2. அடக்குமுறைகளை எதிர்கொண்ட போராளி கொளத்தூர் மணி – பேரா.அரசு.

ஈரோட்டில் செப்-7 அன்று சீர்வாசகர் வட்டம் சார்பில் நிகழ்ந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு விருது வழங்கும் விழாவில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை; கடந்த இதழின் தொடர்ச்சி…

ஏறக்குறைய 1983 தொடக்கம் முதல் 2009 வரை உருவான ஈழப் போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான போராட்டம். அதில் தோழர் மணி அவர்களுடைய பங்களிப்பு பற்றி நிறைய பேருக்கு தெரியும். இந்தத் தொகுப்பில் ஒரு முன்னுரை மாதிரி எழுதி இருக்கிறார்கள். அதில் கடைசி வரி இப்படி முடிகிறது, ”காவல் அதிகாரி எழுதி இருக்கிற ஒரு அறிக்கையில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மணி தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அந்த அதிகாரி எழுதி இருக்கிறார். ‘இன்ட்ரஸ்டிங்’ ஆன செய்தி.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஈழத்தில் பல நண்பர்கள் உண்டு, அவர்களுடனான வாழ்க்கை அனுபவங்களும் உண்டு. அப்போதெல்லாம் தோழர் மணி செய்த தியாகங்களை அவர்கள் என்னிடம் பேசி இருக்கிறார்கள். மணி நடத்திய பயிற்சிப் பட்டறைகள், தனது நிலத்தில் அவர் நடத்திய போராளிகளுக்கான பயிற்சி போன்ற பல வரலாறுகள் உண்டு. போராளிகளுக்கான பயிற்சிப் பட்டறை தஞ்சாவூரில் சில இடங்களில் நடந்தது. பிராபகரன் அழைப்பை ஏற்று அவர் ஈழத்திற்கு சென்று திரும்பி வந்தது என்பதும் ஒரு மிக முக்கியமான வரலாறு.

2000-க்குப் பிறகு அவர் திராவிடர் கழகத்திலிருந்து அவர் அனுப்பப்படுகிறார். அது எந்த ஒரு அமைப்பிலும் தீவிரமாக நேர்மையாக வேலை செய்யக்கூடிய ஒரு மனிதர் இருந்தால் அந்த அமைப்பில் சுற்றி இருப்பவர்கள் அவரைத் தொடரவிட மாட்டார்கள். அது போன்ற வரலாற்றை எல்லாம் சந்தித்தவர்களில் நானும் ஒருவன். நாம் பேசுற பொழுது இவன் கருப்பு சட்டை போடுகிறான் என்பார்கள்; இவன் கருப்பு சட்டைக்காரன் இவன் எப்படி கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்க முடியும்பா… இப்படி நிறைய ஜோக் இருக்கின்றது.
நண்பர்களே வீரப்பன் பிரச்சனையில் அவரது பங்களிப்பு மிகமுக்கியமானது. அது ஒரு அட்வென்சரி ஸ்டோரி இல்ல அது மாறாக கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கான வாழ்க்கையோடு தொடர்புடையது. அந்த மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. வீரப்பன் அவருடைய நிலங்களை பறித்தார்கள், சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களை சிறையில் அடைத்தார்கள்.

அந்த காலங்களில் தோழர் மணி அனுபவித்த சிறைக் கொடுமைகளும் அவர் எங்கே இருக்கிறார்? அவரை உயிரோடு விடுவார்களா விடமாட்டார்களா? என்ற பதட்டமான சூழல்; அவருடைய மகள் இந்த ஆவணப்படத்தில் அதை கொஞ்சம் சொன்னார். தடா, பொடா என்று கொடுஞ்சட்டங்களையும் சந்தித்தார். பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். சார்ந்திருக்கக்கூடிய வீரப்பன் பகுதியைச் சார்ந்த மக்களுக்கான ஒரு உரிமைப் போராளியாக எப்படி செயல்பட்டிருக்கிறார். அது ஒரு ஊடகத்தில் ஒரு மிக மோசமான அட்வென்சர் கதையாக மாற்றப்பட்டிருந்தனால் அதற்குள் இருந்த மக்களுடைய வாழ்க்கை கொடுமைகள்; அவை சார்ந்த செய்திகள் தெளிவாக எழுதப்படவில்லை. காவல் அதிகாரி மிரட்டல்களை நேரடியாக எதிர்கொண்டதை இந்த ஆவணப்படத்தில் தோழர்கள் கூறினார்கள். ஆனால் அவருடைய வாழ்க்கையின் மீது எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாது. அந்த வகையில் 1966 தொடக்கம் இன்றுவரை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய சமூகப் போராளி இந்த தமிழ்ச் சமூகத்தை புரிந்து கொண்டவர். பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை நடைமுறைப்படுத்த விரும்புபவர். இதைச் சார்ந்த ஒரு பெரும் தொண்டர் கூட்டத்தோடு வாழக்கூடிய தோழர் மணி அவர்களுக்கு இந்த சீர் வழங்கிய இந்த விருதை சீர் பெற்ற பெருமையாக நான் கருதுகிறேன். என்றார் போரசிரியர் வீ.அரசு.
பெரியார் முழக்கம் இதழ் 18092025

You may also like...