யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர்.
தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த ஜாதிய ஆணவ படுகொலையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் கைது செய்யாமல் மெத்தனம் காட்டிவந்தது. பல்வேறு அமைப்பினர் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுப்பட்டபிறகு இக்கொலையில் சம்மந்தப்பட்ட 11 நபர்களை மட்டும் கைது செய்தனர். இக்கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜை மட்டும் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. இதனை கண்டித்தும் யுவராஜை கைது செய்ய வழியுறுத்தியும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு 17ந் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். அதன்பிறகு இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 நபர்களின் நான்கு பேர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தை பாய்ச்சினர். முக்கிய குற்றவாலியான யுவாராஜ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் என காவல் துறையினர் சொல்லி வந்தனர்.
ஏற்கனவே கழகத்தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தப்படி திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரம் 17-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஆகஸ்ட் 8 ம் தேதியே காவல்துறையினரிடம் முறையாக அனுமதிக்கேட்டு விண்ப்பித்திருந்தார். அனுமதி கொடுக்கமால் இழுத்தடித்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்ணுபிரியா 16 தேதி இரவு அனுமதி மறுத்ததாக தெரிவித்தார்.
எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம் 17-ந்தேதி திங்கட்கிழமை 11 மணியளவில் காவல்துறை தடையை மீறி திருச்செங்கோடு காவல் நிலையம் எதிரே கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் அண்மைகாலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் அதுவும் ஆணவ கொலைகள் என்கிற பெயராலே ஏராளமான ஜாதிய ஆணவக்கொலைகள் நடைபெற்று வருவதை திராவிட விடுதலைக்கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல் பொறியாளர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் இதுவரையிலும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 82-வது பிரிவின் கீழ் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கவேண்டும். 83-வது பிரிவின் படி அவரின் சொத்துக்களை முடக்கி அவரை உடனடியாக சரணடைய செய்யவேண்டுமென்று திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதுவரை காவல்துறை அவ்வாறு செய்யவில்லை உடனடியாக மேற்கூறிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவேண்டும். அதே போல் இந்தியாவின் சட்ட ஆணையம் இப்படிப்பட்ட கவுரவ கொலைகளுக்கு, திருமண விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக ஒரு சட்டத்தை வடிவமைத்து கடந்த 2012ல் கொடுத்திருக்கிறது. அந்த சட்ட வரைவு குறித்து மற்ற மாநிலங்களில் கருத்து கேட்டப்பொழுது தென்னிந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து விட்டனர். ஆனால் தமிழ்நாடு மட்டும் தனது கருத்தை இன்னமும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என கூறினார்.
முன்னதாக தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக கழகத்தலைவர் கொளத்தூர் மணி மற்றும் நான்கு பெண்கள் மூன்று குழந்தைகள் உட்பட 200ம் மேற்பட்ட கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு திருச்செங்கோடு காமராஜர் திருமண அரங்கில் வைக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் மற்றும்
ஆதித்தமிழர் பேரவை துணைச்செயலளார் லேமு சந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வ வில்லாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரம், திருச்செங்கோடு நகரத்தலைவர் சோமசுந்தரம், நகரச்செயலாளர் நித்தியானந்தன், கார்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பெரியார் முழக்கம் 20082015 இதழ்