மோடியை அதிரவைத்த `எப்ஸ்டீன் பைல்ஸ்’

ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; சுதந்திரம் என்றால் அமெரிக்கா என்று பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. அந்த பிம்பங்களை சுக்கு நூறாக உடைத்து `எப்ஸ்டீன் பைல்ஸ்’ உலகையே அலற விட்டிருக்கிறது. இதில் முக்கிய பிரபலங்களின் பெயருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே வேளையில் அமெரிக்காவிடம் இந்தியாவை அடகு வைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து விரிவான விளக்கம் எதுவும் வெளிவராத நிலையில் மக்களிடையே சந்தேகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
`எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்றால் என்ன எனப் பார்ப்போம். அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கு தண்டனையாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் உயிரிழப்பிற்கு பின்னர் அவர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்டவையே `எப்ஸ்டீன் பைல்ஸ்’ ஆகும். நீங்கள் நினைப்பது போல இது வெறும் ஒரு ஆவணம் அல்லது கோப்பு மட்டும் அல்ல. புகைப்படங்கள் வீடியோக்கள் மின்னஞ்சல் உரையாடல்கள் விமான பயணப் பதிவுகள் என பல ஆதாரங்களை உள்ளடக்கியது.
எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் எப்ஸ்டீனுக்கும் ட்ரம்புக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அது பற்றிய ரகசியம் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காக எப்ஸ்டீன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பின. பல அரசியல் கட்சிகள் இந்த ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் `எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத் தன்மைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களும் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி கடந்தாண்டு இறுதியில் முதற்கட்டமாக ஜனநாயகக் கட்சியின் `மன்ற மேற்பார்வைக் குழு’ (House Oversight Committee) சுமார் 70 புகைப்படங்களை வெளியிட்டது. பிறகு மின்னஞ்சல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் எனப் பல ஆதாரங்கள் சிறுகச் சிறுக வெளியாகின. 2024 தேர்தல் சமயத்தில், டிரம்பிடம் இதுபற்றிக் கேட்டபோது, “ நீங்கள் கேட்டால் நான் அதை வெளியிடுவேன்” என்று கூறியிருந்தார்.
நீதித்துறையில் வெளியீடு
30 லட்சம் பக்கங்கள் 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் அடங்கிய ஜெப்ப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான புதிய ஃபைல்களை, அமெரிக்க நீதித்துறை ஜன. 30ம் தேதி வெளியிட்டது. இந்தக் பைல்களில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சிறைவாசம் பற்றிய தகவல்கள், உளவியல் அறிக்கை மற்றும் அவர் சிறையில் இருந்த போது ஏற்பட்ட மரணம் குறித்த விவரங்கள் உள்ளன. இது தவிர, எப்ஸ்டீனுக்கும் உயர்மட்ட பிரமுகர்களுக்கும் இடையிலான மின்னஞ்சல்களும் இதில் இடம்பெற்றிருந்தன. புதிதாக வெளியிடப்பட்ட பைல்ஸில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் எப்ஸ்டீனுக்கும் உலகின் முதன்மையான செல்வந்தர்கள் உடனான மின்னஞ்சல் உரையாடல்களும் அடங்கியிருக்கிறது.

மோடிக்காக பரிந்துரைத்த அம்பானி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 25 ஆண்டுகளுக்கு முன்பு, நியூஜெர்சியில் 13- 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி அமெரிக்க புலானய்வு விசாரணையில் அளித்த வாக்குமூலத்தில், பாலியல்ரீதியாக தனது தோழிக்குத் தொல்லை அளித்து முறையற்ற உறவுகொள்ளத் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால், டிரம்ப்பை தனது தோழி கடித்ததாகத் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, தனது தோழி சிரித்ததால் அவர் முகத்தில் தாக்கப்பட்டதாகவும், எப்ஸ்டீனும் தோழியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில் பிரதமர் மோடி பெயர் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த மின்னஞ்சல் தேதி காலகட்டத்திற்கு முன்னதாக, அதாவது ஜூலை 4 – 6 வரை இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அரசு முறைப்பயணம் சென்றிருந்தார். அதே போல், 2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தார். மேலும், 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு தொழிலதிபர் அனில் அம்பானி அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கடந்த 2014 டிசம்பர் மாதத்தில், எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தியும் வெளியாகியுள்ளது. இப்படியாக `எப்ஸ்டீன் பைல்ஸ்’ அமெரிக்காவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத் தலைவர்களையுமே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

