சுடுகாடு செல்ல பெண்களை ஏன் அனுமதிக்கவில்லை?
பெண்கள் சுடுகாடு வரை செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் உண்டு. ‘தீட்டு’ என்ற பார்ப்பனிய கருத்தியல் ஒரு காரணம். பெண்ணின் இயற்கையான மாதவிடாயைத் தீட்டு என்று கூறி வீடு, கோயில், குடும்ப நிகழ்வுகளில் ஒதுக்கி வைத்தனர். இந்த தீண்டாமை சுடுகாடு வரை நீண்டது!
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் மாதவிடாயைக் காரணமாகக் கூறி அனுமதி மறுத்தார்கள்; பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதைத் ‘தீண்டாமை’ என்றே கூறியது.
இரண்டாவது காரணம் சொத்துரிமை. இந்து தர்மமும் சட்டங்களும் பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்தது; பிறகு சட்டம் திருத்தப்பட்டது. இந்தியாவிலேயே இதற்கு வழிகாட்டியது கலைஞர் தலைமையில் நடந்த திமுக ஆட்சி! சடலத்துக்கு கொள்ளி வைக்கும் சடங்கு ஆண்களுக்கு மட்டுமே இருந்தது. இதன் வழியாக சொத்துக்கு வாரிசு உறுதி செய்யப்பட்டது. பெண்களை சுடுகாடு வரை அனுமதித்தால் கொள்ளி வைத்து சொத்துரிமை கேட்கக்கூடும் என்ற அச்சத்தால் சுடுகாட்டுக்கு பெண்களை அனுமதிக்கவில்லை.
மூன்றாவதாக, பெண்கள் பலவீனமானவர்கள் என்று ஆணாதிக்க சமூகமும் பார்ப்பனிய சாஸ்திரங்களும் சுமத்திய அடையாளம். சுடுகாடு அச்சத்தை உருவாக்கிவிடும் என்ற ஒரு காரணம்.
நான்காவதாக, கணவன் இறந்தால் மனைவியையும் எரிக்கும் உடன்கட்டை ஏறும் இந்து மதக் கொடுமை சட்டத்தால் தடுக்கப்பட்ட பிறகு பெண்கள் சுடுகாடு வரை போவது தடுக்கப்பட்டது.
ஐந்தாவதாக, கணவன் இறந்த உடனே பெண்களுக்கு மொட்டையடித்து, வீட்டுக்குள் அடைத்ததோடு பெண் அழுவதை அபசகுணம் என்ற பார்ப்பனியக் கருத்தியல். வேதகாலத்திலோ வேதங்களிலோ கூட குழந்தைத் திருமணமும் உடன்கட்டை ஏறும் கொடூரமும் இடம்பெறவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்ப்பனர்கள் வேதத்தையே மோசடியாகத் திருத்தி இருக்கிறார்கள்.
“பெண்ணே எழு, இறந்துவிட்ட ஒருவருடன் ஏன் படுத்துக்கிடக்கிறாய்? உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உலகிற்கு வந்து, உன்னை மணந்து கொள்ள விரும்பி உன்னுடைய கரம் பற்றும் ஒரு ஆண்மகனின் மனைவியாக இரு” (ரிக்வேதம் X – 18 -8) கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை நியாயப்படுத்த புரோகிதர்கள் ரிக்வேதத்தையே திருத்தி எழுதவும் தயங்கவில்லை. ரிக்வேதத்தில் (X-18-7) பெண்கள் ஊர்வலமாக மயானத்திற்குச் செல்வதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. “விதவையாகிவிட்டதனால் எந்தத் துயரமும் இந்தப் பெண்களுக்கு வராமலிருக்கட்டும்.” இந்தச் சூத்திரத்தில் அக்ரே என்ற ஒரு வார்த்தை இருந்தது. வங்காளத்துப் புரோகிதர்கள் அதை அக்னே என்று திருத்தி உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கான பிரமாணமாக மாற்றிவிட்டனர்.
பார்ப்பன புரோகிதர்கள் என்னென்ன நீசச் செயல்கள் புரிவார்கள் என்பதற்கு ஒரு சான்றாகும். இதோ இங்கு ஒரு சிறு வார்த்தையைப் புரட்டி, பொருளையே மாற்றித் தவறாகப் பயன்படுத்தி, ஆயிரமாயிரம் பெண்களின் உயிர்ப்பலிக்குக் காரணமாக்கிவிட்டனர்.” என்று சமஸ்கிருதம் கற்றுத் தேர்ந்த ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர் (Max Muller) கூறுகிறார். இவர் பார்ப்பனர்களால் கொண்டாடப்படுபவர்.
பெரியார் முழக்கம் இதழ் 22102026
