கோவையின் அடையாளமானது ‘பெரியார் அறிவுலகம்’ திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

திராவிட மாடல் ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட “பெரியார் அறிவுலகத்தை” இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார். பெரியார் பேசிய ‘இனி வரும் உலகம்’ கண்ணோட்டத்தில் அறிவியல் அரங்கமாக இது உருவாகியிருக்கிறது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பகுதிகள்:
2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவைவாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 2024 நவம்பர்-6ம் தேதி அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.

தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கிலப் புத்தகப் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத் தரத்தில் இதனை அமைத்துள்ளோம்.

ஒரு 1,25,000 நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச் சுரங்கமாக இது திகழவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி (Braille) புத்தகங்கள் மற்றும் சக்கர நாற்காலி (Wheelchair) போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரும் பயன்பெறும் வகையில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்க சக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது” என்று கூறியுள்ளார்.

இந்தப் பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்தவர் சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டடக் கலை நிபுணர் டாக்டர் பொன்னி முகுந்தன் ஆஸ்கர். திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இளங்கலை கட்டடப் பொறியியல் படிப்பை முடித்த முதல் பெண் மாணவி. ஏப்ரல் 2023-ல் திறக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் தலைமைச் செயலகத்தை வடிவமைத்த பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.

பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...