எம்.ஆர்.ராதா நாடகத்தில் ‘சம்பூக வதைக்’ காட்சி

நவராத்திரி இறுதி நாளில் தீமையின் உருவம் என்று கூறி அசுரர்களான திராவிட மாவீரர்கள் ராவணன், மேகநாதன் கும்பகர்ணன் உருவங்களை எரிக்கிறார்கள். பார்ப்பன தர்மத்தை காப்பாற்றியதே ராம ராஜ்யம். அந்த ஆட்சி நன்மையின் உருவமாம்! நடிகவேள் எம்.ஆர்.ராதா நடத்திய ராமாயணம் நாடகத்தில் பார்ப்பன தர்மத்தை காப்பாற்ற சூத்திர ‘சம்புகனை’ கொலை செய்யும் காட்சியின் உரையாடல்களை இங்கு வெளியிடுகிறோம். நாடகத்திற்கு வசனம் எழுதியவர் சுயமரியாதைச் சுடரொளி திருவாரூர் தங்கராசு.
காட்சி -24
இடம்: ராமன் தர்பார்.பாத்திரங்கள்: ராமன், லட்சமணன், பரதன், சத்ருக்கனன், வசிஷ்டர், அமைச்சர், பிரதானிகள் மற்றும் பலர்.
(திடீரென்று பெருங் கூச்சலுடன் ஏழெட்டுப் பார்ப்பனர்கள் ஓர் அய்ந்து வயது பார்ப்பனச் சிறுவனது பிணத்துடன் உள்ளே நுழைகிறார்கள். உடனே ராமன் ஆசனத்திலிருந்து எழுந்து)
ராமன்: என்ன இது கூச்சல்!
பார்ப்பனர்-1 (பா.1) : மகாப் பிரபு! அநியாயம் அக்ரமம்!
பா.2: தர்மம் அழிந்துவிட்டது பிரபு!
பா.3: எங்களுக்கெல்லாம் என்னமோ கஷ்டகாலம் பிடிச்சுண்டுடுத்து.
ராமன்: ராம ராஜ்யத்திலா பிராமணர்களுக்குக் கஷ்டம்!
பா.1: ஹே ராமா! இந்த அநீதியைப் பார்! என் குழந்தை அய்ந்து வயது பாலன் இறந்து பிணமாகக் கிடக்கிறானே, அய்யோ!
ராமன்: ஏன், யாராவது கொன்று விட்டார்களா?
பா.1: அய்யோ, அதெல்லாம் இல்லையே; ஒரு நாள் காய்ச்சல் -பாலன் போயிட்டானே!
ராமன்: என்ன செய்வது, விதி முடிந்துவிட்டது போலும்.
பா.2: என்ன! எங்களிடமுமா அதைச் சொல்லுகிறாய்? உன் ஆட்சியிலே எங்கோ அக்ரமம் நடக்கிறது. எந்தப் பாதகனோ தன் குலதர்மத்தை மீறி கொடுமை செய்கிறான்.
ராமன்: மந்திரி, நமது ராஜ்யத்தில் வர்ணாஸ்ரம முறைகளை மீறி எவனாவது ஏதாவது செய்கிறானா?
மந்திரி: இல்லை பிரபு! எல்லாம் ஒழுங்காவே நடைபெறுகிறது; மறை சொல்லும் வழிகளிலே – மறையவர்கள் மொழிகளிலே மக்கள் தவறாது ஒழுகுகிறார்கள். எவனாவது பிராமணீய தர்மத்தில் சிறிது தவறினாலும் அவன் தலை துண்டிக்கப்படுகிறது பிரபு!
பா.1: ஹே ராமா! உன் நாட்டில் இல்லாவிட்டாலும் இந்த உலகில் வேறு எங்கோ அநீதி நடைபெறவேண்டும். நம் முன்னோர்கள் வகுத்த சாஸ்திர சம்பிரதாய சட்ட திட்டங்கள் எங்கோ மீறப்படுகிறது.
