மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மறைந்த மடத்துக்குளம் மோகன் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்) அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் சூன்-1, 2026 திங்கள் காலை 10 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடங்கியது.

காலை 9.30 மணிக்கு மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கங்களையும் பெரியாரின் கொள்கை முழக்கங்களையும் கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். நிகழ்விற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்களுக்கு மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் காலைச் சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர்.

தொடக்க உரையாக கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் ‘பெரியாரின் கொள்கைகளை, சுயமரியாதைக் கருத்துகளை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்கள் பட்டித்தொட்டி எல்லாம் பரப்பியதையும், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மூலம் சிறுவர்கள் முதல் முதியோர் வரை நகைச்சுவை உணர்வோடு பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிய பாங்கையும், தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு இறுதிவரை வாழ்ந்த மடத்துக்குளம் மோகன் அவர்களின் நினைவுகளையும்” மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் வீ.சிவகாமி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் முருகேசன், கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் சு.துரைசாமி நிறைவுறையாற்றினார். தெருமுனைக் கூட்டங்கள் குமரலிங்கம், கொழுமம், ருத்ரா பாளையம் பகுதியில் நடைபெற்றது. கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு, ஆகியோர் உரையாற்றினர்.

மடத்துக்குளம் மோகன் அவர்களின் மகள் அறிவுமதி தன் உரையில் “தனது தந்தையின் நினைவேந்தல் நிகழ்வை கழகம் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்துவதை நெகிழ்ச்சியோடு பதிவு செய்தார். “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்று கூறிய தந்தை பெரியாரின் கொள்கையை எடுத்துச் செல்லும் கழகத்துடன் தங்கள் குடும்பம் தொடர்ந்து இணைந்து பயணிக்கும்” என்று நன்றியுரையாற்றினார். குமரலிங்கம் பகுதியில் கழகத் தோழர்களின் பரப்புரையைப் பார்த்த வீரமணி என்ற தோழர் தனது மனைவி, தங்கை மற்றும் மகன் என குடும்பமாக தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு கழகப் பொருளாளர் துரைசாமி அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி ஆகியோர் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர். நிறைவாக திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், இராசசிங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் யாழினி நன்றி கூறினார். சிபிஎம் தோழர் க.ஈசுவரன், அய்யப்பன் ஆகியோர் தோழர்களுக்கு தேநீர் வழங்கி சிறப்பித்தார்கள்.

பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக தோழர் மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் ரூ.3,000 வழங்கினார்கள். காலை முதல் மாலை வரையிலான நிகழ்வுகளை மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

You may also like...