பெரியாருக்கு எதிரான ‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு விளக்கம்-மறுப்பு
கொஞ்ச காலமாகவே பெரியார் மீது பல்வகை திறனாய்வுக் கணைகள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன. தூற்றுதலாக இல்லாமல் திறனாய்வாக வந்தால் வரவேற்க வேண்டியது தான்; திறனாய்வு உள்நோக்கமின்றி வந்தால் வரவேற்க வேண்டியது தான்; உள்நோக்கத்தோடு வந்தாலும் ஆதாரத்தோடு இருந்தால் வரவேற்கவேண்டியது தான்.
என்ன காரணத்தாலோ, பெரியாருக்குத் தமிழ்ச் சமூகம் அளித்து வந்துள்ள இடத்திலிருந்து அவரைப் பலவந்தமாக, தந்திரமாக, சூழ்ச்சியாக…எப்படியாவது இறக்கிட வேண்டுமென பலர் முயற்சியாய் முயற்சிக் கின்றனர்; பலபட எழுதுகின்றனர்.
அவற்றில் ஒன்றாக, “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழில் 2014 மே -15 இதழில் ஒரு பதிவினைப் படித்தேன்; தோழர் பெ.மணியரசன், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-04-2014 அன்று நடந்த 5ஆவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் ஆற்றிய உரையே அது.
அவ்வுரையில் தோழர் மணியரசன் மூன்று செய்திகளை முன்வைக்கிறார்.
1. “1916ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தொடங்கிய ‘தனித் தமிழ் இயக்கம்’ தமிழர் வாழ்வியல், சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சம°கிருதத்தையும், ஆரியப் புரோகிதர்களையும் நீக்குவதையும் வலியுறுத்துகிறது. தமிழில், தமிழர் களைக் கொண்டு குடும்பச் சடங்குகளையும், ஆன்மீக நிகழ்வுகளையும் நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்று மறைமலை அடிகள் வலியுறுத்தினார்.
அரசியல் இயக்கங்கள் செயல்படும் காலம் வந்த பின், பெரியார் பார்ப்பனிய எதிர்ப்பைப் பெரும் வீச்சில் கொண்டு சென்றார். பட்டி தொட்டி எங்கும் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு பரவியது. இதற்கெல்லாம் முன்னோடியாக, அடித் தளம் அமைத்தோர்களாக தமிழரறிஞர்கள் இருந்தார்கள் என்பதை இன்றையத் தமிழுணர் வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
2. “தனித் தமிழ் நாட்டிற்கான முதற்குரல் கொடுத்தவர்கள் தமிழறிஞர்கள். இக்குரல் அறிஞர்கள் குரலாக மட்டும் சுருங்கி விடாமல் அதனை மக்கள் குரலாக பரப்பியவர் பெரியார்.”
3. “1937 இல் சென்னை மாகாண முதலமைச்சராக ஆனவுடன் இராஜாஜி 1938 இல் ஒரு பகுதி பள்ளிக் கூடங்களில் வெள்ளோட்டமாக இந்தியைக் கட்டாயப் பாடமொழி ஆக்கினார் (இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார் என்பதே சரி) அந்த இந்தித் திணிப்பைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு முன்னெடுத்த பின் அது பெரும் வீச்சைப் பெற்றது.”
டும்.. டும்.. டும்.. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பார்ப்பன விலக்கானா லும், சமற்கிருத விலக்கானாலும்,… இந்தி எதிர்ப் பானாலும், தனித் தமிழ் நாடானாலும் தமிழறிஞர் களே முன்னோடி; பெரியார் பின்னோடியேதான். டும்…… டும்… டும்…
முதல் செய்தியான பார்ப்பன விலக்கு குறித்து பார்ப்போம்.
1916 –இல் ‘தனித் தமிழ் இயக்கம்’ தோன்றிய காலத்திலேயே பார்ப்பன விலக்கை அதாவது மணியரசனார் மொழியில் ஆரியப் புரோகிதர் விலக்கு தொடங்கிவிட்டது என்பது உண்மையா?
