காந்தியார் கொல்லப்பட்ட அந்த நேரத்தில்…
1948 ஜனவரி 30, பார்ப்பன கொலைவெறிக்கு காந்தியார் பலிகடா ஆன நாள் அதுதான்!
புதுடில்லியில் உள்ள பிர்லா மாளிகையில் – தனது அறையிலிருந்து காந்தி புறப்பட்டார்; அதுவரை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக் கொண்டிருந்தவர் – பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று பட்டேலிடம் விடைபெற்றுக் கிளம்பி, பிரார்த்தனை மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காந்தியாரின் பேத்தி ஆவா காந்தி, மருமகள் மனு காந்தி ஆகியோர் தோள் கொடுக்க – தோட்டத்தைக் கடந்து பிரார்த்தனை மேடைக்கு வந்தார்; மண்டபத்தை அடைய இன்னும் 4 அடிகளே எடுத்து வைக்க வேண்டும். 500 பேருக்கு மேல் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது; அப்போது கூட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 35 வயதுடைய இளைஞன் ஒருவன் வந்தான்.
தனது உடலை வளைத்து குனிந்து ‘பிராணம்’ (சல்யூட்) செய்தான். காந்தியார் திரும்பி மரியாதை செலுத்தினார். ‘இன்று பிரார்த்தனைக்கு நேரம் ஆகி விட்டது அல்லவா?’ என்று கேட்டான். காந்தியார் சிரித்துக் கொண்டே, ‘ஆம்; நேரமாகி விட்டது’ என்றார். உடனே, ரிவால்வரை எடுத்தான். காந்தியாரை நோக்கி மூன்று முறை சுட்டான். காந்தியார் வயிற்றுக்குக் கீழேயும், இதயத்துக்கு கீழேயும் குண்டு துளைத்துச் சென்றது. காந்தியார் நிலை குலைந்து போனார். ஆவா காந்தியும், மனு காந்தியும் அழுத்திப் பிடித்துக் கொண்டனர். அப்போது நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்! காந்தியார் மூச்சை இழந்தார். அதற்கு முன் ஜனவரி 15 ஆம் தேதியிலிருந்து வகுப்புக் கலவரங்களை எதிர்த்து தொடர்ந்து ‘உண்ணாவிரதம்’ இருந்த காந்தியார் சில நாள்களுக்கு முன்புதான் உண்ணாவிரதத்தை முடித்திருந்தார்.
காந்தியாரை சுட்டுக் கொன்றவனை – கூடி யிருந்தவர்கள் வளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவனை அடித்துக் காயப்படுத்தினர். போலீசார் அவனைக் கைது செய்து சிறைக்குக் கொண்டு போனார்கள்.
அந்த இளைஞன்தான் நாதுராம் கோட்சே! மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த சித்பவன் பார்ப்பனர்.
இச்செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த நேரு, வானொலியில் பேசுகிறார்:
“ஒரு பைத்தியக்காரன், காந்திஜியின் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டான்; நான் அவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன். கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் ஒரு விஷம் பரப்பப்பட்டு வருகிறது. அந்த விஷம் மக்களிடையே பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விஷத்தை நாம் சந்திப்போம்; சந்தித்தே தீருவோம்”
என்று நேரு, காந்தியாரின் உயிரை மாய்த்த அந்த ‘விஷ’த்தை சுட்டிக்காட்டி அறைகூவல் விடுத்தார்.
காந்தியார் மறைவு பற்றிய வரலாறு ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் முழுமை பெற முடியாது! காந்தியார் உயிரைக் குடித்த ‘சித்பவன்’ பார்ப்பனர் – ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரே என்பது கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் உண்மை! ஆனால், கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று இமயமலையை தூணில் மறைக்கும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஈடு பட்டது; அதையே இப்போதும் செய்து கொண்டிருக்கிறது.
காந்தியார் இறந்தார் என்ற செய்தி வந்தவுடன், அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை உருவாக்க முயன்ற கூட்டம் இது. காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தியை திட்டமிட்டுக் கிளப்பினார்கள். ஒரு சில நிமிடங்களிலே இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவிவிட்டது. பல இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதலும் தொடங்கிவிட்டது.
