தீண்டாமையை திணித்த ஆசிரியர்களை கைது செய்க கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை
கோவையில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் கே.கே.நாயுடு பள்ளி. அதில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர் அகிலன். இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக வகுப்பறையில் பட்டியல் சமூக மாணவர்களை அழைத்த பொழுது அகிலன் தன் பெயரைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் பட்டியல் சமூகத்தவர் என்பதைத் தெரிந்து கொண்ட பள்ளி வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் சக மாணவர்கள் அவரை ஜாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியும் துன்புறுத்தியும் தனிமைப்படுத்தியும் ஜாதிய வன்கொடுமை செய்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர் என்று அறிகிறோம்.
மேலும் பட்டியல் சமூகத்து மாணவர்களை மாட்டுக்கறி தின்பவர்கள் என்று சக மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் விஜயகுமார் மாணவனை அவமானப்படுத்தி வந்திருக்கிறார். இவ்வாறு தான் ஜாதிரீதியாக வகுப்பு ஆசிரியர் மற்றும் சக மாணவர்களால் வன்கொடுமை செய்யப்படுவதைத் தலைமை ஆசிரியர் அருண்குமார் அவர்களிடம் மாணவன் அகிலன் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
ஆனாலும் இதையெல்லாம் கேட்டும் தலைமை ஆசிரியர் அருண்குமார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு சம்பந்தம் இல்லாமல் பதில்களைக் கூறி அனுப்பி விட்டதாக தன் வீட்டில் வந்து தன் பெற்றோரிடமும் சகோதரியிடமும் தெரிவித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அக்.21, 2026 புதன்கிழமை மதியம் மாணவர் அகிலன் தன் வீட்டில், தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்குக் காரணம் அவரை ஜாதி ரீதியாக வன்கொடுமை செய்த வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் இரண்டு சக மாணவர்கள், இதனை நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் அருண்குமார் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பும் ஆவார்கள்.
ஆகவே இவர்கள் அனைவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து இவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழ்நாடு அரசு விரைந்து இவ்வழக்கினை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
தீண்டாமை வன்கொடுமை இந்த அளவிற்கு பள்ளி மாணவர்களிடையே பரவி வருவது மிகவும் ஆபத்தான போக்காகும். கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களைக் குறி வைத்து இப்படியான வன்கொடுமைகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதே அவர்களின் கல்விக்கு மிகப்பெரிய ஊறு விளைவிக்கும் செயலாகும்.
இந்த மாணவரின் இறப்புக்குக் காரணமானவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை தான் இது போன்ற மனநிலையில் இருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும், தவறான வழிகாட்டுதலில் இருக்கும் மாணவர்களுக்கும் தக்க பாடமாக இருக்கும்.
மாணவரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் போராடும் மக்களுடனும், அமைப்புகளுடனும் தொடர்ந்து மாணவனுக்கான நீதி கிடைக்கும் வரை களத்தில் நிற்கும்.
பெரியார் முழக்கம் இதழ் 29102026
