துர்கா பூஜைக்கு வந்த 19 பக்தர்களின் உயிரிழப்புக்கு யார் காரணம்?

கல்கத்தா துர்கா பூஜை கொண்டாட்டத்தில் 19 பக்தர்கள் உயிரிழந்துவிட்டார்கள். ம.பி. மாநிலம் குவாலியரில் ’சீதா மாதா’ கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில் டிரக் மோதி 15 பக்தர்கள் இறந்துவிட்டார்கள். கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே வந்த செய்திகள் இவை.

கடவுள் சக்தியை நெஞ்சில் சுமந்து தரிசனத்துக்கு வரும் பக்தர்களை கடவுள் காப்பாற்ற வேண்டாமா? கடவுளுக்கு சக்தி என்று ஒன்று இருந்தால் கடவுள் காப்பாற்றியிருக்க மாட்டாரா? என்ற பகுத்தறிவாளர்களின் கேள்விக்குப் பதில் கூறமாட்டார்கள். இந்து மதத்தைப் புண்படுத்துவதாகக் கூறி நீதிமன்றங்களுக்கு ஓடுவார்கள்; பல நீதிபதிகளும் ஆமாம்..ஆமாம் என்று தீர்ப்பு எழுதுவார்கள்.

தொடர்வண்டி விபத்து, அரசு கட்டிய பாலம் இடிந்து விபத்து என்றால் உடனே அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவார்கள். ஆனால் பக்தர்களின் விபத்துக்கு கடவுள்களைக் குற்றம் சாட்டுவது இல்லை. இப்போது கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை விபத்துக்குக் காரணம் அங்கே பதவிக்கு வந்திருக்கும் பாஜகவின் முதல்வர் சுவேந்து அதிகாரியும், அமித் ஷாவும்தான்.

மம்தா பானர்ஜி ஆட்சிக் காலத்தில் துர்கா பூஜைப் பந்தல்களை விட தனது ஆட்சியில் கூடுதலாக பந்தல்களைப் போடுவேன் என்று சவால் விட்டுக் களமிறங்கினார் முதலமைச்சர் சுவேந்த். அதனால் சிறு சிறு சந்துகளையும் விடாமல் 57,000 பந்தல்களைத் தனது கண்காணிப்பின் கீழ் போட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கல்கத்தாவுக்கு வந்து தங்கி தனது இந்துத்துவா சேவையை தீவிரப்படுத்தினார்.

குறுகிய சந்துகளில் எல்லாம் பந்தல்கள் போடப்பட்டன. உள்ளே நுழைவதற்கு குறுகலான பாதை. கிரிஷ்பார்க் பகுதியில் அமைக்கப்பட்ட பந்தலில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடி நெரிசலில் முச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் வெளியே வர முடியாமல் 19 பக்தர்கள் உயிரிழந்துவிட்டார்கள். காவல்துறை ஒழுங்குபடுத்தவில்லை. கூட்டத்தையும் ஒழுங்கு செய்யும் ஏற்பாடுகளும் இல்லை. இதுவே இந்த மரணத்திற்குக் காரணம் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

இந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்துத்துவா ஆட்சியை நடத்துகிறார்கள். இதைச் சுட்டிகாட்டினால் இந்து விரோதி என்கிறார்கள். பக்தர்களைக் காப்பாற்ற கடவுளுக்கும் சக்தியில்லை; கடவுளின் காவலர்களாக ஆட்சி நடத்தும் இந்துத்துவாதிகளுக்கும் துப்பில்லை!

பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...