குமாராபாளையம் கூட்டத்தில் கொளத்தூர்மணி உரை பெரியார் போராட்டங்களில் மனிதநேயம்

நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் 27.09.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி அளவில் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் குமாரபாளையம் மனிதநேய கலைக் குழுவின் சார்பில் வீதி நாடகமும் கிராமிய பாடல்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குமாரபாளையம் மாதுராசு பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி, மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் நகரத் தலைவர் மி.தா.தண்டபாணி வரவேற்புரையாற்றினார்.

கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தி.க நாமக்கல் மாவட்டத் தலைவர் சு.சரவணன், திமுக தேவூர் பகுதி பொறுப்பாளர் தங்கவேல் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் உரை நிகழ்த்தி; பெரியார் பிறந்தநாள் வாகனப் பேரணி மற்றும் பொதுக்கூட்ட வரவு செலவுகளை படித்தார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “சட்ட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், பிராமணாள் உணவக பெயர் அழிப்புப் போராட்டம் ஆகிய போராட்டங்களை அறிவித்து; அந்தப் போராட்டத்தைப் பெரியார் எப்படி நடத்தினார்; மனிதநேயத்தை பெரியார் எப்படிக் கடைப்பிடித்தார், தோழர்களும் மனிதநேயத்தோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தியதை’ எடுத்துரைத்தார். “கழகத் தோழர்கள் காவல்துறை தாக்க நேர்ந்தால்; நாம் எடுத்துக் கொண்டிருக்கிற பொது நோக்கத்தைக் கருத்தில் கொண்டு காவல்துறையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்” என்று பெரியார் அறிவுறுத்தியதையெல்லாம் விளக்கி சிறப்புரையாற்றினார்.

தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன் அண்ணாதுரை அவர்களின் இணையர் பரிமளம் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து உடல்நலக் குறைவாக இருந்தார். அவர்கள் இல்லத்திற்கு கழகத் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார். குமாரபாளையம் கழகத் தோழர்கள், குடும்பம் குடும்பமாக வந்து பங்கெடுத்துக் கொண்டார்கள்.

ராசிபுரம் பொறுப்பாளர் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பொறுப்பாளர் பெரியண்ணன், திருச்செங்கோடு மனோஜ், நங்கவள்ளி தோழர்கள் கிருஷ்ணன், பிரபாகரன், குருப்ப நாயக்கன்பாளையம் பூபதி, கோவை வெங்கட், திருப்பூர் முத்து, அய்யப்பன், தேவூர் சங்கர், பள்ளிபாளையம், பவானி, ஈரோடு, நங்கவள்ளி, தேவூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில், கழகத் தோழர் மாதுராசின் நண்பர் ஆத்தூர் செல்வம் மற்றும் பவானி கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில், கடந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளிலிருந்து இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாளுக்குள் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பங்கெடுத்துக் கொள்கிறவர்களின் குடும்பத்தில் ஏற்படுகிற இழப்பிற்கு குமாரபாளையம் மாவட்டக் கழகத்தின் சார்பில் இரங்கல் தெரிவிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு, பெரியார் பற்றாளர் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, தமிழ் திரையுலகில் எளிமையான காட்சிகளை படமாக்கியவரும், ஈழத் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த திரையுலகையும் திரட்டி குரல் கொடுத்த பாரதிராஜா, குமாரபாளையம் அய்.எம்.ஆர் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார் அவர்களின் தந்தையார் கந்தசாமி, குமாரபாளையம் திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேகர் அவர்களின் இணையர் அலமேலு, திமுக குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், பொதுநலக் கூட்டமைப்பின் சுந்தரம் காலனி பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் செந்தில்குமார், குமாரபாளையம் டி.கே.கைலாசம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பெரியார் முழக்கம் இதழ் 15102026

You may also like...