காந்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மவுண்ட்பாட்டன் (அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த பிரிட்டிஷ் பிரதிநிதி), பிர்லா மாளிகைக்கு விரைகிறார். அப்போது, வெளியே பெரிய கூட்டம் திரண்டு நிற்கிறது. கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டு மவுண்ட்பாட்டன் அவசரமாக நுழையும்போது ஒருவன் ஓடிவந்து “ஒரு முஸ்லிம் காந்தியைக் கொன்று விட்டான்” என்று அலறுகிறான். “முட்டாள், வாயை மூடு; கொன்றது ஒரு இந்துதான் என்று உனக்குத் தெரியாதா?” என்று ஆத்திரத்தோடு பதிலளித்தார் மவுண்ட்பாட்டன். (ஆதாரம் : ‘Freedom at Midnight’ நூல்)
அகில இந்திய வானொலியின் டைரக்டருக்கும், காந்தியாரை சுட்டுக் கொன்றது ஒரு முஸ்லிமே என்று இந்தக் கூட்டம் தகவல் கொடுத்தது. வானொலியில் இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதால், நாடெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்பது இவர்களின் அற்ப ஆசை! ஆனால், வானொலி இந்தச் செய்தியை ஒலி பரப்பவில்லை. காந்தியாரை சுட்டுக் கொன்றது யார் என்பது தெரிந்த பிறகே, அந்த செய்தி ஒலி பரப்ப வேண்டும் என்று வானொலி நிலைய அதிகாரிகள், செய்தியை தாமதப்படுத்தினர். காந்தியார் மறைவுக்குப் பிறகும், வானொலியில் தொடர்ந்து வழக்கமான நிகழ்ச்சிகளே ஒலிபரப்பப்பட்டு வந்தன. பிர்லா மாளிகைக்குத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிபடுத்திய பிறகுதான் வானொலி காந்தியாரின் மறைவை நாட்டுக்கு அறிவித்தது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டது மாலை 5 மணி 12 நிமிடம்; வானொலியில் அந்தச் செய்தி ஒலிபரப்பானதோ, மாலை 6 மணிக்குத்தான்! அதுவும் செய்தி எப்படி ஒலிபரப்பப்பட்டது தெரியுமா? “காந்தியாரை இன்று மாலை 5.20 மணிக்கு ஒரு இந்து சுட்டுக் கொன்றான்” என்று, சுட்டவன் இந்து என்பதை வலியுறுத்தி செய்தி அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். என்ற சதிகாரப் பார்ப்பனர் கூட்டம் தான்!
காந்தியாரின் உதவியாளராக இருந்து, காந்தியார் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தமது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, சர்தார் பட்டேலுக்கு ஒரு கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்தை ஒரு இளைஞர் எழுதியிருந்தார். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் ஈர்க்கப்பட்டு, பிறகு அதிலிருந்து வெறுப்படைந்து வெளியேறியவர் அந்த இளைஞர். ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு காந்தியார் சுட்டுக் கொல்லப்பட இருக்கிறார் என்ற செய்தி ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது; அந்த இனிப்பான செய்தியைக் கேட்பதற்கு வானொலி முன் தயாராக இருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வானொலி பெட்டிகள் முன் உட்கார்ந்து கொண்டு, அந்த இனிப்பான செய்திக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். செய்தி வந்தவுடன் டில்லி உட்பட பல இடங்களில் இனிப்பு வழங்கினர்” என்று எழுதியிருக் கிறார்.
(ஆதாரம்: காந்தி உதவியாளர் பியாரிலால் எழுதிய “Mahathma Gandhi – The Last Phase” நூல் பக். 756)
அதே நூலில் – அதே பக்கத்தில் இன்னொரு தகவலும் தரப்பட்டிருக்கிறது.
“பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது இந்திய மாநிலங்களின் தலைநகர் ஒன்றில் இருந்த தலைமை போலீஸ் அதிகாரி, உடனே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்து, 13 நாள்கள் துயரம் தெரிவிப்பதாகக் கூறி அலுவலகங்களை மூடிவிட்டு, தலைமறைவாகி விடுங்கள்; தடை உத்தரவை மீற வேண்டாம் என்று தெரிவித்தார்” – என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டு இருந்தது!
போலீஸ் அதிகாரியாக இருந்த பார்ப்பனர் ஒருவர் தமது இனத்துக்கு செய்திருக்கிற சேவை. காந்தியார் மறைவுக்கு 13 நாள்கள் துக்கம் அறிவித்ததில்கூட இவர்களின் தற்காப்பும் சுயநலமும் அடங்கியிருந்தது.
(விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்’ நூலிலிருந்து)
பெரியார் முழக்கம் 08012015 இதழ்