தேர்தல் ஆணையத்தின் கடந்தகால வரலாறு என்ன?

13 கோடி மக்களின் வாக்குரிமையைத் திருடிய தேர்தல் ஆணையத் தலைவரைக் காப்பாற்றுவதற்குக் கொடூரமான அடக்கு முறைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது ஒன்றிய ஆட்சி. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் அக்-10, ஜந்தர் மந்தரில் நடத்த இருக்கும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு 200-க்கும் அதிகமான தொடர் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இணைய சேவை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி நோக்கி வரும் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 50 புறநகர் தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டன.

எந்த ஒரு குடிமகனின் வாக்குரிமையும் பறிபோய் விடக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் எச்சரித்தார் புரட்சியாளர் அம்பேத்கர். அதே பார்வையில் தேர்தல் ஆணையமும் அரசியல் நிர்ணய சபையும் செயல்பட்டன என்பது கடந்த கால வரலாறு!

1951 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் சுகுமார் சென் அய்சிஎஸ் தலைமையில் அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அமைக்கப்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் நிர்ணய சபையின் அதிகாரிகள் குழு நாடு முழுதும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியது. அப்போது அரசியல் சட்டம் அமலுக்கு வரவில்லை; குடிமக்கள் உரிமையும் சட்டத்தின் வழியாக வழங்கப்படவில்லை. குடியுரிமை வழங்கப்படாத காலத்திலேயே வாக்குரிமையை வழங்கியது அரசியல் அமைப்பு அவை.

ஆனால் இப்போது வாக்குரிமையை மட்டும் வழங்க வேண்டிய தேர்தல் ஆணையம் சட்டத்தை மீறி குடியுரிமைக் கணக்கையும் எடுத்து வாக்காளர் உரிமையைப் பறித்திருக்கிறது. அதுவும் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்த அந்தக் காலத்தில் 80 லட்சம் அகதிகள் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்ட காலகட்டம். இத்தகைய சூழலில் இந்த மக்களின் வாக்குரிமையை உறுதி செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியது அரசியல் அமைப்பு அவையும், தேர்தல் ஆணையமும்.

இப்போது நடப்பது போல் இவர்களை பட்டியலில் இருந்து நீக்கும் சூழ்ச்சி திட்டங்கள் வகுக்கப்படவில்லை. மாறாக விதிகள் தளர்த்தி பட்டியலில் இணைத்தார்கள். 1948 மார்ச் 31ஆம் தேதிக்கு முன் தொகுதியில் 180 நாட்கள் இருந்தாலே போதும்; அவர்களுக்கு வாக்குரிமை உண்டு என்று முடிவெடுக்கப்பட்டது. அகதிகளாக வந்தவர்களின் குடியிருப்புகள் நிரந்தரமாக இருக்க முடியாது என்று கவலையோடு பரிசீலித்து அவர்கள் குடியிருப்புக்கான சான்றுகள் தேவையில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. “இறுதி வரை இந்தியாவில் இருப்பேன் என்ற உறுதி மொழி வழங்கினாலே போதும்; சான்றுகள் தேவையில்லை என்று முடிவு எடுத்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1951 அக்டோபரில் நடந்த முதல் பொதுத் தேர்தல் நாடு முழுதும் நான்கு மாத காலம் நடந்தது; வாக்குப்பதிவு 17 நாட்கள் நடந்தன. மற்றொரு முக்கிய செய்தியைக் குறிப்பிட வேண்டும்; பீகார், உ.பி ம.பி, ராஜஸ்தான் போன்ற இந்தி மாநிலங்களில் பெண்களின் பெயர்களே பதிவாகவில்லை. பெண்கள் பெயர் கூறுவதற்கே மறுப்பு தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு பார்ப்பன மனுசாஸ்திர பழமைச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தார்கள்.

கணவர், தந்தை, மகன், பேரன் என்ற ஆண்கள் உறவின் அடிப்படையிலேயே வாக்காளர் பட்டியலில் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். சமூகம் அவ்வளவு பிற்போக்காக இருந்தது. 80 மில்லியன் பெண் வாக்காளர்களில் 2.8 மில்லியன் பெண் வாக்காளர்கள் இப்படி பெயர் இல்லாமல் பதிவு செய்யப்பட்டதால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

ஆனாலும் அடுத்த தேர்தலிலும் இந்த நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவலை எடுத்து இந்த பெண்களை சந்தித்து வலியுறுத்தி பெயர்களைச் சொல்ல வைக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. அதற்காக இயக்கத்தையே நடத்தி அவர்களை வாக்காளர் பட்டியலில் கொண்டு வந்து சேர்த்து 1957 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வைத்தது தேர்தல் ஆணையம் என்பது வரலாறு!

முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் இதற்கான முயற்சிகளை எடுத்ததோடு தொகுதி மறுவரையறையிலும் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஆண்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிகட்சி ஆட்சி இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கியது என்பதும் வரலாறு.

ஆனாலும் அரசியல் அமைப்பு அவை அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. முதல் பொதுத் தேர்தலில் வாக்களித்த 173 மில்லியன் வாக்காளர்களில் பெரும்பாலோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற ஒற்றுமைக் கருத்தியலில் பார்ப்பனியப் பார்வையில் பாகுபாடுகளைக் கொண்டுவந்து சம உரிமையின் நோக்கத்தைச் சிதறடித்துள்ளது மோடி, அமித்ஷா ஞானேஷ் குமார் கும்பல். ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும்; எஸ்.அய்.ஆர்-அய்த் திரும்பப் பெற வேண்டும்!

(தகவல்களுக்கு ஆதாரம்: ஆய்வாளர் ‘ராமச்சந்திர குகா’ எழுதிய “India after Ganthi”) – விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...