தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்? – உண்மை கண்டோன்

 

இப்போது நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் காங்கரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பல ரசமான விவாதங்கள் நடந்தன. அதுசமயம் காங்கரஸ் தலைவர்களின் அந்தரங்க மனப்பான்மை வெளியாயிற்று. சட்ட சபைக் காங்கரஸ் மெம்பர்களுக்குள்ளேயே சிறு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தாய்ப்பாஷையபிமானமும், தேசீய வேட்கையுமுடைய எம்.எல்.ஏ. ஒருவர் காங்கரஸ் தலைவர்களைக் கண்டு நாம் சென்ற வருஷ ஆகஸ்டு மாதத்தில் நடந்த கமிட்டி கூட்டத்திலேயே இந்தியைக் கட்டாய பாடமாக வைக்கும்போது தாய்ப்பாஷையையும் கட்டாயமாக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோமே இப்போது தாய்ப் பாஷையைக் கட்டாயப்படுத்தாமல் இந்தியைக் கட்டாய பாடமாக்கியதால் தானே இவ்வளவு எதிர்ப்பு உண்டாகி விட்டது; தாய்பாஷையும் கட்டாய பாடமாகப் பத்தாம் வகுப்பு வரையில் இருக்க வேண்டுமென்று உத்தரவு செய்து விடுங்கள் என்று கேட்டார். உடனே, தலைவர் அவரை ஏற இறங்கப் பார்த்து உண்மையாகவா இப்படி கேட்கிறீர் என்று கேட்டு “தாய்ப் பாஷையை – தமிழைக் கட்டாயமாக்கினால் எப்படி இந்தி எதிர்ப்பு அடங்கிவிடும்?” என்றார். அதற்கு அவர் “இந்தியை எதிர்ப்பவர்களில் பெரும்பாலார் தமிழுக்கு ஆபத்து வந்ததென்று கருதுகிறவர்களே. இந்தியென்பது சமஸ்கிருதத்தின் கலப்புப்பிள்ளை என்று தெரிந்திருக்கிறது. இப்பொழுது தாய்ப் பாஷையின் ஸ்தானத்தில் சமஸ்கிருதம் இருக்கிறது. மாணவர்கள் தமிழோ சமஸ்கிருதமோ எதையேனும் ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர தாய்ப் பாஷையைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்ற நியதி கிடையாது. இந்தி கட்டாய பாடமானால் – இந்திக்கு செல்வாக்கு அதிகப்பட்டால் – பெரும்பாலார் இந்தியைச் சுலபமாய்க் கற்றுக்கொள்வதற்காக சமஸ்கிருதத்தைத் தான் எடுத்துக்கொள்வர். அதனால் தமிழ் செல்வாக்கு குறைந்து பெரிய ஆபத்துக்குள்ளாகி விடுமல்லவா” என்று கூறினார்.

தாய்மொழி அபிவிருத்தி வேண்டாமா?

தலைவர் “இதர பாடங்களைத் தமிழில் கட்டாயமாகச் சொல்லித்தரவேண்டுமென்று ஏற்பாடாகியிருக்கிறதே. அதனால் எப்படி தமிழ் கெட்டுவிடும்?” என்றார். உடனே மற்றவர் “இதர பாடங்கள் தமிழில் கற்பிக்கிறேன் என்பது உங்கள் ஏற்பாடல்லவே. ஏற்கெனவே தீர்மானித்திருக்கிற விஷயமாயிற்றே. மேலும் அவை யாவும் பாஷா பாடமல்ல. அவற்றால் மாணவர்களுக்கு பாஷாஞானம் உண்டாகாதே. சிறுவர்களுக்கு போதுமான பாஷா ஞானமே இல்லாதபோது பாஷா பாடமல்லாத பாடங்களைத் தமிழில் படித்தால் பாஷாஞானம் உண்டாகுமென்று சொல்லுவது தப்பல்லவா? எத்தனை பாஷைகளைப் படித்தாலும் ஒருவன் தன் தாய் பாஷையில் நல்ல அபிவிருத்தி பெறுவது தானே முக்கியமாகும். தமிழ் எப்படியும் கட்டாய பாடமாக வைக்கவேண்டியது அவசியம் தானே. ஆகையால் தமிழை உடனே கட்டாய பாடமாக வைக்கவேண்டும்” என்று வாதித்தார்.