வாழ்வியல் நிகழ்வுகளில் முதலில் பார்ப்பன புரோகிதர்கள் நீக்கம், பின்னர் சமற்கிருத மந்திரங்கள் நீக்கம் என்பதாக பெரியார் தொடங்கியது 1926–இல் தான்; அப்படித் தான் அவரது ‘குடிஅரசு’ ஏட்டுப் பதிவுகளும் கூறுகின்றன.
அதே ‘குடிஅரசு’ ஏட்டின் 11-9-1927 நாளிட்ட இதழில் ‘நெற்றிக் கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே!’ என்ற தலைப்பில் சிறு குறிப்புரை ஒன்று வெளியாகியுள்ளது. “சுவாமி வேதாச்சலம் அவர்கள் (மறைமலை அடிகள்) அருமை குமார்த்திக்கும் நமது நண்பர் திருவரங்கம் பிள்ளை அவர்களுக்கும் நடந்தேறிய திருமணச் சடங்கானது தமிழ் மக்களையே குழப்பத்தில் கொண்டுவந்து விட்டது” என்று தொடங்கும் அந்த குறிப்பு, அடிகளார் வீட்டுத் திருமணம், பார்ப்பனர்களை வைத்தே நடந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது; ‘குடிஅரசு’ தரும் குறிப்பு இது.
“சுவாமி வேதாச்சலம் அவர்களும், திருவாளர் கா.சுப்பிரமணியப் பிள்ளை அவர்களும் தமிழ் நாட்டிலேயே தமிழ் மக்களின் பழைய நாகரிக விஷயமாய் தக்க ஆராய்ச்சி உள்ளவர்கள். ஏனையவர்களை இவர்களுக்கு சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப் பிராயம். இப்படிப்பட்ட இரு ஞானபா°கரர்கள் (அறிவுச் சுடர்கள்) கூடிச் செய்தத் திருமணம் பார்ப்பனீயத் திருமணமாய் நடந்தேறிற்றென்றால் மற்றவர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனியத்திற்கு உயர்வு கொடுக்க மாட்டார்கள்! உயர்வு கொடுக்க விரும்பார்களா என்பதை யோசிக்கும்படி அவர்களுக்கே விட்டு விடுகிறேன். இதற்கு ஏதாவது தகுந்த சமாதானம் இவர்கள் சொல்லாத வரையில் திருத்த முடியாத குற்றமாவதோடு மக்களுக்குக் குழப்பமும் நமது முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள் கிறோம்” என்று பெரியார் எழுதியுள்ளார்.
பெரியார் சுயமரியாதை இயக்கம் வாழ்வியல் நிகழ்வுகளில் புரோகிதர்களை நீக்க வேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் போது மறைமலை அடிகளார் தனது மகள் திரு மணத்தை பார்ப்பனரை வைத்து (மணியரசன் மொழி யில் ஆரிய புரோகிதர்களை வைத்து) நடத்தியிருக் கிறார். மறைமலை அடிகளாரின் இந்தச் செயல் ‘பார்ப்பன புரோகித விலக்கு’ இயக்கத்துக்கு பின் னடைவையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி விடாதா என்ற கவலையோடு பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.
இத் திருமணத்தின் மணப்பெண், மறைமலையடி களின் (அவரது இயற்பெயர் சுவாமி வேதாச்சலம் ஆகும்) மூத்த மகள் நீலாம்பிகை ஆவார்.
மறைமலை அடிகளார் தனது மகளுக்குத் தேர்ந்தெடுத்த மணமகன் வ.திருவரங்கம் பிள்ளை. இவரும் இவரது உடன் பிறந்தாராகிய வ.சுப்பையா பிள்ளையும் தென்னிந்திய சைவ நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கியவர்கள். ‘திராவிடன்’ முதலிய ஏடுகள் சைவ சமயத்தைக் கண்டிக்கும் வியாசங்களை உடன்பட்டு வெளியிடுவதைக் கண்டித்ததோடு, அதனை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் ஒன்றையும் முன்வைத்து, அச்செயல் திட்டத்திற்குத் தக்க வடிவம் கொடுப்பதற்குச் “சைவ மகாநாடு” ஒன்று கூட்டவேண்டுமென்று (அதாவது பெரியாரைக் கண்டித்து..) 25-9-1928 அன்று “சைவ மக்களுக்கும், சைவ மடாதிபதிகளுக்கும் ஓர் விண்ணப்பம்” வெளியிட்டனர் என்பது ஒரு தனி செய்தி.
‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்ற கட்டுரைக்கு பதிலாக அடுத்த வார ‘குடிஅரசு’ (18-9-1927) இதழில் (9 ஆம் பக்கத்தில்) ‘திருவரங்கம் பிள்ளை திருமணம்’ என்ற தலைப்பில் “ஒரு பொறுப்புள்ளவர் எழுதுவது” எனக் குறிப்பிட்டு சமாதானம் கூறும் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
மறைமலையடிகளார், பார்ப்பனர் புரோகிதரை தனது வீட்டுத் திருமணத்துக்கு அழைத்ததை நியாயப்படுத்தி, அந்தத் திருமணத்துக்குச் சென்று வந்த ஒருவர் தந்த இந்த விளக்கம் இது; அதையும் ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் பதிவு செய்திருக்கிறார். கோயில்கள் எல்லாம் தமிழர்களுக்கே உரிமை யானவை; அந்தக் கோயிலில் பூசனை நடத்தும் பார்ப்பன புரோகிதர்கள் ஆதி சைவர்கள். அவர்களும் தமிழர்களின் ஒரு பகுதியினர் தான். அந்தக் கண்ணோட்டத்தோடுதான் மறைமலை அடிகளார் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் பார்ப்பன அர்ச்சகரை அவர் ஆதி சைவர் (தமிழர்) என்பதாலும், தம்மிடம் பயின்ற மாணவர் என்பதாலும் திருமணத்தை நடத்தி வைக்க அழைத்திருக்கிறார். ஆனால் மற்றொரு சைவத் தமிழ் அறிஞரான கா.சுப்ரமணியம் பிள்ளைக்கு பார்ப்பனரை வைத்து திருமணம் நடத்துவதில் உடன்பாடு இல்லை. அவர் திருமணத்துக்கு நெல்லை யிலிருந்து வந்து சேருவதற்குத் தாமதமாகிவிட்டது. தாலி கட்டும் நேரத்தில்தான் வந்து சேர்ந்தார். முன் கூட்டியே வந்திருந்தால் தமது கருத்தை மறைமலையடிகளிடம் எடுத்துக் கூறியிருந்திருப்பார். அதே நேரத்தில்,
பார்ப்பனரை தமிழர்கள், ஆதி சைவர்கள் என்று மறைமறையடிகள் கருதுவதை கா.சுப்ரமணியப் பிள்ளை ஏற்கவில்லை. அவர்கள் தங்களை தமிழர்களாக ஒன்றிணைத்துச் செயலாற்றும் வரை இப்படி திருமணங்களுக்கு பார்ப்பனரை அழைப்பது தவறு என்பதே கா.சுப்ரமணியபிள்ளை கருத்து. அவரது ஒப்புதலுடனேயே இதை எழுதுகிறோம் என்று திருமணத்துக்கு சென்று வந்தவர் ‘குடிஅரசு’ பத்திரிகையில் சமாதானம் கூறுகிறார். ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்த அந்த விளக்கம் இதோ:
“பண்டை நூலாராய்ச்சியால் தமிழர்க்கே கோயில்களுரியனவென்றும், ஆதி சைவக் குருக்கள் தமிழரின் ஒரு பகுதியார் என்று கருதியே மயிலைத் திருக்கோயில் (மயிலாப்பூர் கபாலீசுவர் கோயிலில்) பூசனை புரியும் தமது ஆதிசைவ மாணவரை தமது புதல்வி திருமணத்தின் போது ஒரு கருவியாக மறைமலை அடிகள் கொண்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும்” என்பதாக எழுதியிருப்பதோடு “ நம்மவர் மணங்களை நம்மவர் வாயிலாகவே நடத்த வேண்டுமென்ற கருத்துக் கொண்ட திருவாளர் கா.சுப்பிரமணியம் பிள்ளை முதலியவர்கள் திருமங்கல நாண் பூட்டுஞ் சமயத்திலேதான் நெல்லை யிலிருந்து வந்து அதனைக் கண்ணுற்றமையால் மறைமலை அடிகளுக்குத் தங்கள் கருத்தைத் தெரிவிக்க சமயம் வாய்க்கப் பெற்றிலர்.
