முறத்தால் மொத்துங்கள் – பெரியார்

தீபாவளி கதையைப் பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை. என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம். இது தீபாவளிக் கதை மிகவும் அதிசயமானதும் ஆபாசமானதும் இழிவும் ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

மகாவிஷ்ணுவுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன் இரண்யாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டு விட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்று விட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இரண்யாட்சன் பூமியைச் சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்துகொண்டு சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாகச் சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரம் ஏது? வேறு சமுத்திரமாயிருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்? அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டு வர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெடுத்ததெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வருமுன்பு திராவிடர்களேதானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம், பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி “எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம்” என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்குப் போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு “கோட்” தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்? ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள் மலம் தின்பதையும், பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?
நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீரத் திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள்? கொண்டாடுவதனால் இந்தக் கதையைக் கொண்ட புத்தகங்கள் வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதிமிதியென்று மிதியுங்கள். பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.
– குடி அரசு 07.10.1944
பெரியார் முழக்கம் இதழ் 05112026

You may also like...