‘ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது’ தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் கருத்தரங்கில் மன்னார்குடியில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு
20.09.2015 அன்று திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார்.
தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுதிதறிவு எழுத்தாளர்கள் நரேந்திரதபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படத்தினை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
அதனை தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து மதமும் அம்பேத்கரும்&பெரியாரும் என்கிற நூலில் திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் நூலினை திறனாய்வு செய்து உரையாற்றினார். நூலாசிரியர் தஞ்சை பசுகௌதமன் ஏற்புரை நிகழ்த்தினார்.
இறுதியாக, ஜாதிஒழிப்பு போர்க்களத்தில் பெரியாரும் அம்பேத்கரும் என்றும் தேவை என்ற தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் தோழர் புனிதபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,
அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் சென்னை அய்.அய்.டி. இல் தடை செய்யப்பட்ட போது இந்தியா முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அண்மைக்காலங்களில் பெரியார் படத்தை மிக மோசமான வகையில் அவமரியாதை செய்தபொழுதும் அவை முகநூல்களில் வெளியிடப்பட்ட போதும் கூட அதற்கு எதிராக பெரிய எதிர்ப்புகள் உருவாகவில்லை. அதே போல அம்பேத்கருடைய சிலைகள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளாகி அவை உடைக்கப்படும் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அதற்கெதிராக பெரிய எதிர்ப்பு என்பது இதுவரை இல்லை. ஆனால் அய்.அய்.டி. இல் ஒரு வாசகர் வட்டம் என்ற சிறிய மாணவர் அமைப்பு ஒரு சில கருத்தரங்கங்களை மட்டுமே நடத்தியிருக்கிறது. அதைக் கூட பொறுக்காத அய்.அய்.டி. நிர்வாகம் அதை தடை செய்தது. காரணம் அம்பேத்கர் பெரியார் என்ற தத்துவங்களின் பிணைப்பை, அது உருவாக்கக்கூடிய ஆற்றலை, எழுச்சியை, விழிப்புணர்வை எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும் இவ்விரு தத்துவங்கள் இணையும் பொழுது மக்களிடையே ஓர் ஓர்மை உணர்வு, சமூகநீதி உணர்வு முகிழ்த்தெழுவதை நம்மால் காண முடிந்தது. இத்தகைய உணர்வை நாம் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது.
பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் என்றொரு முரண்பாட்டை பெரியார் கட்டமைத்தார். இந்திய சமூகம் அல்லது தமிழ்ச்சமூகம் எப்படி பிளவுபட்டு நிற்கிறது என்றால் மநு தர்மத்தின்படி சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இந்நாட்டின் தொல்குடி மக்கள் வர்ணத்தின் அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கின்றனர். மநு தர்மத்தால் வர்ண சாதியமைப்பால் பிளவுபட்டுள்ள மக்களை பெரியார் நேர்மறையாக பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மதம் மாறிய சிறுபான்மையின மக்கள் என்று அம்மக்களை அடையாளப்படுத்தி இம்மக்களிடையே ஓர் ஓர்மையை உருவாக்க வேண்டும் என்பதால் திராவிடர்கள் என்று அறிவித்து, அவர்களுக்கான ஓர் இயக்கத்தை கட்டமைத்தார். ஜாதியற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது.
