பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்
வாங்க வரலாறு பேசுவோம்…பரப்புரைப் பயணம்
இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை, நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து பரப்புரை பயணம் நடத்துகிறது. நிறைவாக மயிலாடுதுறையில் மாநாடு நடைபெறவுள்ளது.
ஏனென்றால், பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். இப்போதும் தமிழ்நாட்டின் விவாதப் பொருள் பெரியாரை சுற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா போராட்டக் களங்களிலும் பெரியார் இடம்பெறுகிறார், அவரது கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக அரண்போல நிற்கிறார் பெரியார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை வன்முறைக்காடாக்க முயற்சிக்கும் களங்களில் சமத்துவ நெருப்பாக அவர்களின் எண்ணத்தை சுட்டுப் பொசுக்குகிறார் பெரியார். பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று துடிக்கும் வருணாசிரமாவதிகளுக்கு தமிழ்நாட்டில் மரண அடி கொடுத்து எதிர்த்து நிற்கிறது பெரியார் விதைத்துவிட்டுச் சென்ற கல்வி குறித்தான விழிப்புணர்வு சிந்தனைகள்.
பெரியாரை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியாத ஆரியக் கூட்டத்திற்குக் கூலிப்படை போல கிடைத்திருக்கிறார்கள் சிலர். அவர்களை வைத்து ”தமிழைக் கொச்சைப்படுத்திவிட்டார் பெரியார், அவர் ஒன்றும் ஜாதியை எதிர்க்கவில்லை,
பெரியார் தமிழர் இல்லை என்பதால் திராவிடம் என்ற மாயையைத் திணித்துவிட்டார், திராவிடம்தான் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டது, பார்ப்பனர்கள் தமிழர்களே, பெரியார் பெண்ணுரிமையைப் பேசவில்லை, மாறாக பெண்களை இழிவுபடுத்தியதுதான் அவர் செய்த வேலை” என்றெல்லாம் பெரியாருக்கு எதிரான அவதூறைக் கட்டமைக்க முயன்று கொண்டிருக்கிறது அந்த கூட்டம். அதற்கு தமிழ்தேசியம் என்று அவர்களே பெயரும் சூட்டிக்கொண்டனர்.
ஒருகாலத்தில் பார்ப்பனர்களே நேரடியாக செய்துவந்த இத்தகைய அவதூறுகளை, வெறுப்புப் பிரச்சாரத்தை இப்போது தமிழ்தேசியத்தின் பெயரால் செய்யும்போது, பெரியார் பிம்பத்தை உடைத்துவிடலாம் என்பது அவர்களின் மனக்கணக்கு. ஆனால் வாழ்ந்த காலத்திலும் சரி, மறைந்துவிட்ட பின்பும் சரி எதிர்ப்புப் பிரச்சாரத்தால்தான் பெரியார் வேகமாக வளர்ந்திருக்கிறார். இப்போது பெரியார் குறித்து சீமான், மணியரசன் போன்றோர் வைக்கும் விமர்சனங்களை வாய்ப்பாக வைத்துக்கொண்டு, ”பெரியார் இன்னும் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” என்ற தலைப்பில் வரலாற்றை எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டின் ஐந்து முனைகளில் இருந்து புறப்படுகிறது திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை குழுக்கள்.
பெரியார் பற்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வது மட்டுமின்றி, பெரியாரை விமர்சித்துக்கொண்டே திரைமறைவில் தமிழர்- தமிழ்நாட்டின் கல்வி- வேலைவாய்ப்பு- சமூக நீதி உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய அரசு செய்துகொண்டிருக்கும் நாசகர முயற்சிகளையும், அதற்குத் துணைபோகும் சங்கிகளின் நண்பர்களின் உண்மை முகத்தையும் தோலுரித்துக் காட்ட புறப்படுகிறது கழகம்.
துண்டறிக்கைகள், பெரியார் பற்றிய இளைஞர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய கழகப் புத்தகங்கள், பறை இசை, நாடகங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் வழியாக பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்த செல்ல உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை ஒரு மாவட்டத்தில் 4 கூட்டங்கள் தொடர்ச்சியாக ஐந்து முனைகளில் நடக்கும்.
சென்னை, விழுப்புரம், சேலம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 500 பரப்புரை கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
15.3.2025 அன்று தொடங்கி 22.3.2025 மயிலாடுதுறையில் நிறைவு பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்வீர்…
– பெரியார் முழக்கம் 27022025 இதழ்
