`தொடரட்டும் தமிழ்நாட்டில் திமுக சாதனைகள்’ தேர்தல் பரப்புரை: திருப்பூர், சென்னை,சேலம் கழகத் தோழர்கள் தீவிரம்

திருப்பூர்: 15-02-2026 அன்று கழக தலைவர், கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர், தோழர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் மேட்டூரில் நடந்த தலைமைக் குழு கூட்டத்தில், விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை நடை முறைப்படுத்துவது குறித்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 19-02-2026 வியாழன் மாலை 4 மணியளவில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் அதன் அடிப்பைடையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி மாநகர , நகர, ஒன்றியப் பகுதிகளில் “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்! திமுக அரசை உறுதி செய்வோம்!” என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 50 இடங்களில் பரப்பரை செய்வது
கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்க சந்தாவை இந்த மாத இறுதிக்குள் தலைமைக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
சென்னை: மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் பிப்-22,2026 மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகம் மயிலாப்பூரில் நடைபெற்றது. இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். கழகத் தலைமைக் குழுவில் தேர்தல் களத்தில் திமுக ஆட்சிக்கு களம் இறங்கி செயல்படுவது குறித்து “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்! என்றத் தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) சென்னை மாவட்டக் கழகத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.
சென்னை புத்தகக் காட்சியில் நிமிர்வோம் பதிப்பகம் சிறப்பாக நடைபெற கடுமையாக உழைத்த எட்வின் பிரபாகரன் அவர்களைப் பாராட்டி சால்வை அணிவித்தார். அன்பு தனசேகர் ( தலைமைக் குழு உறுப்பினர்), ம.கி எட்வின் பிரபாகரன் (மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) அருண் கோமதி (தாம்பரம் பகுதி அமைப்பாளர்) தோழர்கள் வடசென்னை தினகரன், தேன்மொழி (IT WING) புருஷோத்தமன், இரண்யா, ராஜேஷ், சூர்யா ஆகியோர் கருத்துக்கள் தெரிவித்தனர்.
நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏன் ஆதரிக்க வேண்டிய தேவை தற்போதைக்கு உருவாகி உள்ளது என்பதைப் பற்றியும், சமூக வலைதளங்களிலும் இந்த தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது பற்றியும், இந்தப் பரப்புரையில் தோழர்கள் எப்படி உரையாற்ற வேண்டும் என்றும், திமுக சாதனைகளை மட்டும் சொல்லாமல் அதை உணர்ச்சிகளுடன் மக்கள் மன்றத்தில் கடத்துவது குறித்தும் நிறைவுரையாற்றினார். கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), ராஜேஷ் (செயலாளர்) இணைந்து திருவல்லிக்கேணி பகுதி சார்பாக நடைபெற இருக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முதற்கட்டமாக ரூ.2000 சென்னை மாவட்டக் கழகத்துக்கு உமாபதி அவர்களிடம் வழங்கினார்கள். அம்பத்தூர் பகுதி அமைப்பாளராக தோழர் சதிஸ் கண்ணன் நியமிக்கப்பட்டார். தென்சென்னை நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளராக தோழர் இம்மானுவேல் துரை நியமிக்கப்பட்டார். இருவருக்கும் கழகப் பொதுச்செயலாளர் எழுதிய “திராவிட பெரியார் யாருக்கு எதிரி” நூலை வழங்கினார்.
இறந்த பிற கழகத் தோழர்கள் புருஷோத்தமன், வடசென்னை தினகரன், இராஜன் ஆகியோர் இறந்த பிறகு எவ்வித சடங்குகள் இல்லாமல் மருத்துவ பயன்பாட்டிற்கு தங்களது உடல்கள் பயன்பட வேண்டும் என்று சட்ட முறைப்படி உடற்கொடை செய்துள்ளதற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இரவு உணவுக்கான செலவுகளை தோழர் சைதை அன்பரசு வழங்கினார். தட்சணாமூர்த்தி (வடசென்னை அமைப்பாளர்), வேலு (வடசென்னை துணைத் தலைவர்), த.நா சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), செய்தியாளர் பிரசாந்த், என 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்: சேலம் கிழக்கு, மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.02.2026 திங்கள் காலை 10.00 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சூரியகுமார் (சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்) முன்னிலை வகித்தார். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்பைடையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
15.02.2026 அன்று நடைபெற்ற தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி, வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசை ஆதரித்து “தொடரட்டும் தமிழ்நாட்டின் சாதனைகள்! திமுக அரசை உறுதி செய்வோம்!” என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் பரப்பரை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான புரட்சிப் ரியார் முழக்க சந்தா சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக 500 சந்தாவினை தலைமைக் கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களின் வழியாக கழகத்தின் பரப்புரைகளை அதிகளவில் மக்களிடையே கொண்டு சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாமாங்கம் டால்மியா போர்டில் ஜவுளி பூங்கா என அறிவித்து சாயப்பட்டறைகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் மாமாங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய பாதிப்பு, குடிநீர் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே அதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதராக கழகம் செயல்படும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் தேவ பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ஜெயபிரகாஷ் ,சிந்தாமணியூர் நகரச் செயலாளர் ரவி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சேலம் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ்27022026

You may also like...