பா.2: ராமா! உன் ஆட்சிக் காலத்தில் நாட்டில் என்னென்னவெல்லாம் நடை பெற்றிருக்கிறது! நீ போர்களில் ஈடுபட்டபோது, லீலா விநோதங்களில் அய்க்கியமாகி இருந்தபோது இந்த நாட்டிலே எவ்வளவு பஞ்சம் -பசி, பட்டினி, கொடுமைகள், சாவுகள் ஏற்பட்டன. இவ்வளவுக்கும் எந்த அக்ரஹாரத்திலேனும், ஒரு சிசுவாவது செத்ததுண்டா! உண்டா சொல்? இப்போது எப்படி இந்தப் பாலன் சாகலாம்? ஆகவே இப்போது என்னமோ கொடுமை நடக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
ராமன்: (வசிஷ்டரிடம்) மகரிஷே! எனக்கு ஒன்றுமே புரியவில்லை! எங்காவது தர்மம் மீறப்படுகிறதா?
வசிஷ்டர்: இல்லை ராமா!… ஆனால், ராமா! தண்டகாரண்யத்தில் ‘சம்பூகன்” என்ற சூத்திர அரசன் கடவுளைக் காணுவதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறான்…
பா.1: பார்த்தேளா பிரபு! அய்யோ சூத்திரன் தவம் செய்கிறானாமே! என்ன கொடுமை!
ராமன் : மகரிஷே! கடவுளைக் காண ஒருவன் தவம் செய்வது தவறா?
வசி: `தபஸ்’ பிராமணர்களுக்கு மட்டுமல்லவா? அதுதானே தர்மம்?
பா.1: சூத்திரன் வாயினால் நமது தூய கிரந்தங்கள் வெளிவரலாமா? ஹே ராஜன்! உன் ஆட்சியிலே பிராமணாளுக்கு இப்படி ஆபத்து வந்துட்டுதே. நீ இன்னும் பார்த்துண்டிருக்கியே?
பா.2: பிரபு! சூத்திரர்கள் நமது வேத வாசகங்களைக் காதுகளிலே கேட்டாலே பாபமென்றும், பழுக்கக் காச்சிய ஈயத்தை அந்தப் பாவாத்மாக்களின் காதுகளிலே ஊற்ற வேண்டுமென்றும் நமது ஸ்மிருதிகள் முறையிடுகின்றனவே.
பா.1: சூத்திரர்கள் வேத சாஸ்திரங்களைக் கற்றால் அவர்கள் நாக்குகளைத் துண்டிக்க வேண்டும் என்று நமது மறைகள் அறைகின்றனவே பிரபு! இந்தப் பாவி இரண்டையுமே மீறித் தவமே செய்கிறானாமே! அய்யோ!
ராமன்: மகரிஷே! சூத்திரர்கள் தவம் செய்தால் அவர்களுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டுமென்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன?
வசி: நமது ராமராஜ்ய அரசியல் சட்ட ஏடுகளைக் கொண்டு வாருங்கள்.
(ஏழெட்டுப் பேர் ஒரு பெரிய ஏட்டுச்சுவடியைத் தூக்கி வருகின்றனர்; அதைப் படித்துவிட்டு)
வசி: தண்டனை; மரண தண்டனைதான்!
பா.1: ஆம் ராமா! தூக்கு கோதண்டத்தை; துண்டித்துத்தள்ளு அவன் தலையை!
ராமன்: அந்தச் சூத்திரனைக் கொன்று விட்டால் இந்தப் பிராமணக் குழந்தை பிழைத்து விடுமா?
பா.1: தாராளமாக!
பா.2: சூத்திரன் அழிந்துவிட்டால் பிராமணாளுக்குத் தொல்லையேது பிரபு? உடனே புறப்படுங்கள்;
(எல்லோரும் புறப்பட்டுப் போகிறார்கள்)
காட்சி -25
இடம்:காடு; பாத்திரங்கள் : சம்பூகன், ராமன், மூன்று பார்ப்பனர்கள்.
(சடாமுடிதாரியாய் சர்வேஸ்வரனை நினைத்துத் தவத்திலீடுபட்டிருக்கிறான் சம்பூகன்)
சம்பூ: ‘சிவாயநம’ என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயமணுகாது. ‘ஓம் நமசிவாய…”ஓம் நமசிவாய’ ‘ஓம் நமசிவாய…’
பா: பிரபு! பார்த்தேளா அதோ சூத்திரன் தபஸ் பண்றதை?
