காந்தியை தாழ்வாரத்தில் உட்கார வைத்த சீனிவாச ஐயங்கார்
நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும் உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்தப் பேசிய உரையாடல் “சுதேசமித்திரன் (16.09.1927)” இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும்.
உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் – பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
காந்தி: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர்- பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைத்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும், என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, சீனிவாச ஐயங்கார் வீட்டில் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன், இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரைவரை செல்கிறாள்.
என்று கூறினார்
(ஆதாரம் : தமிழ்நாட்டில் காந்தி, ஆசிரியர்: ராமசாமி பி.ஏ).
பெரியார் முழக்கம் 03042025இதழ்
