பெரியார் ஏன் நாத்திகம் பேசினார்? ராகுல் காந்தியிடம் உரையாடிய மாணவர் கழகத் தோழர் பேரன்பு

மாணவர்களின் குரல் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் அக்-10 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6.30 மணிக்கு ராகுல் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, இந்திய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்து அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராகுல் தமிழ்நாட்டில் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்தவர் பெரியார் தான் என்றார். எதையும் கேள்வி கேட்கச் சொன்னவர் பெரியார் என்று புகழாரம் சூட்டினார்.

மாணவர்களிடம் நிகழ்த்திய உரையாடலில் தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பங்கேற்றார். பெரியார் கொள்கை நோக்கி எப்படி ஈர்க்கப்பட்டேன் என்பதை ராகுலிடம் விளக்கினார். பெரியார் பேசிய கடவுள் மறுப்புக் கொள்கையானது ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்புக்கானது என்று விளக்கினார். அப்போது இதுகுறித்து பெரியார் மோடிக்கு என்ன செய்தியைக் கூறியிருப்பார் என்று ராகுல் கேட்டதற்கு பேரன்பு கீழ்கண்ட பதிலை அளித்தார்.
‘‘இந்த உலகத்தில் உயர்ந்த கொள்கையாக மதம், மொழி, ஜாதி நிச்சயமாக இருக்காது. மனிதம் தான் இந்த உலகத்திலே மிக உயர்ந்த கொள்கை. அதனால் நீங்கள் கடைபிடிக்கக் கூடிய மதத்தை, ஜாதிய ஆணாதிக்க -த்தனத்தை விட்டு மனிதத்தைப் பேசத் தொடங்குங்கள் என்று அவரது தலையிலேயே குட்டி சொல்லி இருப்பார்’’ என்றார். பேரன்பை ராகுல்காந்தி உங்களின் பதில் எனக்கு பிடித்திருக்கிறது என்று பாராட்டினார். ராகுல்காந்தி தனது முகநூல் பக்கத்தில் இந்த காணொலிகளை பதிவிட்டுள்ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...