வள்ளலாரின் ஜாதி-மத எதிர்ப்புக் கருத்துக்களை நூலாக வெளியிட்டவர் பெரியார்- தமிழக முதலமைச்சர்
சென்னையில் கடந்த பிப்-15 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து…
இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை. அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1929-ல் வெளியிட்டவர், தந்தை பெரியார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களைப் போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார். இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், பெரியார் பரப்புரை செய்தார்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரே சொல்லியிருக்கிறார். அந்த வழியில் தான் சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலை நாட்டுகின்ற நம்முடைய அரசு- எங்களுடைய கோட்பாடு “எல்லார்க்கும் எல்லாம்” என்ற அவருடைய சிந்தனையின் செயல் வடிவம் தான். இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் எல்லோரிடத்திலும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வள்ளலாரைப் போற்றுவதோடு, நம்முடைய பணி நின்றுவிடக் கூடாது; அவருடைய நோக்கங்களை மக்கள் முழுமையாக உணர்ந்து, கடைப்பிடிக்க பாடுபட வேண்டும்.
அதற்கு இந்த மாநாடு வழி வகுக்கவேண்டும். ஏனென்றால், நம்முடைய பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள், வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது. பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும்-பண்பும்-அறனும்-கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம். பெரியார் முழக்கம் இதழ்19022026