தலைவர் “சரி, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது ஆந்திரர்கள் ஆந்திர மாகாணத்துக்குப் போராடுகிறார்கள். தமிழர்கள் தமிழ் கட்டாய பாடமாக வேண்டும் என்று வாதாடுவார்களானால் காங்கரஸ் பலவீனமாய் விடுமே. பிறகு எதிரிகள் கைகொட்டி சிரிப்பார்கள்” என்றார். இப்படி இவர்கள் பேச்சில் பல ரசமான மர்மங்கள் வெளியாயின.

சட்டசபைக் காங்கரஸ் மெம்பர்கள் கருத்து?

  1. தமிழைக் கட்டாயமாக்கினால் காங்கரஸ் பலவீனப்படும். இதன் மர்மம் என்ன? தாய் பாஷையில் ஜனங்களுக்கு மூடத்தனம் நிரம்பியிருக்க வேண்டும் என்பது காங்கரசின் முழுக் கொள்கை போல் இருக்கிறதல்லவா? தமிழர்கள் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று போராடினால் உடனே பிராமணர்கள் சமஸ்கிருதம் வேண்டும் என்பர். அதனால் காங்கரசுக்குள் தமிழ்க் கட்சி, சமஸ்கிருதக்கட்சி எனக் கட்சிகள் தோன்றிவிடும். அது காங்கரசுக்குப் பலவீனமாகும். ஆகவே காங்கரசுதான் முக்கியமே தவிர, நமது சட்ட சபை மெம்பர்களுக்குத் தங்கள் தாய் பாஷை, தேசமக்களின் ஞானம் என்ற இவற்றில் முக்கிய கருத்தில்லையென்று படுகிறதல்லவா?
  2. இப்போதுதான் தமிழர் சிலர் தமிழ் படித்து வித்வான்களாக வந்திருக்கின்றனர். இவர்களால்தான் பார்ப்பனரல்லாதார் கட்சி வளம் பெறுகிறது. இவர்கள்தான் தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகம் என்று பிரித்துப் பார்ப்பனர்களைத் தூஷிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் கட்டாயமாய் விட்டால் தமிழர், வங்காளிகளைப் போல ஓங்கி உயர்ந்து விடுவர். பிறகு பார்ப்பனர் தலைகுனிந்து வணங்கிப்போக வேண்டிவரும். இது இரண்டாவது மர்மம். இதனால், காங்கரசில் இருக்கும் பார்ப்பனர்கள் யாவரும் ஒருமுகமாய் தமிழ் கட்டாயமாகக் கூடாது என்பதன் நோக்கம் தமிழர்களை தமிழறியாத மூடர்களாக்கி விடவேண்டுமென்பது எனத் தெரிகிறதல்லவா?