(இப்போது ராம லட்சுமணர்களும் பார்ப்பனர்களும் அங்கு வருகிறார்கள்; அவர்களைக் கண்ட சம்பூகன் எழுந்து)
சம்பூ: அய்யன்மீர்! தாங்கள் யாரோ இங்கு வரக் காரணம்?
லட்சு: இவர் ஸ்ரீமந் ராமச்சந்திரமூர்த்தி – அயோத்தி சக்ரவர்த்தி!
சம்பூ: அப்படியா? பாக்யம்! பாக்யம்! பிரபு, எளியேன் சம்பூகன் தங்கட்கு அதிதி சத்காரம் செய்யக் காத்திருக்கிறேன்; ஏற்றருள வேண்டும்!
ராமன்: உன்னிடம் அதிதியாக இங்கு யாரும் வரவில்லை. போர் புரிய வந்திருக்கிறோம்… போர்…!
சம்பூ: போரா! புரியவில்லையே பிரபு!
பா.1: பார்த்தேளா எவ்வளவு திமிரா பேசறான்னு!
சம்பூ: பிரபு! எளியேன் என்ன பாபம் செய்தேன்?
ராமன்: நீ செய்யும் பாபக்ருத்யம் உனக்கே புரியவில்லையா?
பா.2: தபஸ் செய்கிறாயேடா தறுதலை? நீ சூத்திரப்பயல், தபஸ் செய்யலாமோ?
சம்பூ: உம்; காம, குரோத, மோக, லோப, மத, மாச்சரியங்களை விட்டுப் பரம் பொருளைக் காண முயலுவது பாபமா?
ராமன்: நீ சூத்திரன்; உன் குலத்தொழிலை விட்டுவிட்டாய். இந்நாட்டுச் சட்டப்படி அது கொடிய குற்றம், பாவம் என்பதை ஒப்புக் கொள்ளுகிறாயா?
சம்பூ: சட்டம் ! யார்….யாருக்காக எழுதி வைத்துக் கொண்டது பிரபு? பார்ப்பானையும் சூத்திரனையும் படைப்பிலேயே ஆண்டவன் உண்டாக்குகிறானா? இயற்கையின் சிருஷ்டிகளாகிய மிருகங்களைப் பாருங்கள்! நாயை எவ்வளவுதான் மாற்றினாலும் சிங்கமாக்க முடியுமா? புலியை ஆடாக மாற்ற முடியுமா? மாறுபட்ட அங்க அமைப்புகள் இயற்கைக் கூறுகள். ஆனால், மனிதர்களை வருண பேதங்காட்டி வஞ்சகர்கள் பிரித்துள்ளார்களே; பார்ப்பானுக்கும் சூத்திரனுக்கும், புலிக்கும் ஆட்டுக்கும் உள்ளதைப் போல – சிங்கத்திற்கும் சிறு நாய்க்கும் உள்ளதைப் போல ஏதேனும் அங்க மாறுபாடுகள், இயற்கை வேறுபாடுகள் இருக்கின்றதா?
பிரபு, அது கடவுள் செயல்! இது கயவர்கள் செயல்! தாங்கள் எதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள்? ஒரு கொலைகாரன், குடியன், மடையன் பார்ப்பனத்தி என்பவளின் வயிற்றிலே பிறந்துவிட்டதனால் மாத்திரம் பிராமணனாகி விட முடியுமா? ஒரு அறிஞன், உத்தமன், உயர் பண்பாளன் – சூத்திரச்சி என்று சொல்பவளின் வயிற்றிலே பிறந்து விட்டதனால் மட்டும் சூத்திரனாகிவிட முடியுமா? எல்லோரும் மனிதர்களாகவே பிறக்கிறோம். அவனவன் செய்கையால் உயர்வும் தாழ்வும் உண்டாகிறது – உண்டாக வேண்டும். இதுதானே இயற்கையின் கட்டளை; ஆண்டவன் வகுத்த சட்டம்! இதை விட்டு அயோக்கியர்கள் தங்கள் நலனுக்காக, ஆண்டவன் கட்டளைக்கே எதிராக எழுதி வைத்திருக்கும் நூல்களும் வேதங்களும் எப்படி சட்டமாக இருக்க முடியும்?
