முஸ்லீம்களும் காங்கிரசும்
தோழர் தாவுத்ஷா சாயபு அவர்கள் முஸ்லீம்கள் பிரதிநிதியாக காங்கிரசில் இருப்பவர். அவர் மற்ற முஸ்லீம்களையும் காங்கிரசுக்கு வரும்படி அழைக்கிறவர். தோழர் சத்தியமூர்த்தியாரை அரசியல் குருவாகவும் தலைவராகவும் கொண்டு ஒழுகுகிறவர். எலக்ஷன் நடக்கும் ஊர்கள் தோறும் அழைப்பில்லாமலே சென்று காங்கிரஸ் அபேட்சகர்களை ஆதரிப்பவர். இவ்வளவு மாத்திரமில்லாமல் ராமாயண பாரத காலக்ஷேபம் செய்வதில் பார்ப்பன சாஸ்திரிகளை விட ஒருபடி முன்னணியில் இருப்பவர்.
இப்படி எல்லாம் நடந்தும் பார்ப்பனர் தங்கள் பரம்பரை வழக்கம்போல் தோழர் தாவுத்ஷாவை சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் கொடை கவிழ்த்தி விட்டார்கள். அவ்வளவோடு இல்லாமல் உலகம் அறிய பெரியதொரு அவமானத்தையும் உண்டாக்கி வைத்துவிட்டார்கள்.
கார்ப்பரேஷனுக்கு முஸ்லீம் பிரதிநிதியாக தோழர் தாவுத்ஷாவை ஒரு அபேட்சகராக ஏற்று அவரது பெயரை வெளியிட்டு உலகம் அறியச் செய்துவிட்டு கடசியாக மற்றொரு முஸ்லீமின் வசவுக்கும் கலகத்துக்கும் பயந்து தோழர் தாவுத்ஷாவை வெளியில் நெட்டித் தள்ளி விட்டு தோழர் ஷாபி மகமது சாயபு அவர்களை போட்டுவிட்டார்கள்.
தோழர் தாவுத்ஷா சாயபு தன்னை விலக்கி விட்டதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணமாவது சொல்லி பொது ஜனங்கள் முன்னிலையில் தனக்கு அவமானமில்லாமல் காப்பாற்றச் சொல்லிப் பார்த்தார். காங்கிரசுத் தலைவர் (பார்ப்பன மூர்த்தியார்) ஷாபி சாயப்புக்கு பயந்து கொண்டு அதுகூட செய்ய மறுத்து விட்டார். கடசியாக தாவுத்ஷா சாயபு எல்லா இந்திய காங்கிரஸ் தலைவருக்கு அப்பீல் செய்து இருக்கிறார். அப்பீல் நீதிபதி யார் என்பது சாயபுக்கு தெரியாதுபோல் இருக்கிறது. அவரும் ஒரு பூணூல் என்பதை மறந்தார் போலும். முடிவு என்ன? அசல் அநியாயம், அப்பீல் அதுவே காயம் என்று தான் ஆகப்போகிறது. ஆகவே கலகமும் கலாட்டாவும் செய்யத் தகுதியற்ற முஸ்லீம்களுக்கு காங்கிரசில் இடமில்லை என்பதை இனியாவது தோழர் தாவுத்ஷா சாயபு அறிந்து கொள்வாராக. இந்த சமயத்தில் மற்றொரு முஸ்லீம் தலைவர் இப்பார்ப்பனர்களால் எப்படி நடத்தப்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறோம்.
தோழர் எம். ஜமால் மகம்மது சாயபு ஒரு கோடீஸ்வரர். பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு பதினாயிரக்கணக்காக பணம் அழுதவர். பார்ப்பனர் பக்கமே சதா எதற்கும் கை தூக்குபவர். இன்றும் கூட தன்னைக் காட்டித்தான் ஒன்று இரண்டு முஸ்லீம்களையாவது காங்கிரசில் இழுக்க இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவர்.
இப்படிப்பட்ட இவர் ஒரு சமயம் இந்திய சட்டசபைக்கு (M.L.A.க்கு) ஒரு அபேக்ஷகராய் அதுவும் வியாபாரிகள் ஸ்தானத்துக்கு வியாபாரிகளின் பிரதிநிதியாக நிற்க முன்வந்தார். அது சமயம் ஒரு கோயமுத்தூர் பார்ப்பனரை “இந்து”, “சுதேசமித்திரன்” கூட்டம் தூக்கிவிட்டு அதாவது தோழர் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரை தூக்கிவிட்டு தோழர் ஜமால் மகம்மது அவர்களுக்கு விரோதமாய் போட்டி போட ஏற்பாடு செய்து விட்டார்கள். ஜமால் மகம்மது அவர்களுக்கு கண்விழி பிதுங்கும்படி செய்து விட்டார்கள். ராஜா சர். அண்ணாமலை செட்டியாருமே பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் ஏற்பட்ட மனக்கசப்புதான் இன்னமும் அவர்களுக்குள் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகராறு சற்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த பிறகு ஒரு வழியில் பார்ப்பனர்கள் அடங்கினார்கள். அப்போது தோழர் ஜமால் மகம்மதுக்கு பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற உணர்ச்சிதான் சிறிது உதவி அளித்தது. அதனாலேயே அந்த சந்தர்ப்பம் தோழர் ஜமால் முகம்மது சாயபு அவர்களே பார்ப்பனர்களை எப்பவும் நம்பக்கூடாது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டது. பிறகு சமய சந்தர்ப்பங்களை அனுசரித்து அதை மறக்க வேண்டியதாயிற்று. அதுபோலவே தோழர் தாவுத்ஷா அவர்களும் சமய சந்தர்ப்பங்களை அனுசரித்து மறக்க வேண்டியவராவார் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.
குடி அரசு துணைத் தலையங்கம் 08.11.1936