அம்பேத்கர் இந்தியாவை தீண்டத்தகுந்த இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று வர்ண அடிப்படையில் பிளவுபட்டிருந்த இந்தியாவை அடையாளம் கண்டார். சூத்திரர்கள் வர்ண அமைப்பை தாங்கிப் பிடிக்கின்றவர்களாக அதனுடைய ஏவலாட்களாக செயல்படுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு அந்த அமைப்பில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை அம்பேத்கர் முன் வைத்ததோடு, இந்த வர்ண அமைப்புக்குள் இல்லாத தலித் மக்கள் அவர்ணர்கள் என்றும் இந்த அமைப்பை எதிர்த்ததால் அவர்கள் ஊரை விட்டு வெளியே சேரிக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை வரலாற்று ஆய்வுகளோடு நிறுவினார். சூத்திர ர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் முரண்பாடு நிலவினாலும்
பெரும்பான்மையான இந்த மக்களை அவர் அடிமைச் சாதியினர் என்று அடையாளப்படுத்தியதோடு இவ்விரு பிரிவினரிடையே ஓர் ஒற்றுமையை வளர்த்தெடுப்பதன் மூலம்தான் வர்ண ஜாதி அமைப்பை தகர்த்தெறிய முடியும் என்று ஆழமாக நம்பி, அதனடிப்படையில்தான் தன் செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டார்.
மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் செயல்திட்டத்திற்கு பெயர்தான் பார்ப்பனியம். பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதற்குப் பெயர்தான் அம்பேத்கரியம் – பெரியாரியம். நம்மைப் போன்ற சமூக மாற்றத்திற்காகப் போராடக்கூடியவர்கள் அடிப்படையில் இந்த மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்கான வரலாற்றை எழுத வேண்டும். அப்படியான இலக்கியங்களை உருவாக்க வேண்டும். தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சொன்னால், அவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது என்று சொன்னால் எப்படி திராவிடர் விடுதலைக் கழகம் அதற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறதோ அந்த வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது நிலவக்கூடிய ஜாதிய சமூக அமைப்பை கேள்வி கேட்பதாக, அதை மறுதலிப்பதாக உங்கள் இலக்கியம் இல்லை என்று சொன்னால் அது இலக்கியமே ஆகாது. தற்பொழுது நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை கண்டிக்காத போராட்டங்கள் போராட்டங்களே அல்ல. ஜாதிய சமூகத்தை கேள்வி கேட்காத செயல்பாடுகள் எல்லாம் பழைமைவாத செயல்பாடுகளே.
தலித் மக்களுக்கான ஓர் அமைப்பாக தேர்தலிலே போட்டியிடக்கூடிய அமைப்பாக ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்றோர் அமைப்பை அம்பேத்கர் உருவாக்கினார். அந்த அமைப்பின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானதொரு கோரிக்கையை அவர் முன்வைத்தார். அது என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அமைப்பிலே தங்களை இணைத்துக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு என்ற பெயர் ஒரு தடையாக இருக்கும் என்று சொன்னால் அந்தப் பெயரையே நான் மாற்றிக்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று அம்பேத்கர் அறிவித்தார். அதே போல பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதை நான் வேண்டாம் என்று இன்று வரை சொல்லவில்லை. அவர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டாலும் இல்லை என்று சொன்னாலும் திராவிடர் இயக்கத்தின் உழைப்பின் பயனை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று அறிவித்தார். ஆக, இம்மக்களிடையே ஜாதி அமைப்பில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். இதை பின்பற்ற வேண்டுமே தவிர இன்றைக்கு இம்மக்களைப் பிரித்தாளக்கூடிய சூழ்ச்சிக்கு நாம் இரையாகிவிடக் கூடாது.
தலித் மக்கள் எதற்காக நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை சமூக செயல்பாட்ட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலான இந்து மத சமூக அமைப்பை கேள்வி கேட்டதால் அம்மக்கள் சேரிக்கு தள்ளப்பட்டார்கள். அன்றைக்கு வேத மதத்தை எதிர்த்த பவுத்தர்கள் எல்லாம் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். சேரி என்பது இன்றைக்கு உருவான ஒன்றல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இம்மக்கள் சேரிக்கு தள்ளப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் இந்த நாட்டின் சொத்து வளங்களை எல்லாம் தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தவில்லை. அவர்கள் இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை தங்களுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தவில்லை. மனிதமாண்பை மீட்டெடுப்பதற்கான மாபெரும் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சேரிகளில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறினார். இந்த மக்களுடைய போராட்டம் முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த மக்களுடைய போராட்டம் சுயநலத்திற்கான போராட்டம் அல்ல. ஒரு பொது நன்மைக்கான போராட்டம். அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அதனால்தான் சக மனிதன் தெருவிலே நடக்கும் உரிமை கேட்டு வைக்கத்தில் போராடிய போது பெரியார் அம்மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தார். இத்தகைய ஒப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் இம்மக்களிடையே ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும்.
