தீபாவளிப் பண்டிகை
இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் “நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான “பழய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பன ரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். “எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? “நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்” என்றால் அதற்கு “நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்” என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய “காளைமாடு எப்படி கன்றுப் போடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும் “புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற “படித்த” கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.
உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
~subhead
தீபாவளியின் கதைச் சுருக்கம்
~shend
ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம்.
அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.
தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம்.
உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம்.
அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம்.
நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்.
கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம்.
அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம்.
ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்.
இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா?
“எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி “தேவி”க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி “தேவி” என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்” என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
– ஈ.வெ.ரா.
குடி அரசு கட்டுரை 01.11.1936