ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முறையாக தயாரிக்க கோரிக்கை
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி 03.10.2026 அன்று சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தோழர்கள் தியாகு, அய்யநாதன், திருமுருகன் காந்தி, வாலாசா வல்லவன், அன்பு தனசேகரன், விநாயகம், தபசி குமரன், ஜி. மஞ்சுளா, ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், சமந்தா, ராமன் ராஜு, மருது பாண்டியன் மற்றும் ஓ.பி.சி தொழிற்சங்கத் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும், ஒன்றிய அரசின் துரோகங்கள் குறித்தும் விரிவாகக் கருத்துகளை முன் வைத்தனர். ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு படிவத்தில் ஓபிசி பிரிவை குறிப்பதற்கு separate column இணைக்கவும், ஒவ்வொரு ஜாதிக்கும் unique caste code வழங்கக் கோரியும், விடுபட்ட ஓபிசி ஜாதிகளை இணைத்து புதிய ஜாதிப் பட்டியல் வெளியிடக் கோரியும், சமூக நீதிக் கண்ணோட்டத்தில் அதன் தேவைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் விரிவாக விளக்கிப் பேசினர்.
நிறைவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல வாரியாகவும், மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் தழுவிய அளவில் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து விரிவான அளவில் இந்தப் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பல்வேறு சமூகத் தலைவர்களும், அரசியல் இயக்கத் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு ஓபிசி சங்கத் தலைவர் இரத்தின சபாபதி தலைமை தாங்கினார்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026