ராமன்: சூத்ரா! வாதம் பேசி உன் அபவாதத்தை மறைக்க முயலாதே ! நீ சொல்வதிலே எவ்வளவுதான் உண்மை இருந்தபோதிலும், இப்போது அமுலிலுள்ள சட்டங்களை நீ மதிக்கவில்லை; மீறி இருக்கிறாய். அதற்கான தண்டனையை நீ அடைந்தே ஆக வேண்டும்!
சம்பூ: என்னைச் சூத்திரன் என்று யார் சொல்வது? தத்வ, வேத, உபநிஷத, வியாகர்ண, புராண, இதிகாச, சாஸ்திர சம்பரதாயங்களிலே என்னோடு யார் வேண்டுமானாலும் சர்ச்சை செய்து கொள்ளலாம்!
ராமன்: அது வீண்வேலை. நீ சூத்திரன் என்று நாங்கள் சொல்கிறோம். இதோ, இந்த மறையவர்கள் தீர்மானிக்கிறார்கள் – சொல்லுகிறார்கள்! நீ வர்ண தர்மத்தை மீறிய காரியத்திலீடுபட்டதினால்தான், இவர்களது குழந்தை இறந்துவிட்டதாம்; அதனால் உன்னை எப்படியும் கொன்றே ஆகவேண்டும் – சட்டப்படி!
சம்பூ: நீதிக்கு உங்கள் ராஜ்யத்தில் இடமே இல்லை போலும்?
ராமன்: நீதி, அநீதியை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடைய தல்ல (பார்ப்பனர்களைக காட்டி) இவர்களுடையது!
சம்பூ: வஞ்சக நரிகளும், செத்த பின்பும் கொத்தும் கழுகுகளும் வாழ்கின்ற நாட்டிலே இருப்பதைவிட, எதிர்த்துத்தாக்கும் புலிகளும், பிணங்களைத் தீண்டா சிங்கங்களும் வாழும் காட்டைத் தேர்ந்தெடுத்தேன். இங்கும் உங்கள் சட்டங்கள் என்னை விடவில்லையே! பிரபு! என் உயிர் வேண்டுமென்று கேட்டால் நானே கொடுப்பேனே! இதற்கு ஏன் குற்றச்சாட்டு, சட்டப்பிரயோகம் என்கிற நாடகமெல்லாம்?
ராமன்: ராமராஜ்யத்தில் எதுவுமே சட்டத்தின் பெயரால்தான் செய்யப்படும்.
சம்பூ: அப்படியானால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஆகாதவர்கள் அத்தனை பேரையும் குறிப்பிட்ட ஒரு நாளில் கொன்றுவிட ஒரு அவசரச் சட்டமே போட்டு விடுங்களேன்…
ராமன்: அவசியமானால் அதையும் செய்யத்தான் போகிறோம்!
சம்பூ: ஆனால், உங்கள் சட்டங்களும் ராஜ்யமும் அஸ்திவாரமில்லாத கட்டடம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ராமன்: ஓஹோ! எங்கள் ராஜ்யத்தைக் கைப்பற்ற உன் கூட்டத்திற்கு ஆணவமிருந்தால் படையோடு வாயேன் இப்போதே போரிட்டு விடலாம். அதோ பார்த்தாயா என் படைகள் அணிவகுத்து நிற்பதை!
சம்பூ: உம்; என் கேள்விகளுக்கு விடை கூற முடியாவிட்டாலும் படையைக் காட்டிப் பயங்காட்டுகிறீர்களே, அது ஒன்றே போதும் உங்கள் செய்கைகளின் நேர்மையை விளக்க….
ராமன்: சூத்திரா, அதிகம் பேசாதே! அவசியமானால் ஆயுதம் தரித்துவா, நாம் இருவருமே போரிட்டு விடலாம்.
