தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும் அம்மக்களுக்கு உரிமையாக பட்டா போட்டு தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினி காந்த், ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணைப்பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கனகசபை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சண். முத்துக் குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, மாநகர செயலாளர் நீதிராசன் மற்றும் கழகத் தோழர்கள், அப்பகுதி வாழ் பெண்கள் குழந்தைகள் உட்பட
500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 17092015 இதழ்

You may also like...

Leave a Reply