சட்ட சபைத் தமிழன் அறியவேண்டியது

  1. தமிழ் கட்டாயமாய் விட்டால், சமஸ்கிருதத்துக்கு இடமில்லாமல் போய்விடும். சமஸ்கிருதம் படிப்பவர் இல்லாமல் போய்விடுவர். ஏற்கனவே அது பேசுவாரற்று செத்துப்போய் கிடக்கிறது. இதற்கு ஆக்கம் தேடவேண்டுமானால், தாய் பாஷையை – தமிழை – கட்டாயமாக்கக் கூடாதாம், சமஸ்கிருதம் தலையெடுத்தால் தமிழ் நாட்டில் பிரமத்துவேஷம் நீங்கிவிடுமாம்! எப்படியென்றால், இந்தியென்பது சமஸ்கிருதத்தின் வேறொரு தோற்றமே. கட்டாய இந்தி ஒரு பக்கம் நிற்க, தாய் பாஷையின் ஸ்தானத்தில் சமஸ்கிருதம் வீற்றிருக்க பாஷா பாடமல்லாத இதர பாடங்களை 100-க்கு 80 சமஸ்கிருத பதம் கலந்த மிலேச்ச தமிழில் கட்டாயமாகக் கற்பிக்கத் தொடங்கினால், சுத்த தமிழ் என்பது மாண்டுமறையும். அதனால் தான் இப்போது வந்திருக்கும் கணக்கு, விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் முதலிய பாடபுத்தகங்கள் 100-க்கு 80, 85 வீதம் சமஸ்கிருத பதம் செறிந்த மிலேச்சத் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பிறகு, தமிழர்கள் “தூய தமிழ்” “செந்தமிழ் மணம்;” “தமிழ் நாகரிகம்” என்றெல்லாம் பேசமாட்டார்கள். “இப்படி நாலாவகையிலும் சமஸ்கிருதத்துக்கு வழி செய்து விட்டால், பிரமத்துவேஷமே தலைகாட்டாமல் போய்விடும்” என்று காங்கரஸ் பார்ப்பனர் கருதுகின்றார்களென்று தெரிகிறது. வடநாட்டுக் காங்கரஸ் தலைவர்கள் பாஷையெல்லாம் சமஸ்கிருதத்தின் வழிவந்தவை. அதனால் அவர்கள் சமஸ்கிருதம் தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெறுவது நல்லதென்று கருதுகிறார்கள். மேலும் அவர்களுக்குத் தென்னாட்டுப் பார்ப்பனரின் சூழ்ச்சிவகையும், தமிழின் தனிப்பட்ட சிறப்பும் தெரியாது. மேலும், அவர்களுக்கு போதுமான பாஷா ஞானமும் கிடையாது. இவைகளைச் சட்ட சபையிலிருக்கும் தமிழன் நன்றாய் அறிய வேண்டும்.

தமிழா மயங்காதே

ஆகவே ஏ, சட்டசபைத் தமிழா! நீ சர்வமுட்டாள் அல்ல. தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறிதலை யல்ல. தாய் பாஷையைக் கட்டாயமாக்கக் கூடாதென்று கருதித்திரியும் சண்டாளனல்ல. நீ தமிழன்; உன் தந்தை தமிழன்; உன் தாய் தமிழ் மகள்; உற்றார் தமிழர், உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத்தமிழர் குறுதி. கட்டாய இந்தியால், உன் தமிழ் நாலா வகையிலும் நசுக்கப்படுகிறது. பாஷா பாடங்களைத் தமிழில் கற்பிப்பதால் தமிழ் விருத்தியாய் விடும் என்று கருதி மயங்காதே தனராசி எண், ரிணராசி எண், வியாசார்த்தம், அனுபூரகம், குணரங்கம் என்றெல்லாம் உன் தமிழ் பாஷையில் நீ கேட்டதுண்டா? இவையெல்லாம் உன் தாயை, உன் தமிழைக் கொல்லுவதற்குப் பார்ப்பனர் விடும் அம்புகள் என்று நினைக்கின்றாயா? நீ காந்தியைக் கும்பிடு; உன் சி. ஆரைக் கட்டிக்கொண்டு அழு; உன் காங்கரஸை மோக்ஷ சாதனம் என்று பின்பற்று; ஆனால், அவர்கள் பேச்சு வழி நின்று உன் தாயை – உன் தமிழை – இம்சிக்காமல், தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று இப்போதே தீர்மானிப்பாயாக. இல்லையானால், தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று முயலாயானால், நீ உன் நாட்டுக்குத் துரோகியாவாய்; உன் நாட்டு மொழிக்குத் துரோகியாவாய்; உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய். நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே – ஏன் இன்றே – எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக.

