நீதித்துறையில் சமூகநீதி திமுக எம்.பி தனிநபர் மசோதா!

இந்தியாவில் உள்ள நீதிபதிகள் குறித்த விவரம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சுமார் 80% நீதிபதிகள் முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். வெறும் 20% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் இந்திய நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து திமுக எம்பி வில்சன் ராஜ்யசபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அதில் இந்திய உயர் நீதிமன்றங்களில் 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்தவர்களில் 26 பேர், பழங்குடியினர் பிரிவில் இருந்து 14 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தும் 80 பேரும் நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, அர்ஜுன் ராம் மேக்வால் ராஜ்யசபாவில் அளித்த எழுத்துப்பூர்வமாகப் பதிலில் மேலும், “2021 ஜனவரி 1 முதல் 2026 ஜனவரி 30 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் எஸ்.சி. பிரிவினர், 14 பேர் எஸ்.டி. பிரிவினர், 80 பேர் ஓ.பி.சி. பிரிவினர், 37 பேர் சிறுபான்மையினர் ஆவர். அதே காலகட்டத்தில், 96 பெண்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.நீதிபதிகள் நியமனத்திற்கான நடைமுறை ஒப்பந்தத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை அளிக்கும் பொறுப்பு இந்தியத் தலைமை நீதிபதியிடமும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பரிந்துரைகளை அளிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடமும் உள்ளது என்றும் அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
அவர் மேலும், “நீதித் துறையில் சமூகப் பன்முகத்தன்மையை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் பதிலளித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளை அனுப்பும்போது, பன்முகத்தன்மை இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய பி. வில்சன், இது கவலைக்குரிய போக்கு எனக் குறிப்பிட்டார். அவர் மேலும், “அரசியலமைப்பின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், நமது இந்தியாவின் பன்மைத்துவச் சமூகத்தை நீதித்துறை பிரதிபலிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சில சமூகங்கள் குறைவான பிரதிநிதித்துவத்துடன் உள்ளன. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனச் செயல்முறைகளில் பாகுபாடு உள்ளது” என்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4.38% மட்டுமே எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.டி. பிரிவில் இருந்து வெறும் 2.36% பேரும், ஓ.பி.சி. பிரிவில் இருந்து 13.49% மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். அதேநேரம் 79.76% நீதிபதிகள் முன்னேறிய ஜாதியினராகவே இருப்பதாகவும் வில்சன் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் மட்டுமே அதிகம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களைத் தவிர மாவட்ட மற்றும் இதர நீதிமன்ற நீதிபதிகள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டுமே பன்முகத்தன்மை போதியளவில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1234 நீதிபதிகள் இருக்கும் சூழலில், அதில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவில் இருந்து மொத்தம் 1205 நீதிபதிகள் உள்ளனர். அதாவது மொத்த நீதிபதிகளில் 97.65% எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவில் இருந்து உள்ளனர். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 2640 நீதிபதிகள் உள்ள நிலையில், அதில் 1414 மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். அதாவது 53% மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினர். அதேபோல மகாராஷ்டிராவில் மொத்தம் 1940 நீதிபதிகள் உள்ள நிலையில், அதில் 734 பேர் மட்டுமே எஸ்சி/எஸ்டி/ஓபிசி. அதாவது 37% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் இதழ்19022026

You may also like...