த.வெ.க மதவாத ஆட்சி நடத்துகிறதா?

த.வெ.க ஆட்சி மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக அரசு ஊழியர்கள், அரசு நிறுவனங்கள் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டக் கூடாது என்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அத்துடன் நிறுத்திக்கொள்ளாது ஆயுத பூஜையைக் கொண்டாட வேண்டும் என்றும், அதை எப்படிக் கொண்டாட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை வலியுறுத்துவது வெட்கக்கேடானது! கடந்த அக்.10 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை இவ்வாறு கூறுகிறது.

“அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை எளிமையாகக் கொண்டாடப்பட வேண்டும். பூசணிக்காய், தேங்காய் உடைத்து சாமி படங்களுக்கு பூ வைத்து அலுவலக வளாகத்தை அலங்கரித்து எளிமையாக நடத்தலாம்” என்று கூறுகிறது. மதச்சார்பின்மைக்கும் ஏற்கனவே தமிழகத்தில் அமுலில் உள்ள அரசாணைகளுக்கும் எதிரானது இந்த சுற்றறிக்கை. அத்துடன் தலைமைச் செயலகத்தில் தடபுடலாக பூஜைகளும் நடந்துள்ளன.

அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் 1968 ஏப்ரல் 29ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசு அலுவலகங்களில் உள்ள ஆண், பெண் கடவுள் படங்களையும் ஏனைய மதம் சார்ந்த அடையாளங்களையும் படிப்படியாக அகற்ற வேண்டும் என்று கூறுகிறது. ஒன்றிய ஆட்சியும் 1994 மே-4ம் தேதி இதேபோன்ற ஒரு அரசாணையை மாநில அரசுகளுக்கு அனுப்பியது. அரசு மற்றும் அரசுசார் அலுவலகங்களில் எந்த மதம் சார்ந்த கோயில், சர்ச் மற்றும் மசூதி வழிபாடுகளை அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு அனுப்பிய அந்த அரசாணை கூறியது. தொடர்ந்து 2005ஆம் ஆண்டு மே-28ஆம் தேதி தமிழ்நாட்டின் காவல் துறை இயக்குனர் லத்திகா சரண் காவல் நிலையத்திலோ, காவலர் குடியிருப்பிலோ, காவல் துறை வளாகத்திலோ எந்த மதச் சின்னத்துக்கும் வழிபாடுகளுக்கும் அனுமதி இல்லை என்று சுற்றறிக்கை அனுப்பினார். மீண்டும் 2013ஆம் ஆண்டு மார்ச்-13 அன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் ராமானுஜம் இதேபோன்ற ஒரு சுற்றறிக்கையை காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பினார்.

இந்த அரசாணைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களை இந்துமயமாக்கும் முயற்சிகளில் இந்த மாநில ஆட்சி துடித்துக் கொண்டிருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் காலடியில் விவசாயத் துறைக்கான நிதிநிலை அறிக்கையை முன்கூட்டியே விவசாய அமைச்சர் சமர்ப்பிக்கிறார். நிதியமைச்சர் சிலுவையைப் பிடித்துக் கொண்டு நிதிநிலை அறிக்கையைப் படிக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இத்தகைய கூத்துகள் நடப்பதில்லை.

பெரியாரைக் கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு அரசு நடவடிக்கைகளுக்கும் அரசு அமைப்புகளுக்கும் காவி அடிக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது இந்த ஆட்சி. அரசு அலுவலகங்கள் மதச்சார்பின்மையின் அடையாளங்கள். தமிழ்நாடு அரசின் இந்தச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்துக்குரியவை.
பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...