104ம் வயதில் விடைபெற்றார் பொத்தனூர் ‘க.ச’ கழகத் தலைவர் இரங்கல்
கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் இரங்கல் செய்தி:
பெரியாரிய தொண்டர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக அப்பகுதி மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவரும், பலபத்தாண்டுகள் பொத்தனூர் பேரூராட்சியின் தலைவராக விளங்கியவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் தலைவரும், 1943 ஆம் ஆண்டு இறுதியில், திருச்சி தேசியக் கல்லூரி மாணவராக இருந்தபோது தொடங்கப்பட்ட திராவிடர் மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான அய்யா பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் 15.11.26 அன்று இரவு 11.50 மணிக்கு முடிவெய்தி விட்டார்.
அவரது 104ஆவது பிறந்தநாள் விழா கடந்த ஜூலை மாதம் இரண்டாம் நாள் நடைபெற்றது. 103 ஆண்டுகள் நிறைவடைந்து 104 ஆம் ஆண்டில் அவர் முடிவெய்தியிருக்கிறார். இறுதிக்காலம் வரை நல்ல உடல் நலத்தோடும், யாருடைய துணையும் இன்றி தனியே பயணிக்க முடியும் என்ற நிலையில் இருந்தவருமான அவர் கடந்த சில நாட்கள் மட்டுமே சளி தொல்லை மிகுந்து போய் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அவர் சேலம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக இருந்த காலத்தில் அவரோடு மாவட்டச் செயலாளராக பணியாற்றியவனாக நான் இருந்திருக்கிறேன். அவரது வயதை கணக்கில் கொள்ளாமல் தோழர்களுடைய கழகப் பணியைக் கணக்கில் கொண்டு அவர்களோடு தானும் ஓர் இளைஞராக பழகுபவராக இருந்தவர். எவ்வித கடின சொற்களைப் பயன்படுத்தி யாரும் பார்த்திருக்கவே முடியாது. ஆனால் கழகப் பணிகளில் சேலம் மாவட்டத்தை எப்போதும் முன்னிலையில் நிறுத்தும் வகையிலான அனைத்து வழிகாட்டல்களையும் மேற்கொண்டவராக இருந்தார்.
1943இல் கல்லூரி மாணவராக திராவிடர் மாணவர் கழகத்தில் தொடங்கி இறுதி நாள் வரை உறுதியான பெரியார் தொண்டராக, உறுதியான கழகச் செயல்பாட்டராக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவராக க.ச.அவர்கள் விளங்கினார்கள். மிசா காலகட்டத்தில் ஓராண்டு சிறைக் கொடுமையை அனுபவித்தவர்.
அவருடைய நூற்றாண்டு விழாவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்டத் தோழர்கள் 100 பேர் சென்று விழாவில் கலந்து கொண்டு அவருக்கு எங்கள் வணக்கங்களை, நன்றிகளை, தெரிவித்து மகிழ்ந்தோம். அம்மாமனிதருக்கு, பெரியாரியக்க வீரருக்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக எங்களுடைய புகழ் வணக்கத்தை செலுத்திக் கொள்கிறோம். 16.11.2026
பெரியார் முழக்கம் இதழ் 19112026
