கூடி மகிழ்ந்த ‘பெரியார் குடும்ப’ விழா!

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ‘இது பெரியார் குடும்பம்; கூடி மகிழும் விழா’ எனும் தலைப்பில் குடும்பங்களின் கூடுகை நிகழ்வு அக்டோபர்-20 அன்று நீலாங்கரையில் உள்ள ‘புட்வில்லேஜ்’ உணவக அரங்கில் கலகலப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத் தோழர்கள் குழந்தைகள் பங்கேற்றனர். குடும்ப உறுப்பினர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், நடனம், பாடல் என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் நிகழ்ந்தது.

தவில் கவிஞர் கார்மேகம் குழுவில் இடம்பெற்றுள்ள கிராமிய பாடகர் பரிக்கல் சுரேஷ் கிராமியப் பாடல்களைப் பாடி கிளாரினெட் வழியாக பாடல்களை வாசித்தார். திராவிடர் விடுதலைக் கழக மேடைகளில் புரட்சிகரப் பாடல்களை இசைக்கும் லதா, சத்யா, உமாபதி குழுவினரின் பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்புப் பாடல்கள் நிகழ்ச்சிக்கு உணர்வூட்டின. கழகக் குடும்பத்தின் குழந்தைகள் பாடி, ஆடியதுடன் இணையர்களும் மேடையில் நடனமாடி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்தனர். மாணவர் கழகத் தோழர் தோழியின் சிறப்பான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் உமாபதி தான் சிறையில் இருந்தபோது எழுதிய பாடலைப் பாடினார்.

விருதுநகர் மாவட்டம் காளையங்குறிச்சியைச் சேர்ந்த சரவணப்பிரியா-வைரம் இணையரின் ஜாதிமறுப்புத் திருமணம் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு பெண்ணின் பெற்றோர் பெண்ணைக் கடத்திச் சென்ற நிலையில் காவல்துறையில் புகார் செய்து பிரச்சினையில் தலையிட்டு கழகத் தோழர்கள் பெண்ணை மீட்டு வரச் செய்தனர். இந்தச் செய்தியை இணையர்கள் மேடைக்கு வந்து பகிர்ந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருமணம் செய்து வைத்து நெருக்கடியான நிலையில் தங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி கூறினர்.

குடும்பஉறவுச் சிக்கல்களை சுமுகமாக எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை கழகக் குடும்பத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அகத்தியா முன்வைத்தார்.

மயிலாப்பூர் கழகத் தோழர் அஸ்வின்-ஆனந்தி இணையர்களின் குழந்தைக்கு ‘ஆழி’ என்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெயர் சூட்டினார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சிவக்குமார், பிரபாகரன் மற்றும் குரோம்பேட்டை பாலா ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் தோழர் லதா பாடிய பெண்விடுதலைப் பாடல் உணர்வலைகளைத் தட்டி எழுப்பியது.

நிறைவாக, கழகப் பொதுச் செயலாளர் பேசுகையில், பெரியார் குடும்பங்களில் வாழ்க்கை நெறிமுறைகளைப் பரிந்துரையாக முன்மொழிந்தார். அனைவரும் மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றனர்.

நிகழ்வுகளைத் தோழர்கள் பேரன்பு, புகழேந்தி ஒருங்கிணைத்தனர். இறுதியில் அசைவ உணவு விருந்து ‘சுய சேவை’ முறையில் வழங்கப்பட்டது.

பெரியார் குடும்பங்களின் வாழ்க்கை நெறிகளுக்கான பரிந்துரைகளாக சென்னை மாவட்டக் கழக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்மொழிந்தார்.

1. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் சமஸ்கிருதத்தைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் ஆண், பெண் அடையாளங்களைத் தவிர்க்கலாம். உலக சிந்தனையாளர்கள் பெயர்களைத் தமிழில் இல்லை என்பதால் சூட்டாமல் இருக்க வேண்டாம்.

2. வீட்டில் வளரும் இளைய தலைமுறையினருக்கு நகைகள் அணியும் கலாச்சாரத்தைக் கைவிட முயற்சிக்க வேண்டும். இவர்கள் விரும்பும் ஆடைகளை உடுத்துவதற்குத் தடை போடக்கூடாது.

3. ஆண் பிள்ளைகளுக்கு சமையல் பயிற்சி வழங்க வேண்டும்.

4. குழந்தைகளின் முன்னெழுத்தில் (initial) தாயின் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும்.

5. இளம் தலைமுறை “வாடா, போடா, வாடி, போடி, வாங்க, போங்க, வா, போ’’ என்ற மொழிகளை பயன்படுத்தும் போது இருவரும் சமமாக அதைப் பயன்படுத்த வேண்டும். இளம் தலைமுறையின் திருமணம் குறித்த முடிவுகளைத் தோழமையுடன் அணுக வேண்டும். கட்டாயப்படுத்துதலை முற்றாக தவிர்க்க வேண்டும்.

6. பெரியார் கொள்கைகளில் இருப்பவர்கள் காது குத்துதல், மொட்டை அடித்தல், குலதெய்வ வழிபாடு, இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடாமல் இருத்தலால் இவற்றிற்கான செலவுகளை மீதமாக்கி கொள்கிறார்கள். இந்தச் செலவுகளின் ஒரு பகுதியைக் கழக வளர்ச்சிக்கும், கொள்கைகளைப் பரப்புவதற்கும் செலவிட வேண்டும் என்ற உறுதியை ஏற்க வேண்டும்.

7. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்காமல் நண்பர்களாக தோழமையோடு பழகினால் உறவு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து விடலாம். பெரியாரிய குடும்ப உறவுகள் அவசர உதவி தேவைப்படும் போதும், நெருக்கடிகள் உருவாகும் போதும் உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும். ஜாதி உறவுகள் வலிமையோடு நிற்பதே இந்த பரிமாற்ற உதவிகளில்தான்! இதற்கு மாற்றாக பெரியாரியல் குடும்ப வாழ்வியலை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

8. குடும்பங்களில் அரசியல் சமூக கருத்துக்களைப் பேச வேண்டும். சமூக வலைதளங்களைப் பெண்கள், பெண்ணுரிமை, பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு பயன்படுத்த வேண்டும்.
இந்தக் கருத்துகள் குடும்ப விழாவின் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டன.
பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...