இங்கு தமிழன் என்ற அரசியல் ஓர்மைதான் முன்வைக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லைப்பிரச்சனை, காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சனை, மற்றும் ஈழ பிரச்சனை போன்றவை எல்லாம் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இப்போராட்டங்களிலே தமிழன் என்ற அரசியல் ஓர்மையோடு போராடுகிறவர்கள் போராட்டம் முடிந்தவுடன் ஊருக்கும் சேரிக்கும் பிரிந்து செல்கிறார்கள். இந்த அரசியல் ஓர்மை ஒரு சமூக ஓர்மையாக ஏன் மாற்றப்படவில்லை என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். அரசியல் போராட்டங்களை தமிழன் என்ற ஓர்மையோடு முன்னெடுப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்திலே ஒருவரை மணமக்களாக தேர்வு செய்யும்போது தமிழன் என்ற ஓர்மை இன்றி ஜாதிய கண்ணோட்டத்தோடு நடந்து கொள்கிறார்கள். தமிழன் என்ற அரசியல் ஓர்மை சமூக ஓர்மையாக முன்னெடுக்கப்பட்டால் ஒழிய இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நாம் நீக்கிவிட முடியாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இன்றைக்கு நாம் ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்று அரசியலில் சமத்துவத்தை உருவாக்கிவிட்டோம். ஆனால் சமூக பொருளாதாரத் தளங்களில் நாம் ஏற்றத்தாழ்வுகளை அப்படியே வைத்திருக்கிறோம். இந்த இடைவெளியை எவ்வளவு விரைவில் நாம் இட்டு நிரப்புகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. இல்லையென்று சொன்னால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் திரண்டெழுந்து நாம் உருவாக்கி இருக்கக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிந்து விடுவார்கள் என்று அம்பேத்கர் எச்சரித்தார். ஆனால் நாம் நாள்தோறும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்வரவேண்டும். ஜாதி ஒழிப்பு பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.
இந்திய பூமி என்று சொன்னாலும் இந்து பூமி என்று சொன்னாலும் அது ஜாதி எனும் கான்க்ரீட் தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோசலிச சித்தாந்தத்தையோ, கம்யூனிச சித்தாந்தத்தையோ, தமிழ்த்தேசிய சித்தாந்தத்தையோ இம்மண்ணில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்நிபந்தனை முதல் நிபந்தனை இந்த கான்க்ரீட் பூமியை தகர்த்தெறிந்தாக வேண்டும். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் பெரியாரும் செய்தார்கள். சமூக மாற்றத்திற்காகப் போராடக்கூடிய அனைவரும் இம்மாபெரும் சிந்தனையாளர்களின் அறிவாயுதத்தைப் பயன்படுத்தி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மிக்க சமூகத்தை உருவாக்குவோம் என கூறினார்.
கருத்தரங்கில் தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த தோழர் பால்ராஜ் மற்றும் திருவாரூர் ஆசாத் ஆகியோர் புத்தகங்கள் விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர்சாதிக், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகள் கவிஞர் தம்பி, கவிஞர் கலைபாரதி, பெரியார் அம்பேத்கர் இளைஞர்மன்ற அமைப்பாளர் பிரகாஷ், மருதம் மீட்பு இயக்கம் அமைப்பாளர் வினோத், புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் எஸ்.குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் மன்னை நகர அமைப்பாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.
செய்தி மன்னை இரா.காளிதாசு