எப்ஸ்டீன் பைல்ஸில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில், “ `எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ஆவணங்களில் உள்ள இ-மெயில் அறிக்கையில், பிரதமரின் பெயரும், அவருடைய இஸ்ரேல் பயணமும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்தோம். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் இஸ்ரேலுக்கு அலுவல் ரீதியாகப் பயணம் மேற்கொண்டார் என்பதைத் தவிர, அதில் இருக்கும் அனைத்துமே குற்றவாளியின் குப்பை வதந்தி. இவை கடும் கண்டனத்துடன் நிராகரிக்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்திய – அமெரிக்க ஒப்பந்தம் எப்ஸ்டீன் பைல்ஸ் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா பரஸ்பர வரிகளை 18 சதவீதமாக குறைக்கும். அதேசமயம், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்கும் என்பது உள்ளிட்டவை அடங்கியுள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் ஏதும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் முடிவு செய்யப்பட்டு வருவதாக மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குப் பணிகிறதா இந்தியா?
அமெரிக்கா உலக நாடுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டாமைத் தனம் செய்வதை விரும்பும் நாடு. அவ்வாறு டிரம்பிடம் சிக்கக் கூடாத ஒரு ஆவணம் சிக்கிக் கொண்டு அதில் உள்ள பட்டியல் நாடுகளை அமெரிக்கா குறிவைக்கிறது. அவ்வாறு அமெரிக்கா வைத்த குறியில் சிக்கியுள்ளது இந்தியா, சமீ பத்தில் – பாகிஸ்தான் – இந்தியா இடை யேயான போர் நிறுத்தம் ஏற்பட்ட போது, நான் சொல்லி தான் இந்தியா போரை நிறுத்தியது என்றும், ரஷ்யா விடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்க எண்ணெயை அதிக அளவில் வாங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பதிவில், அமெரிக்கப் பொருட்கள் மீதான அனைத்து வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்று கூறினார். ஆனால் இந்தியா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கை யிலும் இதை பற்றி குறிப்பிடவில்லை. இப்படி, “மாப்பிள்ளை அவரு தான்… அவர் போட்டிருக்கும் சட்டை என்னு டையது” என்பது போல் இந்தியாவின் பிரதமரை அமெரிக்காவில் இருந்து டிரம்ப் இயக்குவது போல் தான் தோன்றுகிறது என எதிர்கட்சிகள் விமர்சனத்தை முன் வைக்கின்றன.

ஆவணங்கள் மூலம் ஆப்பா?
எப்ஸ்டீன் பைல்ஸ்சில் பிரதமர் மோடி பெயர் இருப்பது குறித்து விரிவான அறிக்கையை ஒன்றிய அரசு மக் களுக்கு கொடுக்கவில்லை. அதே வேளையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஹனிடிராப் மூலமாக ஒருவரை வலையில் வீழ்த்தி ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்வது போல், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் சிக்கி உள்ளது. இதனை எதற்காக ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணப்படுத்தினார் என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் இது குறித்து உண்மையை உலகிற்கு எடுத்துரைக்க அவர் உயிருடன் இல்லை. அதே வேளையில் ஒரு நாடு யாருடன் ஒப்பந்தம் வைக்க வேண்டும் என்பதை அந்த நாடும், அதற்கு உடன்படும் நாடும் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த கோப்புகளை வைத்துக் கொண்டு டிரம்ப் மிரட்டும் தொனியில் ஈடுபட்டு ஒவ்வொரு நாடுகளுடனும் ஒப்பந்தத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஒரு சில நாடுகள் சிக்காமல் இருந்தால் அவர்களை போர் மூலமாக தூண்டிவிட்டு தன்னிடம் வந்து சமரசம் பேச வேண்டும் என விரும்புகிறார். ரஷ்யா-உக்ரைன், பாலஸ்தீனம்- இஸ்ரேல், என அமெரிக்கா தூண்டிவிட்டு சிதைத்த நாடுகளின் பட்டியல்கள் இன்னும் நீளும். இப்போது கவனம் வெனிசுலா, ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது.
கூட்டி கழித்துப் பாருங்க கணக்கு தெரியும்
எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான வீடியோக்கள், மின்னஞ்சல் உரையாடல்கள் ஜன. 30ம் தேதி வெளியாகிறது. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து பிரதமர் மோடி பெயர் அதில் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இதனை தொடர்ந்து அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தகம் நடைபெற்று வருவதாக செய்தி வருகின்றன. இதனையடுத்து டிரம்ப் தனது பதிவில், “இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியது எனக்குப் பெருமையாக இருந்தது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிலிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவில் இருந்தும் எண்ணெய் வாங்க அவர் ஒப்புக்கொண்டார்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், எப்ஸ் டீன் ஃபைல்ஸ் குறித்து விரிவான விளக்கம் எதுவும் கொடுக்காமல், விஷயத்தை வேறு பக்கம் திசை திருப்ப ஒப்பந்தம் குறித்து பேச்சை எடுத்து இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பாஜ கட்சியினர் கூறி வருகின்றனர்.
– (செய்தி-தினகரன்)
பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...