உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பாகுபாடுகளால் தற்கொலை அதிகரிப்பு (உச்சநீதிமன்ற ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவல்)
அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது ஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
அண்மையில் பம்பாய் அய்.அய்.டி-யில் ஒரு தலித் மாணவன் தற்கொலையைத் தொடர்ந்து ஒரு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020-21 முதல் 2024-25 வரை 23 அய்.அய்.டி-களில் 45 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 9 பேர் தலித் மாணவர்கள்; 7 பேர் பழங்குடி மாணவர்கள்; 12 பேர் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்.
2025 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்களை ஆராய பணிக்குழு அமைத்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் ஆய்வு நடத்தியது. ஆய்வின் முதல் கட்ட அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் சுமார் 15% பேர் கடந்த ஆறு மாதங்களில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் பங்கேற்ற மாணவர்களில் 9% பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததாக தெரிவித்துள்ளனர். 34% மாணவர்கள் தங்களை வளாகத்தில் ஒரு அன்னியராக ஒதுக்கி வைக்கப்படுவதாக உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாதி ரீதியான அவமதிப்புகள், ஜாதி அடுக்குத் தரவரிசை அடிப்படையிலான பாகுபாடுகள் தான் தற்கொலை முடிவுக்கான காரணங்கள் ஆகும் என்று பணிக்குழு தனது ஆய்வில் கூறியுள்ளது. 56 % மாணவர்கள், கடுமையான பிரச்னைகளைத் தங்கள் நிர்வாகம் நியாயமாகக் கையாளும் என்று நம்புவதாக கூறினர். 32 % பேர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான உளவியல் ஆலோசனை சேவைகளை வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். 2.43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றனர். பங்கேற்றவர்களில் சுமார் 67 % பேர் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026