உங்கள் தலைவர் சி.ஆர். அவர்கள் தமிழினிடத்தும், தமிழ் பிள்ளைகளிடத்தும் மிகுந்த அன்புடையவர் என்று சொல்லுகிறாரே, அவரே தமிழன் என்று சொல்லிக்கொள்ளுகிறாரே, உண்மையில் அவர் தமிழனானால் தமிழ் மொழி விருத்தியாக வேண்டுமென்ற எண்ணமுடையவரானால், தமிழை – தாய் பாஷையை – இந்தியைச் சொன்னதைப் போலக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருக்க மாட்டாரா? தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டுபண்ண முடியும். “தமிழைக் கட்டாய மாக்கமாட்டோம், எங்கள் சமஸ்கிருதம் இல்லாமல்போகும். உங்கள் தமிழ் கெட்டாலென்ன” என்று கருதும் பார்ப்பன மனப்பான்மை எங்கே அவரை விட்டது? தமிழில் ஆபாசமான நடையில் சில கதைகள் எழுதிவிட்டு, “எனக்குத் தமிழில் எவ்வளவு ஆசையிருக்கிறது தெரியுமா” என்கிறார். இவற்றைக் கேட்டு வாய் பிளக்கும் மூடமக்களைப் போல, நீங்களும் உங்கள் தமிழைக் கட்டாயமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சியில்லாத விலங்குகளா? தாய் பாஷையில் அபிமானமில்லாத தசைப்பிண்டங்களா?

துரோகியாகப் போகிறாயா?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது ஒத்து 100-க்கு 95 பேர் தமிழ் தெரியாமல் இருக்கும்போதே சமஸ்கிருதத்தை தாய் பாஷையாகவும், இந்தியைக் கட்டாய பாஷையாகவும், ஆங்கிலத்தை ராஜாங்க பாஷையாகவும் வைத்து, தமிழ்ப் பதங்களை எல்லாம் போக்கி, சமஸ்கிருதமாக்கி, தமிழன் மானத்தை தமிழன் பிதிரார்ஜித பாஷையை, தமிழன்னையைக் கெடுப்பதற்காக உங்கள் சி. ஆரை உள்ளிட்ட பார்ப்பனர்கள் தந்திரமாய் வேலை செய்யும்போது, தமிழனாகிய நீ! தமிழைக் கட்டாய பாடமாக்கி, தமிழன் ஒவ்வொருவனும் தமிழை நன்றாகக் கற்றிருக்க வேண்டுமென்று முயற்சி செய்யாத நீ! தமிழ் கெட்டாலும் கெடட்டும், தமிழர்கள் மானமழிந்தாலும் அழியட்டும், நான் காங்கரஸ் செய்யும் எல்லா அயோக்கியத்தனத்துக்கும் உள்ளாகியிருப்பதே போல, என் தாய் பாஷையை என் அருமைத் தலைவர் சி.ஆர். அவர்களும் அருமைத் தோழர்களான பார்ப்பனர்களும் கூடிக் கொலை செய்வதற்குத் துணையிருப்பேன் என்று நினைக்கிறாயா? தேசத்தின் பெயரையோ சமூகத்தின் பேரையோ, அரசியல் கொள்கையின் பெயரையோ சொல்லிச் சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ, விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் பாஷை குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு! தாய் பாஷைக்காகச் சிறை புகுந்தான், புகுகிறான், புகுவான்; தடியடி பட்டான், படுகிறான், படுவான்; சகல துன்பங்களையும் அனுபவிப்பான், அவன் பேசும் தமிழை தாய் பாஷையாக உடைய நீ இப்படித் தாய்பாஷையை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா? போவாயானால் ஏ,துரோகி உன் சட்டசபை வாழ்வுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்.

குடி அரசு – கட்டுரை – 04.09.1938

You may also like...