி பதவி கிடைத்தால் அதை இவர்கள் சர்க்காரை முறியடிக்க அதைப் பயன் படுத்துவார்களா? அல்லது காங்கிரஸ் நாளை சீர்திருத்தத்தை ஏற்று அதனால் கூடியவரை மக்களுக்கு நன்மை செய்வது என்கின்ற சத்தியமூர்த்தியார் கொள்கை நிறைவேறினால் இவர்கள் பட்டம் துறந்தது என்ன ஆவது?
தவிர, சர்க்காரிடம் இவர்கள் பட்டம் வாங்கிக் கொண்டதின் கருத்து என்ன? அதற்கு விரோதமாக இப்போது நாட்டில் என்ன ஏற்பட்டு விட்டது? சர்க்கார் அப்போது செய்யாத கொடுமை என்ன இப்போது செய்தார்கள்? அல்லது இப்போது புதிதாக சர்க்கார் நடத்தையில் ஏற்பட்ட தாங்கமுடியாத கெடுதி என்ன? என்பவைகளை கவனிக்க வேண்டாமா? அல்லது உலகில் வேறு புத்திசாலிகள் எவரும் இதை கவனிக்க மாட்டார்களா? என்று கேட்கின்றோம்? ஒரு சிறு சந்தர்ப்பத்தை சமாளிக்க முடியாமல் பலவீனப்பட்டு இம்மாதிரி மூளை குழம்பி நடந்துகொள்கிற இவர்கள் எப்படி ஒரு ஜனசமூகத்துக்கு பிரதிநிதியாக யோக்கிய முடையவர்களாவார்கள் என்பதை பொது ஜனங்கள் யோசிக்கவேண்டியது மிகவும் முக்கியமான காரியமாகும்.
சர்க்காரை ஏமாற்றின இவர்கள் சர்க்காருக்கும் இவர்களுக்கும் இருந்து வந்த நிலையை இவ்வளவு சீக்கிரத்தில் முடித்துக் கொண்டவர்கள் இனி காங்கிரசில் தான் இவர்கள் யோக்கியமாய் இருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? அல்லது பொது ஜனங்களிடமும் ஒரு நிர்ணயமாய் நடந்து கொள்வார்கள் என்பதற்கு இடம் தான் எங்கே என்றும் கேட்கவேண்டியிருக்கிறது.
இந்த இரண்டு பைத்தியக்காரர்கள் மாதிரி எந்தப் பார்ப்பனராவது நடந்து இருக்கிறார்களா என்பதைப் பொது ஜனங்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் புத்திசாலியாய் இருந்தால் இதே சமயத்தில் இவ்விரு பைத்தியக்காரர்கள் வகிக்கும் சர்க்கார் நாமினேஷன் பதவிகளையும் பார்சல் செய்து அனுப்பும்படி கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 15.11.1936