ஆதி சைவ மரபினர் தமிழருடன் மனமியைந்து வந்து சேருவார்கள் என்பதற்கும் போதிய சான்றுகள் காணும் வரை இத்தவறு பிற திருமணங்களிலும் நிகழ வொட்டாது செய்வது நமது கடமையென்று திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை முதலியவர்கள் உணருகிறார்கள்” என இக்கடிதம் எழுதப்பட் டுள்ளது.
அதற்குக் கீழே ஆசிரியர் குறிப்பாக “திரு கா.சுப்பிர மணியம் பிள்ளை அவர்கள் சம்மதத்தின் பேரிலேயே இது பிரசுரிக்கப்பட்டது. எனவே, இது விஷயம் இத் துடன் முடிவு பெற்றது” என்று இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பெரியார்.
நீலாம்பிகை-திருவரங்கம் பிள்ளை திருமணத் தைத் தொடர்ந்து பெரியார்-மறைமலை அடிகள்- கா.சுப்ரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) போன் றோரின் சந்திப்பொன்று ‘திருமண முறை’ குறித்து விரிவாக ஆராய நடந்துள்ளது.
இது குறித்தப் பதிவொன்று 26-2-1928 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் (13ஆம் பக்கத்தில்) காணக் கிடக்கிறது.
‘தமிழில் புரோகிதம் வேண்டும்’ என்ற தலைப்பில் மதுரை அ.சொ.அருணாசலன் என்பவரால் அது எழுதப்பட்டிருக்கிறது.
அதில் “சென்னையில் சில மாதங்கட்கு முன்னால் இது விஷயமாக திருவாளர்கள் சிங்காரவேற் செட்டியார் அவர்கள், அட்வகேட் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், சுவாமி வேதாசலமவர்கள், திரு. கஜேந்திர முதலியாரவர்கள், ஈ.வெ. ராமசாமி நாய்க்கரவர்கள் எல்லோரும் கூடிப் பேசினார்களே ஒழிய இது சம்பந்தமாக முயற்சி எடுத்துக் கொண் டதாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ள தோடு “நமது இயக்கம் பலப்பட்டு புரோகிதத்தின் மூலம் பார்ப்பனர்களுக்குப் போகும் பணத்தைத் தடுத்து, பார்ப்பனர்களை பகிஷ்கரிக்க வேண்டுமானால் புரோகிதத்தில் நம்பிக்கையுள்ள வர்களுக்கு அவசியம் தமிழில் வேண்டுவது இன்றியமையாதது என்பதே அடியேனது அபிப்பிராயம்,” எனவும் எழுதியுள்ளார்.
ஆக நீலாம்பிகை-திருவரங்கம் பிள்ளை ஆகியோரின் திருமணம் முடிந்த ஓரிரு மாத காலத்துக்குள் பெரியார்-மறைமலையடிகள்- கா.சு.பிள்ளை முதலியோரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதன்பின்னரும் கூட சைவர்களும், தனித் தமிழ் இயக்கத்தார் சார்பாகவும் ஆரியப் பார்ப்பன மறுப்பு, சமற்கிருத மறுப்பு குறித்த எந்த முன்னெடுப்பும் நிகழவில்லை என்பதையே இது காட்டுகிறதே தவிர தோழர் மணியரசன் கூறுவதைப் போல வழிகாட்டிகளாக அவர்கள் செயல்படவில்லை தனித் தமிழ் இயக்கம் இந்த வகையில் எதுவும் செய்திடவில்லை என்பதே உண்மை.
அதன் பின்னர் 7-10-1928 நாளிட்ட குடிஅரசு இதழின் ‘சைவ சமயம்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தைப் பெரியார் எழுதியுள்ளார்.
அதில் சைவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பதற்கு சைவர்கள் ‘தொடை’ தட்டிக் கிளம்பியுள்ளதை சுட்டிக்காட்டி, சைவம், வைணவம் உள்ளிட்ட மதங்களின் பொதுவான கடவுள்களும் கருத்துகளும் பார்ப்பனிய சார்புடையவையாக இருப்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார்.
(அதுபற்றி அடுத்த இதழில் எழுதுவோம்)
பெரியார் முழக்கம் 26062014 இதழ்