சம்பூ: கேவலம், உங்களோடு போரிட நான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் உங்கள் இதயத்திலே நீதிக்கு, அன்புக்கு, அறத்துக்குக் கொஞ்சமேனும் மதிப்பு இருந்தால் அவற்றோடு போராடுங்கள்! உங்கள் ராமராஜ்யத்தின் லட்சணத்தை, நீதியின் பெருமையை உலகமெல்லாம் அறிந்துகொள்ள இதோ சம்பூகனின் தலை நிராயுத பாணியாக நிற்கும் ஒரு நேர்மையாளனின் தலை – கடவுள் மீது அன்பு கொண்ட ஒரு பக்தனின் தலை காணிக்கையாக வைத்துள்ளேன். உம், வெட்டிக் கொள்ளுங்கள்!
(ராமன் சம்பூகனின் தலையை தனது கையிலுள்ள கொடுவாளால் ஒரே வெட்டாக வெட்டிச் சாய்க்கிறான்… ரத்தம் பீறிட்டு ஓடுகிறது…தலை ஓர் புறம் விழ உடல் துடித்து அடங்குகிறது)
(இப்போது காட்டில் உள்ள இதர மகரிஷிகளும் முனிவர்களும் ராமன் அருகில் வந்து)
ரிஷி-1: ராமா நீ நீடு வாழனும்! தர்ம விரோதியும் பாவ ஆத்துமாவும் ஆன இந்த சூத்ரனைக் கொன்று வேததர்மத்தை உத்தாரணம் பண்ணிய உன்னை எப்படிப் பாராட்டுவது என்றே எங்களுக்குப் புரியலே!
ராமன்: மகரிஷிகளே! என்னைப் பாராட்டுவது பிறகு இருக்கட்டும். நான் செய்த இந்தக் காரியம் தர்மம் சம்பந்தமானது என்று நீங்கள் கருதினால் இறந்து போன பிராமணக் குழந்தைக்கு உடனே உயிரைக் கொடுத்து அருளுங்கள்….!
ரிஷி-2. ராமா உனக்கு அந்தக் கவலையே வேண்டாம்! தர்ம நிந்தகனாகிய சம்பூகனுடைய தலை கீழே விழுந்த மறுகணமே இந்தக் குழந்தைக்கு உயிர் வந்து விட்டது! இதோ பார்!
(இப்போது பார்ப்பனச் சிறுவன் துள்ளி எழுகிறான்)
பா.1: பார்த்தேளா பிரபு! என் குழந்தை உடனே பிழைச்சுண்டான்! வாடா என் குழந்தே.
ராமன்: கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொள்கிறான், குழந்தை அவலட்சணமாக இருப்பதைப் பார்த்து, ஏளனமாக ஆகா, என்ன அழகான குழந்தை.
பா.2: இதிலேர்ந்தே, இந்தக் காரியம் பகவானுக்குப் பிரீதியானது, அப்படீன்னு தெரியுதில்லே?
ராமன்: ஆகா! அதிலென்ன சந்தேகம்!
காட்சி -25 (அ)
(இடம்: காட்டில் ஒரு பகுதி,பாத்திரங்கள் : பார்ப்பனர்களும், பையனும்)
பா.1: அடே சேஷு! நீ அப்படியே செத்துப்போன மாதிரியே மூச்சடக் கிண்டு இருந்தியேடா! என்ன சமர்த்து! என்ன சமர்த்து!
பா.2: ஓய்!அந்தச் சூத்திரன் தலை கீழே விழுந்ததும் பையன் துள்ளி எழுந்ததும் சரியா இருக்கவே, ராமனே ஆச்சரியப்பட்டுட்டார் -இல்லியாங்காணும்? இனிமே எந்தச் சூத்திரப்பயலும் நம்ப வழிக்கே வரமாட்டான்.
பா.3: நாம் இப்படி ஏதாவது அற்புதங்கள் செய்துண்டே இருந்தாதாங் காணும் அரசனும் பயப்படுவன், சூத்திரப் பசங்களும் நமக்கு இடஞ்சல் செய்யமாட்டா. நமது வேதங்கள் இதைத்தானேங்காணும் சொல்றது?
பா.1: ஆகா! அதிலென்ன சந்தேகம்!

பெரியார் முழக்கம் இதழ் 22102026

You may also like...